Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
BB Tamil 8 Day 93: `மிட் வீக் எவிக்சன்' அராஜகம் செய்த அர்னவ் - போட்டியாளர்களுக்கு நேர்ந்த சங்கடம்
இந்த எபிசோட், ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ மோடில் இருந்தது. வெளியில் இருந்து வந்தவர்கள், பழைய காயங்களை மீண்டும் கிளறி ரத்தத்தின் ருசியைப் பார்த்தார்கள்.
இதை கரிசனத்தோடும் மிருதுவாகவும் செய்தவர்கள் சிலர். மிகையான வன்மத்தோடு செய்தவர் அர்னவ் மட்டுமே.
நாம் மற்றவரைக் காயப்படுத்தும் போது அதிலொரு குரூரமான திருப்தி கிடைக்கலாம். உள்ளுக்குள் ‘ஹப்பாடா’ என்று மகிழ்ச்சியாக உணரலாம். ஆனால் அந்த வன்மத்தில் வெளிப்படும் சொற்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் ‘நாம் எத்தனை கேவலமான நபர்’ என்பதை நாமே அம்பலமாகிக் கொள்கிறோம் என்பதையும் கூடவே உணர வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 93
வர்ஷினியும் சுனிதாவும் காலையிலேயே வீட்டிற்குள் நுழைந்தார்கள். பல் துலக்காத முகங்களை கட்டியணைக்க நேர்வது துரதிர்ஷ்டம். ‘Pan India-வா?’ என்று வந்தவுடனே முத்துவை நோக்கி ஒரு பவுண்டரியை வீசிய சுனிதா, வர்ஷினியின் உதவியுடன் தமிழில் எழுதப்பட்ட ‘போர்டு வாக்கியங்களை’ வாசித்து விட்டு வீட்டு வாசலிலேயே வைத்து தன் அலப்பறையை ஆரம்பித்தார்.
“ஜாக்குலின்.. வந்தப்ப ‘நான் தனியா ஆடப்போறேன்’ன்னு சொன்னீங்க. ஆனா உங்களுக்குத்தான் ஒரு துணை தேவையா இருக்கு. வாரா வாரம் அந்த்த் துணை மாறிட்டே இருக்கு” என்ற சுனிதா, அடுத்து சவுந்தர்யாவை நோக்கி “வாரா வாரம் எப்படியோ சேவ் ஆயிடற.
ஆனா மக்களுக்கு உன் பங்களிப்பு என்ன? டாஸ்க் கொடுத்தாலும் செய்ய மாட்டேங்குகிற”? என்று கேட்க, வெற்றான பார்வையுடன் அதை எதிர்கொண்ட சவுந்தர்யா, “நான் பண்றது மக்களுக்குப் பிடிச்சிருக்கலாம்” என்றார். இந்தச் சமயத்தில் சுனிதா சொன்ன ஒரு வாசகம் முக்கியமானது.
“ஏன் டிபென்சிவ் மோடிற்கு போறே.. நான் கேட்டது நீ பதிலளிக்க ஒரு வாய்ப்பு. அந்த மாதிரி கோணத்துல பாரு” என்றது நல்ல கருத்து. வருபவர்கள் நிச்சயம் சீண்டும் விதமாக, காயப்படுத்தும் விதமாக, ஆராய்ச்சி செய்யும் விதமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். அதை தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், மக்களிடம் விளக்கம் சொல்லும் வாய்ப்பாக பார்த்தால் மக்களின் கோணங்கள் மாறுவதற்கு வாய்ப்புண்டு. இந்த விஷயத்தை விஷால் நன்றாக கையாண்டார்.
‘லவ் டிரையாங்கிள்’ விசாரணையில் மாட்டிய விஷால்
“என்னடா டிரையாங்கிள் டிரை பண்றியா?” என்று அடுத்தது விஷாலை கேள்விக்கணைகளால் துளைக்க ஆரம்பித்தார் சுனிதா. பிறகு அவரை அதிகம் பொதுவில் வருத்த வேண்டாம் என்று எண்ணியோ என்னமோ தனிமையில் விசாரணையை நடத்தினார். விஷாலின் லவ் டிராக் குறித்தே வந்த பலரும் விசாரித்தார்கள். அர்னவ்வின் எரிச்சலான கேள்விகள் உள்ளிட்டு அனைத்தையும் நம்பிக்கையாக எதிர்கொண்ட விஷால் ‘பிளே பாய்’ என்று சாச்சனா சொன்ன போது மட்டும் உடைந்து அழுது விட்டார்.
விஷால் விவகாரம் முந்தைய கட்டுரைகளில் ஏற்கெனவே விரிவாக பேசப்பட்டது என்றாலும் மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கொள்வோம். தர்ஷிகாவிற்கு விஷால் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதை வெளிப்படையாக அவர் முன்வைத்தார். ஆனால் விஷாலோ “எனக்கு அப்படில்லாம் ஒண்ணுமில்லை. ஆனா யாரும் இதனால காயப்படக்கூடாது. எதுவா இருந்தாலும் வெளில போய் பார்த்துக்கலாம்’ என்று தன்னுடைய மறுப்பை மையமாக வெளிப்படுத்தினார். ஆனால் அவர் செய்த தவறு என்னவென்றால், தர்ஷிகாவுடனான நெருக்கத்தை விடாமல் தொடர்ந்ததுதான். அந்த உடல்மொழி நிச்சயம் காதலர்களுக்கானது.
ஏன் அது பிரெண்ட்ஷிப்பாக மட்டுமே இருக்கலாமே? லவ் பண்ணவில்லை என்பதால் தூரத்திலேயே நிற்க வேண்டுமா? இயல்பாகவே பழகலாமே? என்கிற கேள்விகள் எழலாம். இந்தச் சந்தேகத்தின் பலனை விஷாலுக்கு அளிக்கலாம்தான். ஆனால் துரதிர்ஷ்டமாக நம் சமூகத்தின் மனோபாவம் அந்த அளவிற்கு முதிர்ச்சியடையவில்லை. அண்ணனும் தங்கையும் இணைந்து நடந்து சென்றாலே நமட்டுச் சிரிப்புடன் வம்பு பேசும் ஊர் இது. எனவே இத்தனை காமிராக்கள் வழியாக தெரியும் காட்சிகள் என்பது அவல் கூட அல்ல, லார்ஜ் சைஸ் பாப்கார்னாக தெரியும். எனவே ஊர் மெல்லவே செய்யும். மீடியா துறை அனுபவமுள்ள விஷாலுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கும். தெரிந்தும் தனது மைலேஜிற்காக அவர் செய்தார் என்றால் இது நிச்சயம் தவறுதான்.
இதே விஷயம்தான் அன்ஷிதாவிற்கும். தர்ஷிகாவைப் போல இதில் காதல் என்பது ஒரு தரப்பிலிருந்து கூட அழுத்தமாக வெளிப்படவில்லை. ஆனால் அந்த உடல்மொழியில் நட்பைத் தாண்டி ஏதோவென்றிருந்தது. அதுவே மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் விஷால். அன்ஷிதாவிற்கு வெளியில் எந்தவொரு பிரச்னை வந்தாலும் ஒரு ‘நண்பனாக’ கூட இருப்பேன் என்று விஷால் சொல்வதாகவே இதைப் புரிந்து கொள்ளலாம்.
‘கண்மணியா, கதீஜாவா? - சுனிதா கேள்வி
இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. தர்ஷிகா விஷயத்தையும் எவிக்ஷனையும் கண் எதிரிலிலேயே பார்த்த அன்ஷிதா, விஷாலுடன் ஏன் அத்தனை நெருக்கத்தை மெயின்டெயின் செய்தார்? அது நட்புதான் என்றாலும் தவறான பேச்சுகளுக்கு இடம் தரலாம் என்பதை அவர் உணரவில்லையா? இந்த விஷயத்தில் பெண்கள் கூடுதலான ‘உள்ளுணர்வு’ எச்சரிக்கை கொண்டவர்கள் ஆயிற்றே?!
எதுவாக இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது மூன்று நபர்களின் தனிப்பட்ட சமாச்சாரம். இதில் யாருக்கும் யார் மேலும் புகார் இல்லை என்றால் இது பொதுவில் ஆராயப்பட வேண்டிய விஷயமே அல்ல. சுனிதா பேசும்போது ‘உசுப்பேத்தியவன் இன்னமும் உள்ளே இருக்க, அவங்க வெளில போயிட்டாங்க.. பாதிக்கப்பட்டவங்க பொண்ணுங்கதான்’ என்று விஷால் மீது புகார் சொன்னதில் ஒரு பகுதி உண்மை மட்டுமே உள்ளது. லவ் டிராக்கில் ஏற்பட்ட பின்னடைவால் தர்ஷிகா வெளியேறினார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அன்ஷிதா எப்போதோ வெளியேறியிருக்க வேண்டியவர். அத்தனை பலவீனமாக இந்த ஆட்டத்தை ஆடினார்.
விஷாலின் செய்கைகள் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துடன் ஒப்பிடப்பட்டு ‘கண்மணியா..கதீஜாவா..?’ என்று சுனிதா குறும்பாக விசாரிக்க ‘ரெண்டுமே கண்மணிதான்’ என்று மீண்டும் பாயைப் பிறாண்ட வைத்தார் விஷால். ‘பத்தியா.. இதுக்குத்தான் சொன்னேன்’ என்று சிரித்தார் சுனிதா. “அன்ஷிதா போகும் போது யாருடைய பெயரையோ கேட்டியே.. யார் அது?” என்று நம் மைண்ட் வாய்ஸை சரியாக கேட்ச் பிடித்து கேள்வி கேட்டார் சுனிதா. சிரித்து மழுப்பினார் விஷால்.
அடுத்து உள்ளே வந்தவர் ரவி. இவர் பேசியதில் நெகட்டிவ் என்று பெரிதாக எதுவுமேயில்லை. எல்லாமே பாசிட்டிவ்தான். ஆனால் என்னவொன்று ஓவர் பாசிட்டிவ்வாக போய் பிக் பாஸே தடுத்து நிறுத்த வேண்டியதாக ஆகிவிட்டது. “நீங்க எட்டு பேருமே டிஸர்வ்ட். எவன் எது வேணா சொல்லிட்டுப் போகட்டும். இந்த சீசன்தான் பெஸ்ட்” என்றெல்லாம் ரவி சரமாரியாக அடித்து விட்டதில் போட்டியாளர்கள் புளகாங்கிதமடைந்தார்கள்.
ரவியின் ஓவர் ஸ்டேட்மென்ட் புகழாரங்கள்
என்னளவில் இதுவரை பெஸ்ட் சீசன் என்றால் அது மூன்றாம் சீசன்தான். குறும்பு, நகைச்சுவை, ரொமான்ஸ், சண்டை, விரோதம், கண்ணீர், மன்னிப்பு என்று ஒரு ஃபுல் பேக்காஜான கலவையுடன் 3-ம் சீசன் இருந்தது. அதிலும் சாண்டி குழு அடித்த ரகளையெல்லாம் இன்றைக்கும் கூட ரசித்துப் பார்க்கக்கூடிய காட்சிகள். வேறு எந்த சீசனின் காட்சிகளையாவது அப்படி ரசித்துப் பார்த்திருக்கிறோமா?
“பல வரலாறுகளை கிரியேட் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு ஒரு ஆர்கானிக் லவ் கிடைச்சிருக்கு” என்றெல்லாம் புகழ்ந்த ரவி “தீபக்குன்னு ஒரு ஹீரோ கிடைச்சிட்டார். ஃபாதர் ஆஃப் தி கிச்சன். நீங்க நடிச்ச படத்தை தயாரிக்கலைன்னாலும் நிச்சயம் டிஸ்ட்ரிப்யூட் செய்வேன்” என்று சொல்ல ஹீரோவாகி விட்ட கனவில் தீபக்கின் முகம் பெருமிதம் அடைந்தது. (கமல் மேடையிலேயே டோக்கன் அளித்து வாக்களித்த ‘ஹீரோ’ தர்ஷனின் படம் பற்றிய நினைவு வந்துபோகிறது)
“அருணு.. நான் நெனச்ச மாதிரி நீ இன்னசன்ட் கிடையாது. ஆனா ஸ்ட்ராங் பிளேயர். அடிபட்ட உடனே ஓடி வந்து உதவி செஞ்ச பத்தியா.. நீ நல்லவன்டா’ என்று சான்றிதழ் தந்த ரவி, “ரயானு.. உன் கூட விளையாட முடியலைன்னு வருத்தமா இருக்கு. சர்வைவல் கேம் ஆடற. அக்கா சீவி விட்டது சரியா வேலை செய்யுது” என்று சொல்ல சங்கடமாகப் புன்னகைத்தார் ரயான்.
‘நான் நம்பின ரெண்டு பேர் சோடை போகலை’ என்ற ரவி “பிக் பாஸ் வரலாற்றிலேயே தொடர்ச்சியா நாமினேட் ஆன ஒரே நபர் நீதான். அத்தனை எதிர்ப்புகளைச் சமாளிச்சிருக்கே. உன்னோட துணை நீதான்” என்று ஜாக்குலினைப் பாராட்ட கண் கசிந்தார் ஜாக். ‘சிண்ட்ரெல்லா ஆஃப் ஷ ஷோ’ என்கிற பட்டம் சவுந்தர்யாவிற்கு கிடைத்தது. “முத்துவே உன்னைப் பார்த்து பொறாமைப்படறாம்மா.. நீ என்னைக்கும் ரியல். யார் துணையும் தேவையில்ல. நீ தனியாவே டிராவல் ஆயிட்டிருக்க” என்று சவுண்டை மனமாரப் பாராட்டினார் ரவி. (அப்ப ஹீரோயின் சான்ஸ் நிச்சயம்!).
ரவியைத் தடுத்து நிறுத்திய பிக் பாஸ்
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ரவி புகழாரங்கள் சூட்டிக் கொண்டிருக்க பொறுக்க முடியாத பிக் பாஸ், அவரைத் தடுத்து நிறுத்தி ‘இன்ஃபர்மேஷன் போதும்’ என்று எச்சரித்தார். ‘Lady beast’ என்று பவித்ராவை வர்ணித்த ரவி, முத்துவிடம் “உன்னாலதான் மொழிக்கு பலம். பெருமை” என்றதெல்லாம் நிச்சயம் ஓவர் ஸ்டேட்மென்ட். ‘Inspiring person. விட்றாத குமரா’ என்று முத்துவை ரவி வாழ்த்தியது சிறப்பு.
பாடல் ஒலிக்க அடுத்து வந்தவர் ரியா. வாசல்படியைத் தொட்டுக் கும்பிட்டபடி தன் சிக்னேச்சர் ஸ்டைலில் வந்தார். “உங்க எல்லோரின் ஆட்டமும் பிடிச்சிருக்கு” என்று பாசிட்டிவ்வாக ஆரம்பித்த ரியா ‘your game is over’ என்கிற கார்டை பவித்ரா, அருண், விஷால் ஆகிய மூவருக்கும் அளித்தார். “நீங்க தந்த பதக்கம் உடைஞ்சிடுச்சு. ஆனா நீங்க உடையாதீங்க” என்று முத்து தந்த பதக்கத்தை திருப்பித் தந்தார்.
அடுத்து விஷாலிடம் வந்த ரியா, அதே ‘கண்மணி - கதீஜா’ மேட்டரை ஓப்பன் செய்ய அதை சமாளிக்கத் துவங்கினார் விஷால். ‘அதெப்படி ப்ரோ.. தர்ஷிகா வெளியே போனவுடனே.. அன்ஷிதா கூட நெருக்கமாகிட்டிங்க. நீங்க பழகினது பிரெண்டு மாதிரி தெரியல. தர்ஷிகா கேமை கெடுத்த மாதிரி ஆயிடுச்சு” என்று ரியா கேட்டதெல்லாம் சரியான கேள்விகள்.
“எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணு. ஆனா சோர்ந்துடாத. இவங்களுக்கு விளக்கம் கொடுத்துட்டே இருக்கறது வேஸ்ட்” என்று சரியான நண்பனாக தனிமையில் அருண் ஆலோசனை தர “சம்பந்தப்பட்டவங்களுக்கு உண்மை தெரியும். ஆனா இதை நான் ஹாண்டில் பண்ணது தப்போன்னு தோணுது” என்று மனம் புழுங்கினார் விஷால்.
அர்னவ்வின் அராஜகமான அலப்பறை
கேஜிஎஃப் மாதிரி மெஷின் கன்னால் சுட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அர்னவ். கூடவே தர்ஷா குப்தா. ‘உன்னைப் பத்தி பேசினதை பார்த்தியா?' என்று ரவி விசாரிக்க “அவனுங்க கிடக்கறாங்க ஜால்ரா பசங்க” என்று அலட்சியமாக சொல்லி விட்டு உள்ளே சென்றார் அர்னவ். “உன்னை தப்பா நெனச்சிட்டேன் ஜாக்” என்று அவரிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷா.
பிறகு சபையைக் கூட்டிய தர்ஷா “என்னை மட்டம் தட்டி தட்டி உக்கார வெச்சுட்டீங்க. இந்த முறை விடப் போறதில்லை” என்கிற சூளுரையுடன் தனது ரிவேன்ஜ் மோடை ஸ்டார்ட் செய்தார். “முத்து.. முன்னாடி ஒண்ணு.. பின்னாடி ஒண்ணு பேசறீங்க. அடுத்தவங்களை மட்டம் தட்டியே உங்க பொழப்பு ஓடுது. மத்தவங்க தவறைப் பெருசு பண்ணி உங்க தப்பை மறைச்சுடறீங்க” என்று புகார் எழுப்ப “இல்லம்மா நீங்க தாரை தாரையா அழுவீங்க. இங்க வேற டிஷ்யூ பேப்பர் கம்மியா இருந்துச்சு. தயிர் டப்பால நாக்கை விட்டு துழாவுன காட்சியை மறக்க முடியுமா?” என்று முத்து பதிலுக்கு கலாய்க்க “எப்படி பால் போட்டாலும் சமாளிக்கறானே’ என்கிற மாதிரி தடுமாறினார் தர்ஷா.
“அருண்.. ‘உள்ளே வந்து என்ன பண்ணப் போறேன்னு என்னைக் கேட்கறீங்க. நீங்க இங்க என்ன பண்றீங்க. வெறும் டமுக்கு டப்பா.. சீரியல்ல ஆக்ட் பண்ற மாதிரியே இங்கயும் இருக்கீங்க. ‘வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வான்னு என்னை சொன்னீங்களே. சவுந்தர்யா.. நீங்களே ஒரு குழந்தைதான். பவித்ரா.. உங்களை ஜட்ஜ் பண்ணவே முடியலை. ஆனா பொறாமையை மறைச்சு வெச்சுக்கறீங்க” என்று அடுக்கிய தர்ஷா “ஆங்.. மறந்துட்டேன். அதெப்படி முத்து. எவ்ளோ அடிச்சாலும் ஒரே மாதிரி சிரிச்சு ரியாக்ஷன் தர்றீங்க? என்று கேட்க அதற்கும் அதே ரியாக்ஷனைத் தந்தார் முத்து. “நான் கதறி அழுதப்ப நீங்க அமெரிக்கன் பிராஜக்ட்ல பிசியா இருந்திருப்பீங்க” என்று பதிலுக்கு பங்கம் செய்யவும் முத்து தவறவில்லை.
அடுத்து வந்தாரய்யா அர்னவ். “நீங்க என்ன கேக்கணுமோ.. மொதல்ல கேட்டுடுங்க. அப்புறம் நான் வெச்சுக்கறேன்.. கச்சேரியை..” என்று ஆரம்பிக்க, உள்ளே இருந்தவர்கள் கூட கேட்காமல், வெளியே போன ரியா இந்தக் கேள்வியை கேட்டது சிறப்பு. “ஸ்டேஜ்ல ஏன் அப்படிப் பேசினீங்க.. அந்தக் கோபத்தை உள்ளேயே காண்பிச்சிருக்கலாமே?” என்று சரியான கேள்வியைக் கேட்க (அருண்.. மைண்ட் வாய்ஸ்: அப்படி கேளும்மா!) “இங்க சில ஜால்ரா க்ரூப்ஸ் இருக்காங்க. டம்மி பாவா.. ன்னு என்னென்னமோ பட்டம் எனக்கு கொடுத்தாங்க. பதிலுக்கு பேச சந்தர்ப்பமே கிடைக்கல. அந்தக் கோபத்துல சொன்னது” என்று அர்னவ் அளித்த விளக்கம் போலியானது. வீட்டிற்குள்ளேயே தன் பழிவாங்கலை அவர் முடித்திருக்கலாம்.
பிக் பாஸ் ஷோ மூலம் கிடைக்கும் பயன் என்ன?
இந்த இடத்தில் மிக முக்கியமானதொரு விஷயத்தை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன். பலமுறை சொன்னதுதான். பிக் பாஸ் என்பது போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, நம்மை நாமே சுயபரிசீலனை செய்யத் தூண்டுகிற நிகழ்ச்சி. அப்படியாக அதைப் பார்த்தால் மட்டுமே பாசிட்டிவ்வான பயன் கிடைக்கும். ஆனால் வம்பு, புறணி, குழு மனப்பான்மை, எதிர் தரப்பின் மீது வசை பாடுதல், ரசிக மனோபாவம் போன்றவைதான் சீசனுக்கு சீசன் பெருகி வழிகிறதே தவிர “இந்தக் காட்சியில் போட்டியாளர் செய்த காரியத்தின் மூலம் என் கீழ்மையை நானே மனச்சாட்சியின் மூலம் கண்டேன். இனி அதை என் வாழ்க்கையில் நிச்சயம் செய்ய மாட்டேன்’ என்கிற ஒப்புதல் வாக்குமூலத்தைக் காண்பது அரிதாக இருக்கிறது.
சில நாட்கள்தான் வீட்டில் இருந்தார் என்றாலும் இந்த வீடு அர்னவ்விற்கு எந்தவொரு அனுபவத்தையும் தரவில்லை போலிருக்கிறது. வீடு தரும் அழுத்தம் காரணமாகத்தான் போட்டியாளர்கள் செயல்படுகிறார்கள் என்கிற புரிதல் அவருக்கு இல்லை அல்லது “நீங்கள் அதிகம் ரோஸ்ட் செய்ய வேண்டும்’ என்கிற பிக் பாஸ் டீமின் அழுத்தத்திற்கு பலியாகி தன் சுயத்தை இழக்கிறார் என்று பொருளாகிறது.
இந்த வன்மத்தின் மூலம் அர்னவ்வின் இமேஜ் மேலும் டேமேஜ் ஆகிறது என்பதையாவது அவர் உணர்வாரா?
அடுத்ததாக அர்னவ் பேசியதையெல்லாம் எவருமே ரசிக்க முடியாது. ‘சட்டையில்லாம சுத்திட்டிருப்பானே.. யார் அவன். சத்யாவா.. இன்னொருத்தவன் நோண்டிட்டும் தடவிட்டும். இருப்பானே. ஜெப்ரி..யா” என்றெல்லாம் வீட்டில் இல்லாத போட்டியாளர்களைப் பற்றி ஆட்சேபமான வார்த்தைகளில் அர்னவ் பேசியது அருவருப்பானது. முத்துவும் ஜாக்கும் இதை ஆட்சேபிக்க “எனக்கு பேச ரைட்ஸ் இருக்கு” என்று நியாயம் பேசினார் அர்னவ். எனில் பிக் பாஸ் டீம் இப்படியாக அவரை தயார் செய்து அனுப்பியிருக்கிறார்கள் போல.
அர்னவ்விற்கு எழுந்த பலத்த எதிர்ப்பு
“சபைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை பின்பற்ற முடியலைன்னா நான் வெளியே போறேன்” என்று தீபக் எழுந்தது நல்ல செயல். “பொண்ணுங்களை தடவிட்டுன்னு சொல்றதெல்லாம்.. சரியில்லை” என்று தன் ஆட்சேபத்தை தெரிவித்தார் ரயான். “நாங்க உக்கார தயாரா இருக்கோம். ஆனா வார்த்தைகள் முக்கியம்” என்று முத்து சொல்ல, கோரஸாக எதிர்ப்பு வந்தவுடன்தான் அர்னவ் சற்று அடங்கினார்.
அடுத்து சற்று பாசிட்டிவ்வாக பேச ஆரம்பித்த அர்னவ், பிடித்த பிளேயர்களாக முத்துவையும் தீபக்கையும் பாராட்ட, அந்த மகிழ்ச்சியே இல்லாமல் அவர்கள் வந்து வெறுப்புடன் நின்றார்கள். ஜாக், பவித்ரா ஆகியோரைப் பாராட்டிய அர்னவ் “பெரிய பெரிய ஹீரோஸ்லாம் அடக்கமா இருக்காங்க. ஆனா நானும் டிவி செலிபிரிட்டின்ற மாதிரி தீபக் பத்தி பேசினது தப்பு” என்று அருணை பொதுவில் போட்டுக் கொடுத்தார் அர்னவ்.
அடுத்ததுதான் மெயின் அயிட்டம். விஷாலிடம் வந்தார் அர்னவ். விஷால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். “விஷால் ஓப்பன் சேலன்ஜ். என்னைப் பத்தி நிறைய பின்னாடி பேசின. இப்ப சொல்றேன். பிக் பாஸ் முடியற வரைக்கும் எதுவா இருந்தாலும் முன்னாடி பேசு. ஏதோ லவ் அது இதுன்னு சொல்றாங்களே.. என்னதது?” என்று அர்னவ் பொடி தூவி ஆரம்பிக்க “எதுவா இருந்தாலும் பத்திரிகை கொண்டு வந்து தரேன். நீயே பார்த்துக்க” என்று பதிலடி தந்தார் விஷால். “யாரு அது.. எத்தனை பேரு?” என்று தெரியாதது போல் அர்னவ் விசாரிக்க “எத்தனை பேரா இருந்தாலும் அவங்களுக்குத் தெரியும். அவங்க உங்க கிட்ட சொன்னாங்களா?” என்ற விஷால் ‘அது வெறும் பிரெண்ட்ஷிப்தாங்க” என்று எரிச்சலுடன் சொன்னார்.
அன்ஷிதா, அர்னவ்வின் நண்பர் என்பதாக அறிகிறேன். நண்பரின் பெயர் அடிபட்டாலும் பரவாயில்லை, நான் கேட்பதை குதர்க்கமாக கேட்பேன் என்கிற அர்னவ்வின் எண்ணத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அடுத்தபடியாக ஒவ்வொருவருக்கும் பட்டங்களை தர ஆரம்பித்தார் அர்னவ். அருணுக்கு ‘சொம்பு தூக்கி’, விஷாலுக்கு `மன்மதன் வல்லவன்', என்றவர் சத்யா மற்றும் ஜெப்ரியை மீண்டும் புறணி பேசி விட்டு “ஜால்ராஸ் கூட்டத்துல கண்ணை விட்டு ஆட்டத்தான் வந்திருக்கேன்” என்று அலட்டலாக சென்று அமர முயன்றார்.
டீசன்ட்டாக கேம் ஆடிய சிவகுமார்
சத்யாவின் டிரஸ் சென்ஸ் அவரது உரிமை என்று வர்ஷினி இந்தச் சமயத்தில் சொன்னது பாராட்டுக்குரிய ஆட்சேபம். விஷாலின் சமையல், ‘பாசக்காரப்பய’ என்று அருணையும் பாராட்டி சூழலின் வெப்பத்தைக் குறைக்க முயன்றார் அர்னவ். “என்னை சொம்பு தூக்கின்னு சொன்னீங்கள்ல. Acceptance-ன்கிற விஷயத்தை பிக் பாஸ் வீடு எனக்கு கத்துக் கொடுத்திருக்கு. நீங்க சொல்ற வார்த்தை என்னை பாதிக்காது. ஏன்னா அதை நான் எடுத்துக்கலை. கண்ல விரலை விட்டு ஆட்டுவீங்களா.. முயற்சி செய்து பாருங்க.. நீங்கதான் பஃபூன் மாதிரி காமெடியா தெரியறீங்க” என்று சவால் விடுவது போல பதிலடி தந்தார் அருண்.
‘மூன்று நபர்களை ரீப்ளேஸ் செய்ய வேண்டும்’ என்று தனக்குத் தரப்பட்ட டாஸ்க்கிற்கு சவுந்தர்யா, அருண் மற்றும் விஷாலை தேர்ந்தெடுத்தார் அர்னவ்.
அடுத்தபடியாக சிவகுமாரும் (ஸ்மார்ட் லுக்!) சாச்சனாவும் உள்ளே நுழைந்தார்கள். முத்து அண்ணனிடம் பாசத்தைப் பொழிந்தார் சாச்சனா. போட்டியாளர்களைப் பற்றி தாளில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்த சிவா, ‘இது என்னோட கருத்து இல்லைங்க. படிக்கச் சொன்னாங்க. படிச்சேன்’ என்று சேஃப்பாக சொல்லிவிட்டார். “சிவா அது மக்கள் அனுப்பிய கருத்துன்னு தெளிவா சொல்லுங்க” என்று பிக் பாஸ் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியிருந்தது.
“என்னை குழந்தை, immature-ன்னு சொன்னீங்க.. எனக்குத் தோண்ற மூணு பேரை அப்படிச் சொல்றேன்” என்று தன் டாஸ்க்கை ஆரம்பித்த சாச்சனா, அதற்காக ஜாக்குலின், சவுந்தர்யா, அருண் ஆகியோரைத் தோ்ந்தெடுத்தார். இந்த வாரத்தில் ‘mid week eviction’ இருக்கும் என்கிற முக்கியமான தகவலை தூக்கிப் போட்டு விட்டுச் சென்றார் வர்ஷினி.
முத்துவும் சாச்சனாவும் பேச அமர்ந்தார்கள். முத்துவைப் பற்றி சொல்லப்படுகிற விமர்சனங்களை முன்வைத்த சாச்சனா ‘ரயான் ஒண்ணு சொன்னார்ல?!’ என்று நினைவுப்படுத்தி முத்துவின் மைனஸ் பாயின்ட்டுகளை வெளிப்படையாக சொன்னது நன்று. “இனி கவனமா இருக்கேன்” என்று ஏற்றுக் கொண்டார் முத்து.
‘பிளேபாய்’ - சாச்சனா சொன்ன வார்த்தையால் கலங்கிய விஷால்
அடுத்ததாக விஷாலிடம் சென்ற சாச்சனா, அதே லவ் டிராக்கை மீண்டும் ஆரம்பித்து ‘எங்க அண்ணன் வெளில தப்பா தெரியக்கூடாது. நீ சாக்லேட் பாயா இல்லாம பிளே பாய் மாதிரி தெரியற” என்று ரைமிங்கில் மிகையான வார்த்தையை சொல்லி விட “மீனிங் தெரியாம பேசாத” என்று அடிபட்ட முகத்துடன் சொன்னார் விஷால். “நான் சொன்ன அர்த்தம் வேற” என்று சாச்சனா ஆறுதல்படுத்த வேண்டியிருந்தது. பிளேபாய் என்கிற விமர்சனம் விஷாலை ஆழமாக புண்படுத்தவே தனிமையில் கலங்கினார்.
விஷால் தனியாக படுத்திருப்பதைப் பார்த்து ஜாக், ரயான், முத்து ஆகியோர் வந்து சமாதானப்படுத்தினார்கள். “என் மேல நெகட்டிவ் விமர்சனங்கள் வரட்டும். அவங்க மேல எதுவும் வரக்கூடாது’ என்று விஷால் சொன்னது நன்று. ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டிய மேன்மையான குணம் அது. ரயான் அதைப் பாராட்டினார். “எந்தவொரு விஷயத்துக்கும் நாமதான் காரணம். அப்படித்தான் வெளில போயிருக்கும். இனிமே செய்யாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம்” என்கிற மாதிரி கறாரான தொனியில் ஆறுதல் சொன்னார் முத்து. சம்பந்தப்பட்ட பெண்களை யாரும் தவறாக நினைக்கவில்லை என்பதையும் சொல்லி அவரை சமாதானப்படுத்த முயன்றார்கள்.
“நீங்க போட்டியாளரா உள்ளே வந்திருக்கீங்க. இனிமே எந்தவொரு வெளியுலக விஷயத்தையும் பற்றி பேசக்கூடாது. பேசினால் மெயின் டோர்தான். இதுதான் கடைசி வார்னிங் ” என்று பாவனையாக கண்டிப்பு காட்டினார் பிக் பாஸ். (போதிய அளவு ஃபுட்டேஜ் சேர்ந்திடுச்சு போல!).
“அவங்க ரெண்டு பேரும் (தர்ஷிகா - அன்ஷிதா) உள்ள வந்தப்புறம், புதுசா வந்தவங்க அத்தனை பேரையும் வெச்சு செய்வேன், ரவி சாரைத் தவிர” என்று அருணிடம் புலம்பினார் விஷால். “இப்ப அது முக்கியமில்ல. வெற்றியைப் பற்றி யோசிக்கறதுதான் முக்கியம். இதை வெளில கூட சால்வ் பண்ணிக்கலாம். அவங்க கிட்ட பேசு. அது போதும்” என்று அருண் தந்த ஆலோசனை சரியானது. “அவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் விஷால்.
தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவிடம் தனிமையில் உருக்கமாக மன்னிப்பு கேட்டார் விஷால். சம்பந்தப்பட்டவர்கள் வந்து புகார் தராமல் இனி விஷாலின் தலையை உருட்டுவதில் வம்பு பேசும் ஆர்வம் மட்டுமே மிஞ்சும். சவுந்தர்யாவும் சாச்சனாவும் பரஸ்பரம் சீண்டிப் பேசிக் கொள்ளும் காட்சியோடு எபிசோட் நிறைவடைந்தது.
பழைய பகைகளைத் தீர்க்க வந்தவர்கள் பேசியவை எல்லாம் இத்தோடு ஓயுமா, அல்லது இன்னமும் வளருமா? வந்தவர்களும் இனி போட்டியாளர்கள் என்னும் போது ஆட்டம் எப்படியிருக்கும்? காத்திருந்து பார்ப்போம்.