BB Tamil 8 Day 69: மீண்டும் மீண்டும் கண்கலங்கிய பவித்ரா, உரையாடலில் மல்லுக்கட்டிய விசேவும் அருணும்!
லேபர் என்கிற Term சரியா தவறா என்று அருணிற்கும் விஜய் சேதுபதிக்கும் நடந்த விவாதம் சற்று நீளமாகவும் இழுவையாகவும் சென்றாலும் அது முக்கியமானது என்று நினைக்கிறேன்.
ஒரு விஷயத்தில் தான் கன்வின்ஸ் ஆகாத வரைக்கும் அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது ஒருவகையான நேர்மை. தன் தரப்பு தவறு என்று தெரிந்தும் ஏற்காமல் இருப்பது விதாண்டாவாதம். விஜய்சேதுபதி போன்ற அதிகாரத்திடம் சட்டென்று சரணடையாமல் அருண் மல்லுக்கட்டியது நன்று.
இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியின் பொறுமையையும் பாராட்ட வேண்டும். வழக்கமாக, ‘உக்காந்துடுங்க’ என்று பொறுமையின்மையைக் காட்டி விடும் விஜய் சேதுபதி, இந்த உரையாடலில் எதிர் தரப்பிற்கு புரிகிற வரையில் பொறுமையாக பேசியது நன்று.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 69
“ஆரம்பத்திலேயே ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்” என்கிற சஸ்பென்ஸூடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் விசே. யெஸ்.. கிம்மிக்ஸ்ஸாக இருந்தாலும் இது போன்ற திருப்பங்களை உருவாக்கினால்தான் வீக்கெண்ட் எபிசோடுகள் சுவாரசியமாக மாறும்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ‘இந்த வீட்டை விட்டுப் போனால் போதும்’ என்கிற மனநிலைக்கு சத்யா வந்து விட்டார். பல நாட்கள் அந்த மனநிலையில்தான் இருக்கிறார். இப்போது அது உச்சத்திற்கு வந்து விட்டது. வெளியே செல்லப் போவதை அவரது உள்ளுணர்வு சொல்லிற்றா அல்லது ‘ஓஹோ.. அப்படியா கதை… உங்களுக்கு அவ்வளவு சிரமம் வேணாம். நாங்களே அனுப்பிடறோம்’ என்று சத்யா புலம்பியதைப் பார்த்து பிக் பாஸ் டீமாக டபுள் எவிக்ஷனை பிளான் செய்து விட்டார்களா என்று தெரியவில்லை.
‘நம்மள மாதிரி பொய்யா நடிக்கத் தெரியாதவங்களுக்கு இது செட் ஆகாது’ என்று ரஞ்சித்தும் இணைந்து வருந்திக் கொண்டிருந்தார். தன்னை அறிந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற மாட்டார்கள். “சத்யா இந்த ஆட்டத்திற்குப் பொருத்தமானவர் அல்ல. Good soul. ஜெப்ரி என்னென்னமோ பண்ணிட்டு திரும்பி வந்தாலும் ஒரு கேள்வியும் கேக்காம அணைச்சிக்கற மனுஷன்” என்று சத்யாவைப் பற்றி முத்து மனமுருகிச் சொன்னதும் ஒரு தற்செயல் அறிகுறி மாதிரியே தெரிந்தது.
ரயான் யோசிப்பதில் ஃபாஸ்ட்டாக இருக்கிறார். “பணப்பெட்டி வந்தா எடுத்துடுவியா?” என்று இப்போதே அவர் சவுந்தர்யாவிடம் கேட்க “எடுக்க மாட்டேன். எடுக்கற மாதிரி நடிப்பேன்” என்று ஸ்மார்ட்டாக பதிலளித்தார் சவுண்டு. “இந்த முறை மட்டும் மக்கள் காப்பாத்திட்டா, இனி இறங்கி விளையாடுவேன்” என்று சபதம் போட்டுக் கொண்டிரு்நதார் தர்ஷிகா. (டூ லேட் மேடம். உங்க லவ் டிராக் உங்களை கீழே தள்ளிடுச்சு!.. யெஸ்.. இந்த வாரத்தின் இன்னொரு எவிக்ஷன் - தர்ஷிகா).
‘புரட்சி செல்லங்களைப் பார்க்கலாமா?’ என்றபடி வீட்டுக்குள் நுழைந்த விசே, “பிக் பாஸிற்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி. விடுதலை படத்தோட புரமோஷன் மாதிரி இந்த வாரத்தை ஆக்கிட்டீங்க” என்றார். இதற்காக அவர் தீபக்கிற்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பிறகு அதை ஊதி வளர்த்த அருணிற்கு டைட்டில் கார்டிலேயே நன்றி போடலாம்.
ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய விசே
“ஓகே.. ஆரம்பத்தையே அதிரடியா செய்யலாமா.. ‘இந்த அனுபவம் போதும்’ன்னு ஒருத்தர் சொல்லிட்டு இருக்கார். அவருக்கான பாஸ் கொண்டு வந்திருக்கேன்” என்ற விசே, சரக்கென்று கார்டை உருவி மடக்கென்று ‘சத்யா’வின் பெயரைக் காட்ட, வழக்கம் போல் அசட்டுத்தனமான சிரிப்போடு எழுந்தார் சத்யா. மற்றவர்களும் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை. ‘எப்பவோ டிஸ்சார்ஜ் ஆகி இருக்க வேண்டிய கேஸ்’ என்கிற மாதிரி இருந்தார்கள். ரஞ்சித்தும் ஜெஃப்ரியும் மட்டும் ஃபீல் ஆகி அழுதார்கள். மேடைக்கு வந்த சத்யா “போதும்… வெளிய போய் நடிக்கணும்ன்ற ஆசை வந்துடுச்சு” என்று சொல்ல “இந்த வாய்ப்பு அத்தனை எளிதில் கிடைக்காது. இந்த நொடியை அனுபவிச்சு வாழணும்” என்று விசே சொல்லியது சிறப்பான அட்வைஸ்.
கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு வராமல், பிக் பாஸ் தரும் மைலேஜை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலர் வருகிறார்கள். உள்ளே செல்வதற்கு முன்னால் ‘இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க” என்று பன்ச் வசனம் எல்லாம் பேசி விட்டுப் போகிறார்கள். ஆனால் உள்ளே அப்படி செய்வதில்லை. பிக் பாஸ் தரும் மைலேஜ் என்பது இருமுனை கத்தி மாதிரி. துப்பாக்கி பின்பக்கமாகவும் சுடும்.
சத்யாவை வழியனுப்பி விட்டு, பிரேக் முடிந்து வந்த விசே, ‘டாப் 8 பாட்டம் 7-ன்னு ஒண்ணு பண்ணீங்கள்ல.. அந்த ஆர்டர்ல உக்காருங்க.. டாப் 8க்கு தகுதியில்லைன்னு யாரை நெனக்கறீங்க.. இப்ப சொல்லுங்க” என்று பாட்டம் 7 அணியை நோக்கி கேட்டு முதலில் பவித்ராவை எழுப்பினார். ‘மாஸ்டர் ஊத்தப்பம் காமெடி’ மாதிரி ‘விஷால் -சவுந்தர்யாவிற்கு தகுதியில்லை’ என்று சுருக்கமாக பேசி விட்டு பவித்ரா அமர “ஏம்மா. வீட்டுக்குள்ள பேச விட மாட்றாங்கன்னு புலம்பறீங்க. அதுக்குத்தான் முதல்ல உங்களைக் கூப்பிட்டேன்.. இங்கயும் பேச மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று விசே காட்டமாக கேட்க, கண்கலங்கத் துவங்கிய பவித்ராவை ‘சரி உக்காருங்க” என்று அமர வைத்தார் விசே. இந்த டாஸ்க்கின் போது முத்து செய்த ஆக்கிரமிப்பு பற்றி வீட்டிற்குள் புலம்பியதை பவித்ரா இப்போது சொல்லியிருக்கலாம். பேச வேண்டிய நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்துவதில் மஞ்சரியெல்லாம் கில்லி. அதைப் பார்த்தாவது பவித்ரா கற்றுக் கொள்ளலாம்.
அருணிடம் வேண்டுமென்றே ஒரண்டை இழுக்கிறாரா விசே?
‘அதென்னமோ தெரியலைடா.. உன்னைப் பார்த்தாலே அடிக்கணும்னு தோணுது’ என்று செந்திலிடம் கவுண்டமணி சொல்வார். அது போல சிலரிடம் எக்ஸ்ட்ரா ஒரண்டை இழுக்க வேண்டுமென்று விசேவிற்கு தோன்றி விடும் போல. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அருண். ‘சவுந்தர்யா மற்றும் தர்ஷிகா’வின் பெயரைச் சொலலி விட்டு அமர்ந்த அருணை மீண்டும் எழுப்பிய விசே “ஏன்.. உங்களுக்கு வேணாம்ன்னு சொல்லிட்டீங்க” என்று போட்டு வாங்க “அதாகப்பட்டது சார்.. வெளில இருக்கறவங்கதான் நம்மளை தீர்மானிக்கணும்.. மேட்ச் பாதில இருக்கும் போது எப்படி ரிசல்ட் சொல்றது?” என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு அருண் வியாக்கியானம் தர “ஏம்ப்பா.. அப்ப டாஸ்க்கு தர பிக் பாஸ் என்ன முட்டாளா.. . நீ புத்திசாலி.. அதானே?” என்கிற மாதிரி விசே கடுகடுக்க, இன்னொரு பதிலைச் சொன்னார் அருண். ‘இதை மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல.. சுத்த விடாதீங்க.. உக்காருங்க” என்றதும் அருணிண் முகம் தொங்கியது.
அவ்வப்போது போட்டியாளர்களுக்குள் ஏதாவது ஒரண்டையை இழுத்தால்தான் பிக் பாஸ் வண்டி ஓடும். அதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமே. அதை விட்டு ‘மேட்ச் பாதில இருக்கு’ என்று அருண் சொன்னது பொருத்தமற்ற பதில்.
அடுத்ததாக ராணவ்வை எழுப்பிய விசே “யாராவது இப்படி சொல்லி பார்த்திருக்கிங்கீளா. இங்க அறிவா பேசறதுக்கு சிலர் இருக்கலாம். ஆனா குழப்பறதுக்கு நான் இருக்கேன்னு சொல்றார்ல.. அதான் நம்ம ராணவ் ஸ்பெஷல்” என்று சொல்ல, அதைக் கேட்டு ராணவ் சங்கடத்துடன் சிரிக்க “அய்யோ.. உங்களைப் பாராட்டறேன் சார்.. சும்மா இருக்கறவங்க மத்தியில எதையாவது செய்யணும்னு இருக்கீங்கள்ல?” என்று உண்மையாகவே பாராட்டினார் விசே. ‘தகுதியில்லை’ கேட்டகிரியில் ஜெப்ரியின் பெயரைச் சொன்ன ராணவ், ‘எல்லாமே அவருக்கு ஈஸியா கிடைச்சுடுது. கப்பைக் கூட தூக்கிக் கொடுத்துடுவாங்க போல” என்று NFP சர்ச்சை பற்றிய முதல் விதையை விசாரணை நாளில் தூவியது ராணவ்தான்.
பவித்ராவை மீண்டும் வம்படியாக எழுப்பினார் விசே. இந்த முறை பவித்ரா சற்று எக்ஸ்ட்ரா வார்த்தைகளைப் போட்டு உண்மையைப் பேச கைத்தட்டல் வந்தது. ‘பார்த்தீங்களா… முன்னாடி இந்த கிளாப்ஸ் வந்துச்சா.. அதுக்குத்தான் பேசுங்கன்னு சொன்னேன்.. உங்களுக்கும் எனக்கும் என்ன வாய்க்கா தகராறா?” என்று கேட்க அதற்கும் கண்கலங்கினார் பவித்ரா. (ஒருவேளை ஆனந்தக் கண்ணீரோ?!)
வீக்லி டாஸ்க்கில் சிறப்பான மேனேஜர் யார்? - போட்டு வாங்கிய விசே
அடுத்த தலைப்பு. கமலின் பாணியில் முதலில் தூண்டிலை நன்றாக வீசினார் விசே. அந்த டெக்னிக் சரியாக வேலை செய்தது. “இந்த டாஸ்க்கில் சிறந்த மேனேஜர் யார்?” என்று கேட்ட போது தீபக், மஞ்சரி ஆகிய இரண்டு பெயர்கள் மட்டும் பெரும்பான்மையாக வந்தன. அருணின் பெயரை சொன்னவர் விஷால் மட்டுமே. அது குளறுபடியான சாட்சியம் என்பது நிரூபிக்கப்பட்டவுடன் மாற்றி தீபக்கின் பெயரைச் சொன்னார். ஆக ஜெப்ரியின் பெயரை யாருமே சொல்லவி்ல்லை. சொல்லவும் முடியாது.
ஆனால் அருண் மட்டும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுவார். அவரால் மட்டுமே இது முடியும். “மெஜாரிட்டி பார்த்து கொடுத்தோம். ராணவ்வின் கையை மஞ்சரி தட்டிய விஷயம் தொடர்பான பஞ்சாயத்தின் போது ஜெப்ரி பேசியதால்தான் அந்தப் பிரச்சினை ஓய்ந்தது” என்றார் அருண். தொழிலாளி டாஸ்க்கில் ஜெப்ரி பேசியது அந்த ஒரேயொரு முறைதான். ஒரு மார்க் வாங்கியதற்காக எழுபது மார்க் வாங்கியவர்களை பின்னால் தள்ளுவது முறையா? “நான் ஸாரி கேட்டவுடன் பிரச்சினை முடிஞ்சிடு்ச்சு” என்று மஞ்சரி வலுவாக சாட்சியம் சொல்ல, அருணின் அந்தக் காரணமும் சரியல்ல என்று நிரூபணமானது.
ஒரு முடிவை அப்போதைய மனநிலையிலோ அல்லது திட்டமிட்டோ செய்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று நிதானமான மனநிலையில் உணரும் போது தயங்காமல் ஒப்புக் கொள்வது துணிச்சல் மட்டுமல்ல, அதுதான் நேர்மையும் கூட. அப்போதும் ஒப்புக் கொள்ள ஈகோ இடம் கொடுக்காமல் விதாண்டாவாதம் செய்து கொண்டே போனால் அவரின் மீது எரிச்சல் உருவாவதோடு, அந்த நபரின் மீதான நம்பகத்தன்மையும் அகன்று விடும். அருணிற்கு நடந்து கொண்டிருப்பது இதுதான்.
ஆக NFP ஜெப்ரிக்கு தரப்பட்டது சரியான முடிவல்ல என்பது வாதப் பிரதிவாதங்களின் மூலமாக தெளிவாகவே நிரூபிக்கப்பட்டது. இதற்கு மஞ்சரியின் வாதங்கள் பொிதும் துணைபுரிந்தன. நல்லவேளையாக சத்யா முன்பே வெளியேறி விட்டார். இல்லையென்றால் இந்த ரோஸ்டில் அவரும் சிக்கி சின்னாபின்னமாகியிருப்பார். என்னதான் அருண் சப்பைக்கட்டு கட்டினாலும், தனக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்து ஜெப்ரிக்கே குற்றவுணர்வு இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாக தலையைக் குனிந்தபடி இருந்தார்.
‘நம்மைச் சுத்தியும் அரசியல் நடக்கும். நம்மை வெச்சும் அரசியல் நடக்கும்’ - விசேவின் அட்டகாசமான பன்ச்.
இந்தச் சமயத்தில் ஜெப்ரிக்கு விசே தந்த அட்வைஸ் சிறப்பானது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அனுதாபத்தைக் காட்டி அவர்களை கூட்டுக்குள் அடைத்து வைக்கும் அதிகார அரசியல் தந்திரம் என்பதை சுருக்கமாக வகுப்பெடுத்தார் ‘பெருமாள் வாத்தியார்’. (விடுதலை திரைப்படத்தின் காரெக்டர்). “உனக்கு சாஃப்ட் கார்னர் காட்டறது தவறான உதாரணம். சப்போர்ட் பண்றேன்ற பேர்ல உன்னை வீக் ஆக்கறாங்க.. இது நீ வருந்த வேண்டிய விஷயம் இல்ல. யோசிக்க வேண்டிய விஷயம். பாவம் பார்க்கறோம்ன்னு மட்டம் தட்டறாங்க. நம்மை சுத்தியும் அரசியல் நடக்கும். நம்மை வெச்சும் அரசியல் நடக்கும். நீ நல்ல ஆட்டக்காரன். இதை அப்போதே மறுத்திருக்கலாம்” என்று விசே லெக்சர் தர வாட்டமான முகத்துடன் தலையாட்டினார் ஜெப்ரி.
பிரேக் முடிந்து வந்த விசே, அடுத்து எடுத்த தலைப்பும் அருணை மையமாகக் கொண்டிருந்தது. “இந்த வீட்ல பாகுபாடு இருக்குன்னு சொன்னீங்களே. ஏன்..?” என்கிற கேள்வியை விசே ஆரம்பித்தார். “நான் அப்படி சொல்லல சார்.. தீபக் லேபர்ன்னு சொன்னவுடன் எனக்கு அப்படி ஹிட் ஆச்சு” என்று அருண் சமாளிக்க “சார்.. மனசுல ரொம்ப நாள் இருந்தாதானே இப்படியொரு வார்த்தை வெளியே வரும்? என்று விசே மடக்க “இதை என்னோட வீடா பார்க்கறேன்.. அதனால லேபர்ன்ற வார்த்தை எனக்கு நெருடலா இருந்துச்சு” என்றார் அருண்.
“அந்த வார்த்தைல என்ன சார் தப்பு.. அப்படி மனசுக்குள்ள இருந்தாதானே.. அப்படி சொல்லத் தோணும். புரியுதா. உங்களுக்கு?” என்று விசே கேட்க “இல்ல சார். அந்த வார்த்தையை தப்பா பார்க்கல. இது நம்ம வீடு” என்பதையே ரிப்பீட்டாக அருண் சொல்லிக் கொண்டிருந்தார். விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையாக இந்த உரையாடல் நான் ஸ்டாப்பாக போய்க் கொண்டிருந்தது.
அருணின் நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் விதாண்டாவாதத்தை?
அருணுக்கு, தான் சொல்லியது சரிதானே என்று அழுத்தமாக உள்ளே தோன்றியிருக்கலாம். அவர் மனது அதை ஆழமாக நம்பியிருக்கலாம். ஆனால் சில வார்த்தைகளை உடைத்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள் கிடைக்கும். இது நீளமாக வாதமாக சென்றும் முடிவு கிடைக்காததால் நான் ஒரு தர்க்கத்தின் மூலம் இதை விளக்க முயல்கிறேன். இது அருணுக்கானதல்ல. பொதுவானது.
எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் பெரும்பாலான சமயங்களில் சுயபெருமிதத்துடன் ஒரு விஷயத்தைச் சொல்வார். “நான் சாதில்லாம் பார்ககறதில்லங்க.. இப்ப.. ரோட்ல இறங்கிப் போவேன்.. கஷ்டப்படற ஒரு ஆளு இருப்பான்.. வேற சமூகத்தைச் சேர்ந்தவனா கூட இருப்பான். ‘வாப்பான்னு டீ சாப்பிடக் கூப்பிடுவேன். அவனோட சேர்ந்து சாப்பிடவும் செய்வேன்…. நாமள்லாம் மனுஷன்தானே?” என்று தன்னை ஹீரோவாக கருதிக் கொண்டு அந்த நண்பர் சொல்வார். இதைச் சொல்லும் போது அவருடைய முகத்தில் சுயப்பெருமிதம் வழிந்தபடி இருக்கும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது ‘என்னா.. மனுஷன் இவரு.. நல்லவருப்பா..” என்று தோன்றும். ஆனால் இன்னமும் சற்று ஆழமாகப் போனால், இவர் தன்னையொரு பீடத்தில் அமர்த்திக் கொண்டு இவரை விடவும் கீழே இருக்கிற வேற்றுச் சமூகங்களை வரவழைத்துக் கொண்ட கருணையுடன் பார்க்கிற பெருந்தன்மை அம்பலமாகும். இது போன்ற ஆட்களிடம் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களை வையுங்கள். தன்னிச்சையாக கொந்தளித்து விடுவார்கள்.
உண்மையிலேயே சாதி வித்தியாசம் பார்க்காதவர் என்றால் அவருக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இதைப் பெருமிதமாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். உள்ளுக்குள் ‘நான் வேறு. அவர் வேறு’ என்கிற தன்னிச்சையான உணர்வு பதிந்திருப்பவர்கள்தான் இப்படியான போலிப் பெருமிதத்தைக் காட்டுவார்கள். ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ‘அவன் உனக்குத் தம்பி.. ஆனால் இவன் உனக்கு தம்பி மாதிரி. இந்த மாதிரி ஆளுங்கதான் ரொம்ப ஆபத்து” என்றொரு வசனம் வருவதை இங்கு நினைவு கூறலாம்.
இதே லாஜிக்கை இந்த வழக்கிற்கும் பொருத்திப் பார்க்கலாம். கிச்சன் டீமிற்கு எக்ஸ்ட்ரா ஆட்கள் வேண்டும் என்பதற்காக தீபக் ஆரம்பித்த விஷயம்தான் ‘ஸ்கில்டு மற்றும் லேபர்’ என்கிற வித்தியாசம். அதுதான் யதார்த்த நடைமுறையும் கூட. லேபர் என்றால் உழைப்பு என்றுதான் பொருள். அதுவொரு பெருமிதமான அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டிய வார்த்தை. தரக்குறைவான வார்த்தையல்ல.
லேபர் என்பது பெருமிதமான அடையாளம்
மேற்கத்திய நாடுகளில் எலெக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற பணிகளைச் செய்பவர்களுக்கு மதிப்பு அதிகம். அவர்களின் கட்டணமும் அதிகம். பெரும்பான்மையாக அந்தப் பணிகளை எவரும் தாழ்வாக நினைக்க மாட்டார்கள். மிகவும் ஃபுரொபஷனலாக வந்து வேலையை முடித்து விட்டுச் செய்வார்கள். ஆனால் இந்தியச் சமூகங்களில் செய்யும் பணியையும் தனிநபரையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் பழக்கம் இருக்கிறது. இது மேலான பணி, இது தாழ்வான பணி என்கிற எண்ணம் தன்னிச்சையாக பதிந்திருக்கிறது. சாதியும் இதனுள் கலந்திருக்கிறது. அதனால்தான் ‘லேபர்’ என்கிற வார்த்தை அருணிற்கு டிரிக்கரை ஏற்படுத்தியிருக்கலாம்.
முத்து விளக்கம் சொன்னது போல, அருணால் தன் தரப்பு பலவீனமாவதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஈகோ இடம் தரவில்லை. எனவே அதை விதாண்டாவாதமாக எடுத்துச் சென்று வாரம் முழுக்கவும் தொடர்ந்தார். இது அவரது ஸ்ட்ராட்டஜியாகவும் இருக்கலாம். அருண் விளையாடும் பாணியைப் பார்த்தால் கடந்த சீசனில் அர்ச்சனா ஆடிய பாணியின் சாயல் தெரிகிறது. ஒட்டுமொத்த வீட்டையும் எதிர்த்து நின்றால் தனியான கவனம் கிடைக்கும் என்கிற உபதேசம் அவருக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் அந்த உத்தி இயல்பாகப் பயணிக்காமல் செயற்கையாகத் துருத்திக் கொண்டு தெரிகிறது.
“லேபருக்கு இவ்வளவு டீ போதும்” என்று தீபக் சொன்னதை விசே கண்டித்தார். ஆனால் தீபக்கிடம் வியாக்கியானம் செய்யவில்லை. ஏனெனில் தீபக் ‘நான் சொன்னது சரி’ என்று மல்லுக்கட்டவில்லை. அந்த ஸ்டேட்மெண்ட்டில் தவறு இருப்பது வெளிப்படை. அருணை பதிலுக்குச் சீண்டுவதற்காக அந்தச் சமயத்தில் தீபக் விட்ட வார்த்தை இது. அதில் தப்பு இருப்பதால் தீபக் அமைதியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
“அவர் கதைல அவர்தான் ஹீரோவா இருக்கணும்ன்னு நெனப்பாரு” என்று அருணைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக சொன்னார் சவுந்தர்யா. “தன் தரப்பின் வலிமைக்காக அருண் ஒரு முடிவு எடுத்துட்டாரு. அதை ஒட்டுமொத்த வீடும் எதிர்ததாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்” என்றார் முத்து. “தீபக் இயல்பாக சொன்ன உதாரணத்தை, அருண் திரித்து வேறு தளத்திற்கு கொண்டு சென்றார்” என்று சாட்சியம் சொன்னார் மஞ்சரி. ஆக அருண் உணர்ந்த பிரிவினைவாததத்தை வீட்டிலுள்ள மற்றவர்கள் உணரவில்லை. தீபக் சொன்னதின் நோக்கம் அவர்களுக்குப் புரிந்து விட்டது.
உரையாடலில் மல்லுக்கட்டிய விசேவும் அருணும்
“அதாவது சகோதரா.. சில வேலைகளை உடனே பண்ணிடலாம்.. ஆனா சில வேலைகளை டைம் எடுத்து கத்துக்கிட்டுதான் பண்ண முடியும். உடனே பண்ணிட முடியாது” என்று சுத்தம் செய்யும் பணி மற்றும் சமையல் பணியை தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து விசே விளக்கியும் அருணால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. விசே விடைபெற்றுச் சென்றாலும் கூட மனஉளைச்சல் தாங்காமல் அதைப் பற்றியே அருண் பேசிக் கொண்டிருக்க அவருக்குப் புரிய வைப்பதற்காக விஷாலும் மல்லுக்கட்டினார்.
இதுவரை எந்தவொரு சீசனிலும் நடக்காத விஷயம் இப்போது நடந்தது. விசே விடைபெற்றுச் செல்லவில்லை. உள்ளேயிருந்து அருணின் அனத்தலைப் பார்த்திருக்கிறார். “லேபருக்கு இவ்ள டீ போதும்..ன்னு தீபக் சொன்னது மட்டும் என்ன.. எனக்கு புரியவேயில்லை. இந்த கேம் போதும்ன்னு தோணுது” என்றெல்லாம் அருண் புலம்ப, அதற்கு விளக்கம் சொல்வதற்காக ‘அசரிரீ’ குரலாக விசே உள்ளே வந்தார். அப்போதும் இந்த விவாதம் ரிப்பீட் மோடில் சென்று கொண்டிருந்தது. “ஓகே.. நீங்களே யோசிங்க” என்று ஒரு கட்டத்தில் விசே சென்று விட்டார்.
இதுவே மற்றவர்கள் என்றால் விசேவின் பொஷிஷன் கருதி சரண் அடைந்திருப்பார்கள். ஆனால் இப்போதும் தன் தரப்பி்ல் உறுதியாக நிற்கும் அருணின் நேர்மையை - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் - பாராட்ட வேண்டும். புரிந்தது போல் மண்டையாட்டுவதை விடவும் ‘இல்லைங்க.. எனக்குப் புரியல..’ என்று கன்வின்ஸ் ஆகிற வரைக்கும் சொல்வதும் ஒருவகையான நேர்மைதான். ஆனால் நேர்மை என்கிற லேபிளில் விதாண்டாவாதத்தை சகிக்க முடியாது.
ஒரு கேப்டனாக ரஞ்சித் செயலற்ற தன்மையுடன் இருந்தது, ‘பாயும் புலி’ சவுந்தர்யா செய்த அட்டகாசம், இன்னொரு எவிக்ஷன் போன்ற விசாரணை காட்சிகளின் மூலம் அடுத்த எபிசோடிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.