BB Tamil 8: கூத்துப்பட்டறை பயிற்சி முதல் உளவியல் ஆலோசகர் வரை - சாஷோ ‘பிக் பாஸ்’ ஆன கதை
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண், ஜாக்குலின் உள்ளிட்ட 8 பேர் இப்போது களத்தில் இருக்கிறார்கள். யாருக்கு டைட்டில் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
இந்நிலையில் பிக் பாஸ் எல்லா சீசன்களிலுமே ரசிகர்களுக்குப் போட்டியாளர்களைக் கடந்து ரொம்பவே பிடித்த ஒருவர் என்றால் அது ‘பிக் பாஸ்’தான். ’கவர்ந்திழுக்கும் அந்தக் காந்தக்குரல் யாருடையதாக இருக்கும்’ என ஒவ்வொரு சீசனிலுமே புதிய பார்வையாளர்கள் அவரைத் தேடுவர். தொடர்ந்து பார்ப்பவர்கள் இவரை எதிர்பார்த்திருப்பர்.
தமிழ் பிக் பாஸைப் பொறுத்தவரை முதல் சீசனில் இருந்து இப்போது வரை பிக் பாஸாக வருவது சாஷோ என அழைக்கப்படும் சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என்பவர்தான் என்கிற தகவலை முனனரே ‘ஆனந்த விகடன்’ இதழில் எக்ஸ்க்ளூசிவாகச் சொல்லியிருந்தோம்.தற்போது, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களில் ஒருவராக இருக்கும் சாஷோ குறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களில் ஒருவராக இருக்கும் சாஷோ குறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக சாஷோவை நன்கு அறிந்த சிலரிடம் பேசிய போது,
‘’பூர்வீகம் தமிழ்நாடுன்னாலும் அவரது குடும்பம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே மும்பையில் செட்டிலாகியிடுச்சு. ‘பிக் பாஸ்’ தமிழ் சீசன் தொடங்குறப்ப சென்னை வர்றவர், நிகழ்ச்சி முடிஞ்சா மும்பை திரும்பிடுவார்.
பெட்ரோலுடன் மண்ணெண்னெய் கலப்பதைத் தட்டிக் கேட்டதுக்காக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னாடி உத்திரப்பிரதேசத்துல ஆயில் மாபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் மஞ்சுநாத்தின் கதை பாலிவுட்டில் படமான போது அதுல அறிமுகமானார் சாஷோ. அந்தப் படத்துக்கு சிறந்த நடிகர் அவார்டும் அவருக்குக் கிடைச்சது. தொடர்ந்து மேலும் சில படங்கள்லயும் நடிச்சார்.
நடிப்புக்கு விருது வாங்கின பிறகும் கூட தன்னை நல்லா செதுக்கிக்கணும்னு சென்னை கூத்துப்பட்டறையில் வந்து கொஞ்ச நாள் நடிப்பு கத்துகிட்டார்.
நடிப்பு தவிர நல்லா பாடவும் செய்வார். 2017 ல் தமிழ் பிக்பாஸ் ஆரம்பிச்சப்ப பல குரல்கள் ஆடிசன் செய்யப்பட்டு கடைசியில் இவர் குரல் டிக் ஆனதாகச் சொல்றாங்க.
அப்ப இருந்து நிகழ்ச்சிக்கு நல்லா செட் ஆகிட்டதால தொடர்ந்து இவரே வாய்ஸ் கொடுத்துட்டு வர்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அந்தக் குரல் ரொம்பவே ஸ்பெஷல் என்பதால் எங்கயும் குறிப்பா மீடியாக்கள்ல முகம் காட்டக்கூடாதுங்கிறது இவருக்குச் சொல்லப்பட்டிருக்காம். அதனாலயே இவர் யாருக்கும் எங்கயும் பேட்டி தர்றதில்லை’’ என்கின்றனர் அவர்கள்.
நடிகர், குரல் கலைஞர், பாடகர் என்ற இவற்றைக் கடந்து உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறாராம். அதற்கான படிப்பும் படித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.