ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!
BB Tamil 8 Day 97: மேலும் ஒரு எவிக்ஷன், வன்மத்தைக் கொட்டிய 8 பேர் -என்ன நடந்தது?
டாப் 5-ல் இருக்க வேண்டிய இன்னொரு நபர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் என்பது பல விநோதமான மர்மங்களைக் கொண்டது.
கோப்பையின் மூலம் கிடைக்கும் வெற்றி என்பதைத் தாண்டி ‘பிக் பாஸ் வீடு தந்த அக மாற்றத்தை உண்மையான வெற்றியாக’ அருண் கருதுவது சிறப்பானது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டால் அவரது வாழ்க்கை இன்னமும் சிறப்பாக மேம்படும். இது அருணிற்கானது மட்டுமல்ல. பிக் பாஸ் பார்வையாளர்கள் அனைத்திற்குமானது. இந்த நிகழ்ச்சி உள்ளே ஏற்படுத்தும் மாற்றம்தான் முக்கியமானது. மற்றபடி இவர் ஜெயித்தார், இவர் தோற்றார் என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97
“இவங்க என்ன செஞ்சு குப்பை கொட்டப் போறாறங்கன்னு பார்ப்போம்ன்னு எட்டு பேரை புதுசா உள்ளே அனுப்பிச்சா.. வாரம் முழுவதும் வன்மமா கொட்டினாங்க..” என்கிற மாதிரி சேலன்ஜ் 8 அணி பற்றிய விமர்சனத்துடன் தன் உரையை ஆரம்பித்தார் விசே. சவுந்தர்யாவை பிக் பாஸ் தேற்றிய விதம் பற்றி சொல்லும் போது “தாலாட்டு பாடி தூங்க வைக்காததுதான் குறை” என்று நக்கலடித்தார். “எல்லோருமே நம்ம செல்லங்கள்தான். அதுல ஒண்ணு வீக்கா ஃபீல் பண்ணும் போது தட்டிக் கொடுத்து ஓட வைக்க வேண்டியது நம்ம வேலைதானே?” என்று அதையே பாசிட்டிவ் நோக்கில் சொன்ன பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.
“அஞ்சு பேர் கொண்ட குழுவுலதானே நீ இருந்தே. அப்புறம் எப்படி சவுந்தர்யா கிட்ட போய் சேர்ந்தே?” என்று நேரடிக் கேள்வியை ஜாக்குலினிடம் கேட்டார் தர்ஷா. ஜாக்குலின் அதற்குப் பதில் சொல்ல முனைவதற்குள் “அவ அறிவிற்கு எட்டற மாதிரி பதில் சொல்லு.. ஜாக்” என்று சீரியஸான டோனில் ரவி சொன்னது தர்ஷாவை கலாய்ப்பது போல் இருந்தது. “நான் குழுவுல இல்லை. மனம் விட்டுப் பேசறதுக்கு யாராவது ஒருத்தரை நம்புன்னுதான் உன் கிட்ட சொன்னேன்” என்று ஜாக்குலின் பதிலளிக்க “அப்படியா சொன்னே?” என்று ஆச்சரியப்பட்டார் தர்ஷா.
வெளியில் இருந்து வருபவர் தன் கேள்விகளை திறமையாக கூர்திட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் தர்ஷா அப்படிச் செய்யவில்லை. ஆனால் உள்ளே இருக்கும் ஜாக்குலின் முதல் சீசன் சம்பவங்களைக் கூட இன்னமும் நினைவில் வைத்திருக்கும் ‘வல்லாரை நாயகி’யாக இருக்கிறார்.
மரத்தடி ஜோசியர் மாதிரி ஆருடம் சொல்கிற ரவி
‘உண்மையில் டாப் 8 யார்?” என்று ரவியிடம் கேட்டார் சவுந்தர்யா. ரவியை சக போட்டியாளராக நினைக்காமல் ஏதோ மரத்தடி ஜோசியர் மாதிரி ஆளாளுக்கு அவரிடம் ஆலோசனை கேட்க “முதல் ஒரு வாரம் துன்பப்பட்டு, துயரப்பட்டு, லோல்பட்டு இருப்பே. அப்புறம் அது பழகிடும்” என்கிற மாதிரியே ஆலோசனை சொல்கிறார். சவுந்தர்யாவின் கேள்விக்கு “முத்து.. ரயான்.. தீபக்.. அப்புறம்… அருண், விஷால் என்று இழுத்தவர் “ஆனா சவுண்டு நீ இருக்கே தெரியுமா.. பக்கா பிளானிங் அண்ட் ஹோம்வொர்க்” என்று சொல்ல ‘என்னையா சொல்றீங்க?’ என்கிற மாதிரி வெள்ளந்தியாகப் பார்த்தார் சவுந்தர்யா. (இது உலக நடிப்பும்மா!). “அறிவு சார்ந்த உரையாடல்ல உன்னை எங்குமே பார்த்தது கிடையாது. ஆனா மத்தவங்க சொல்லத் தயங்கறதை டக்குன்னு சொல்லிட்டுப் போயிடுவே” என்று ரவி சொன்னது பாராட்டா அல்லது கலாய்ப்பா என்பது ஆராய்ச்சிக்குரியது.
“முத்துவிற்கு நான்தான் PR” என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டார் ரவி. இன்னொரு உரையாடலில் இந்த விஷயம் தெரிந்தது. தீபக் ப்ரோவிற்கு PR கிடையாதாம். “என்னதான் இன்ப்யூளயன்ஸ் பண்ணாலும் ஆர்கானிக்கான அன்பு காட்டற மக்கள் சப்போர்ட் இல்லாம எதுவும் முடியாது” என்பதையும் கூடவே சம்பிரதாயத்திற்காக சொல்லி விடுகிறார்கள். “ப்ரீஸ் டாஸ்க்ல பொதுவா பிரெண்ட்ஸ் அனுமதிக்க மாட்டாங்க. ஆனா சவுந்தர்யாவிற்கு இந்த விஷயம் முன்னாடியே எப்படி தெரிஞ்சது?” என்று அடுத்த சந்தேக வெடிகுண்டை ரவி தூக்கிப் போட அறையில் நிசப்தம். எனில் லவ் பிரபோசல் அத்தனையும் செட்டப்பா கோப்பால்?! என்கிற கேள்வி எழுந்திருக்கும்.
“வெறும் பி.ஆர்.பிரமோஷன் வெச்சுலாம் ஒருத்தர 98 நாள் காப்பாத்த முடியாது. உன்னை மாதிரி மத்தவங்களையும் ரியாக்ஷன் பண்ணச் சொல்லேன் பார்ப்போம். கேவலமா இருக்கும். உன் கிட்ட ஏதோவொரு ஸ்பெஷல் இருக்குடா செல்லம்” என்கிற மாதிரி சவுந்தர்யாவை மோட்டிவேட் செய்து கொண்டிருந்தார் சிவா. வீக்கெண்ட் எபிசோடில் இந்த விஷயம் நிச்சயம் பேசப்படும் என்கிற பீதியில் இருந்த சவுந்தர்யாவிற்கு சிவாவின் ஆறுதல் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. சுனிதா போட்ட வெடிகுண்டின் தன்மை இன்னமும் குறையால் புகைந்து கொண்டிருக்கிறது.
“என்னைப் பத்தி வெளில என்ன பேசறாங்க?” - ரவியிடம் விசே கிண்டல்
மேடையில் விஜய்சேதுபதி. ‘வெளியுலக விஷயங்களை சொல்லாதீங்கன்னு எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்டாங்களே’ என்கிற சலிப்புடன் உள்ளே சென்ற விசே, அப்படியே முகம் மாற்றி “டான்ஸ் ஆடினது சூப்பர்” என்று அனைவரையும் வஞ்சகமில்லாமல் பாராட்டினார். (முதல்லயே அடிக்க முடியுமா.. கொஞ்ச நேரம் போகட்டும் என்கிற கருணை அதில் இருந்தது!).
மக்கள் கைத்தட்டலை வைத்து “மூணு பேருக்கு க்ளோசப் வெச்சாங்க. அப்ப மட்டும் கிளாப்ஸ் வந்தது. ஆனா அந்த மூணு பேரு யாருன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கும் அது தெரியாது. நல்லாயிருக்குல்ல இந்த கேம்?” என்று போட்டியாளர்களை வைத்து விசே ஆடிய ‘கேம் சேஞ்சர்’ ஆட்டம் சுவாரசியம்.
புதிய அணி மற்றும் பழைய அணியை தனித்தனியாக அமர வைத்த விசே, “திரும்பி வந்தவங்க சொல்லுங்க.. எப்படியிருந்தது?” என்று ஆரம்பித்து முதலில் ரவியை எழுப்பி “என்னைப் பத்தி வெளியே என்ன பேசிக்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்” என்று ஆரம்பத்திலேயே நகைச்சுவை திரியைக் கொளுத்தினார். அந்த அளவிற்கு ரவியின் வம்புகள் கரைபுரண்டு ஓடியது.
‘ஆரம்பத்துல கெஸ்ட்ன்னு நெனச்சேன். அப்புறம்தான் போட்டியாளர்ன்றதை ஃபீல் பண்ண முடிஞ்சது’ என்பதே பலரும் சொன்ன பொதுக்கருத்தாக இருந்தது. ஆனால் எவருமே போட்டியாளர் என்கிற டஃப் பைட்டை தராமல் விருந்தினர் போலவேதான் இருந்தார்கள். சுனிதாவின் கவிதை இம்சையை நீண்ட நாள் கழித்து கேட்க முடிந்தது. “நீங்க கவிதைப் புத்தகம் போடலாம்.. சீரியசா சொல்றேன்” என்று அதைப் பாராட்டினார் விசே. (‘இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும், என்னையும் கவிஞன் ஆக்காதே’ என்கிற பாடல்வரிதான் நினைவிற்கு வருகிறது!)
அருணுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
அருணின் மாற்றத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு விசே பாராட்டியது சிறப்பு. ‘ஜால்ராஸ்’ என்று அர்னவ் சீண்டினாலும் அதற்குப் பொறுமையாக பதில் சொன்ன அருணின் டிரான்ஸ்பர்மேஷனை சிலாகித்துப் பாராட்டி புத்தர் கதையையும் எளிமையாக மேற்கோள் காட்டினார் விசே. ‘பழைய அருணா இருந்தா சண்டைக்கு போயிருப்பாராம்’.
ரவியும் ரியாவும் ‘unfair eviction’ என்கிற வார்த்தையை சொன்னதை மறுத்தேயாக வேண்டிய கட்டாயம் விசேவிற்கு இருக்கிறது. எனவே ‘ஒருத்தர் எவிக்ட் ஆகறதை யார் முடிவு பண்றாங்க.. மக்கள்தானே.. அப்ப அது unfair-ஆ?’ என்று விசே மேடையில் கேட்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. எனில் மக்களின் ஆசைப்படியாகவா பிக் பாஸ் ஷோ நடக்கிறது?! அங்கும் அரசியல் இல்லையா? “அரசியல் நம்மை சுத்தியும் நடக்கும். நம்மை வெச்சும் நடக்கும்’ - இதுவும் ஜெப்ரிக்கு அறிவுரையாக விசே சொன்னதுதான்.
“ஜெயிக்கறவங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்” என்று சொல்லி சொதப்பினார் ரியா. “நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று யூகிக்கிறீர்கள்?” என்று அர்னவ்விடம் கேட்க அவர் மாற்றி மாற்றி பதில் சொன்ன போது சுவற்றில் தலையை முட்டிக் கொண்டார் தீபக். அர்னவ்வின் அலப்பறை ஓவராக இருந்ததால் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாவது இயல்பானது என்பது கைத்தட்டல்களின் மூலம் தெரிந்தது.
சுனிதா பற்ற வைத்த நெருப்பு
அடுத்த வந்த சுனிதா, PR வெடிகுண்டின் இன்னொரு முனையைப் பற்ற வைத்து வீச சவுந்தர்யாவின் முகம் பிளாங்க்காக மாறியது. “இது இந்த ஷோவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. பணம் இருப்பவர்கள் மட்டுமே செலவு செய்து வெற்றியடைய முடியும் என்கிற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றெல்லாம் சுனிதா இறங்கி அடிக்க “என்னதான் PR பண்ணாலும் கடைசில ஃபர்பாமன்ஸ்தானே பேசும்?” என்று விசே ஒரு கவுன்ட்டர் தர, ‘வொி குட் விஜய்சேதுபதி. அப்படிப் போடு’ என்கிற மாதிரி கைத்தட்டினார் சவுந்தர்யா. அதுவரை இருந்த பீதி பெரும்பாலும் கலைந்திருக்கும்.
“நல்ல பிளேயர்ஸ் வெளியே போற போது நானே வருத்தப்பட்டிருக்கேன். ஆனா என்ன செய்யறது.. இதையெல்லாம் மக்கள்தான் முடிவு பண்றாங்க” என்கிற விளக்கத்தை விசே தர “சார் பர்சனலா ஒரு விஷயம் சொல்றேன். PR பண்ணி ஒருத்தர் புகழ்ந்துக்கட்டும். கப்பு கூட ஜெயிக்கட்டும். ஆனா இன்னொரு போட்டியாளரை அசிங்கப்படுத்தி கீழ இறக்கறது.. சரியில்லை இல்லையா.. அது எனக்கு நடந்திருக்கு” என்று சுனிதா சொன்னதிலும் பாயிண்ட் இருந்ததால் பார்வையாளர்களின் கைத்தட்டல் கேட்டது.
“யார் வேணா என்ன வேணா சொல்லட்டுங்க.. மக்கள் பார்க்கறாங்க.. மஞ்சரி.. எப்படி வெளில போனாங்க.. மக்கள் ஏன் அப்படி முடிவு பண்ணாங்க.. எனக்கும் நெகட்டிவ் பப்ளிசிட்டி நிறைய வந்திருக்கு. ஆனா நான் அதுல கவனம் செலுத்தல. என்னை எப்படி மேம்படுத்திக்கறதுன்னுதான் பார்த்தேன். ஓகேவா?” என்று சுனிதாவிற்கு விளக்கம் சொன்ன பிறகு பிரேக்கில் சென்றார் விசே.
PR என்பது நல்லதா, கெட்டதா…?
மறுபடியும் அதேதான். போட்டி நிறைந்த காலக்கட்டத்தில் PR என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வசதியற்றவர்கள் போட்டி போட முடியாத இடம் என்கிற கோணமும் உள்ளது. அப்படியே PR செய்தாலும் அதை சம்பந்தப்பட்ட போட்டியாளரை பாசிட்டிவ்வாக பிரமோட் செய்ய மட்டும் பயன்படுத்தலாமே தவிர, இன்னொரு போட்டியாளரை மலினப்படுத்துவது என்பதை.. (இதுக்குப் பேரு என்ன தெரியுமா… என்று ஒரு திரைப்படத்தில் விசே சொன்ன வசனத்தையே இங்கும் சேர்க்கலாம்).
விசே தலை மறைந்ததும் இந்த விஷயம் வீட்டிற்குள் புகைந்தது. கடுகடுவென்ற முகத்துடன் இருந்த சவுந்தர்யா ‘என்னவாம் இவங்களுக்கு?’ என்கிற மோடில் இருந்தார். (காண்டாவுது மச்சான்!) “நீ நெகட்டிவ்வா பண்றதைத்தான் வெளில நெகடிவ்வா காட்டறாங்க” என்று சுனிதாவிற்கு புதிய விளக்கத்தை அளித்தார் சாச்சனா.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, பார்வையாளர்களின் கேள்வி நேரத்திற்குள் நுழைந்தார். ஓர் இளைஞர் கேட்ட கேள்வி அர்த்தபூர்வமானது. “பொிய பட்ஜெட் படம் ஒண்ணு பயங்கரமான மார்கெட்டிங்ல வெளியாகுது. அந்தப் படத்திற்குத்தான் நிறைய ஸ்கீரின் கிடைக்கும். அப்படின்னா நல்லா இருக்கற சின்ன படங்கள் இதனால பலியாவுது இல்லையா?” என்கிற மாதிரி அந்தக் கேள்வி நியாயமாக இருந்தது.
‘நல்ல படமா இருந்தாலும் மக்கள்தான் ஆதரிக்கணும்’
“சார்.. இப்ப.. கடைசி விவசாயியின்னு ஒரு படம் பண்ணோம். ரொம்ப நல்ல படம் சார். ரெவ்யூவர்ஸ் எல்லாமே பாசிட்டிவ் ரிசல்ட் தந்தாங்க. ஒருத்தர் கூட தப்பா சொல்லல. ஆனாலும் படம் ஓடலை. நான் மக்கள் மேல பழி போடலை. ஒருத்தருக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிக்கணும்னு அவசியமில்ல. ஏன்னா பெரிய படம் பண்றவங்களும் கஷ்டப்பட்டுத்தான் தன்னோட இடத்திற்கு வந்திருக்காங்க. அந்தப் பேரை சம்பாதிச்சிருக்காங்க. மகாராஜா படம் கூட ஓடுமான்னு எனக்கு ஆரம்பத்துல சந்தேகம் இருந்துச்சு. சில போ் எப்படி இன்னமும் இருக்காங்கன்னு எனக்கும் ஆச்சரியமா இருக்கும். பிரமோஷன்லயே எல்லாம் நடக்காது. கடைசில மக்கள் முடிவு எடுக்கறதுதான்” என்று அந்த இளைஞருக்கு நீண்ட விளக்கத்தை அளித்தார் விசே.
அடிப்படையான திறமை, வசீகரம், பிரத்யேகமான ஏதோவொன்று அல்லாமல் மக்கள் எளிதில் எவரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரமோஷன் என்பது டாப்பிங் மாதிரிதான். அதுவே வெற்றியைத் தேடித் தராது. சவுந்தர்யாவிடம் உள்ள ‘ஏதோவொன்று’ கணிசமான பார்வையாளர்களால் ரசிக்கப்படுவதால்தான் (வாக்கு அரசியல் தாண்டி) அவரால் இன்னமும் இங்கே இருக்க முடிகிறது என்கிற உண்மையை மறுக்க முடியாது.
பார்வையாளருக்கு பதிலளித்து விட்டு உள்ளே வந்த விசே “சுனிதா.. நான் சொன்னதை நீங்களா புரிஞ்சுக்கங்க. சாச்சனா சொன்ன ஆங்கிள்ல புரிஞ்சுக்காதீங்க. அது தப்பு” என்று சாச்சனாவிற்கு மறைமுக கொட்டு வைத்தார் விசே. “ஓகே.. இப்ப டாப் 8 போட்டியாளர்கள் சொல்லுங்க. புதுசா வந்தவங்க எப்படி?” என்று பிளேட்டை மாற்றிப் போட்டு ஆரம்பித்தார் விசே.
அருண் சொன்ன சுவாரசியமான உதாரணம்
“ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வருவாங்க. ஆரம்பத்துல நல்லாதான் இருக்கோம். அப்புறமா கூப்பிட்டு கூப்பிட்டு வம்பு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எப்படா கிளம்புவாங்கன்ற மாதிரி ஆயிடும்” என்கிற சுவாரசியமான உதாரணத்தைச் சொல்லி ரசிக்க வைத்தார் அருண். (சமயங்கள்ல நல்லாப் பேசறாப்பல!) . “மெஷின் கன்னோட வந்தவங்களைப் பார்த்தா ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. அப்புறம்.. சோபால சாய்ஞ்சு கதை பேச ஆரம்பிச்சிட்டாங்க. ‘இந்த வீடு எங்களை மாத்தியிருக்கு’ன்ற விஷயத்தை அவங்க மூலம்தான் இன்னமும் ஆழமா தெரிஞ்சிக்கிட்டோம். எங்களுக்குள்ள இவ்வளவு பாண்டிங் இருக்குன்னு புரிஞ்சது” என்று ஜாக்குலின் பேசியதும் சுவாரசியம். (பொது எதிரி உள்ளே வரும் போது ஒற்றுமை தன்னால் வந்து விடும்!).
“அவங்க ஆடற கேமில் கவனம் செலுத்தறதை விட்டுட்டு எங்களை குறை சொல்றதையும் வேலையா வெச்சிருந்தாங்க” என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னார் பவித்ரா. முத்து எழுந்ததும் பலத்த கைத்தட்டல். ‘அய்யோ.. இதை நெனச்சாதான் பயமா இருக்கு’ என்று கைகூப்பினார் முத்து. ‘தன்னடக்கமா இருக்கிறாராமாமாம்’ என்று கிண்டலடித்தார் விசே.
முத்து விவரிப்பது எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். பயபுள்ள இதுக்கென்றே ரூம் போட்டு யோசிப்பார் போல. “நம்ம மேல பல பேரு கல்லை வீசினா அதை எப்படி தடுக்கலாம்ன்னு பிக் பாஸ் தந்த டிரைனிங் செஷன் மாதிரி இருந்தது சார். ‘எங்களை எப்படி எக்ஸ்போஸ் பண்ணலாம்’ன்ற டிராப்புல இவங்க மாட்டிக்கிட்டாங்க. நாங்க அந்த வலைல விழல. வீடு அப்படி எங்களை மாத்தியிருக்கு. யாராவது கேள்வி கேட்டா முடியை உசுப்பற சவுந்தர்யா புள்ள கூட இப்ப கட்டின பசு மாதிரி சாந்தமா இருக்கு சார்.. இதுக்கு மேல என்ன வேணும்?” என்று கேட்டு வந்தவர்களை பங்கம் செய்தார் முத்து.
“நாங்க அலையன்ஸ் போட்டுக்கிட்டோம். வர்றவங்க கிட்ட இருந்து எப்படி சேஃப்பா ஆடறதுன்னு” என்று ஆரம்பித்தார் விஷால். “அப்புறம். விஷால்.. உங்களைப் பத்தி ஒரு விஷயம் போயிட்டிருக்குல்ல. அது உங்க பர்சனல். அதைப் பத்தி பேச யாருக்கும் உரிமை கிடையாது. அதை நெனச்சுல்லாம் ஸ்ட்ரெஸ் ஆவாதீங்க” என்று விஷாலுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார் விசே.
அருண் எவிக்ஷன் - விஷால் கண்ணீர் - நண்பேன்டா
அடுத்து எழுந்தார் சவுந்தர்யா. “கஷ்டப்பட்டு மலை உச்சிக்கு ஏறும் போது தள்ளி விடறதுக்குன்னே எட்டு பேர் வந்திருக்காங்க. ‘நீ இன்னும் இருக்கியா?’ன்ற மாதிரியே பார்க்கறாங்க.. வந்தவங்க கெஸ்ட் மாதிரிதான் நடந்துக்கறாங்க. இவங்க ஜெயிக்கற வேலையைப் பார்க்காம ‘இவங்கதான் ஜெயிக்கணும்’ன்ற மாதிரி வேலையைப் பார்க்கறாங்க” என்று பி.ஆர் பணியை எதிர் தரப்பிற்கே தள்ளி விட்டு கெத்து காட்டினார் சவுண்டு.
பிரேக் முடிந்து திரும்பிய விசே எவிக்ஷன் கார்டை தூக்கினார். “ஏற்கெனவே சொன்னதுதான். இதுக்கு அப்புறம் எல்லோருமே வெற்றியாளர்கள்தான். மனமாற்றம்தான் உண்மையான வெற்றி’ என்கிற ஆறுதலோடு கார்டை எடுத்தார் விசே. ‘அருண்’ என்று அதில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் ‘அய்யய்யோ’ என்று அதிர்ச்சியைடந்தார் விஷால். விஷாலைப் போலவே வர்ஷினியும் கண்ணீர் விட்டார். (ஸ்கூல் டாஸ்க்ல பூத்த பூ இன்னமும் வாடலை போல!). புன்னகை முகத்துடன் அனைவருடன் அருண் பாசிட்டிவ்வாக பேச ‘கல்யாணத்துக்கு கூப்பிடுவல்ல?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் தர்ஷா.
அருணிற்கும் விஷாலிற்குமான நட்புணர்ச்சி இந்தச் சமயத்தில் மிக ஆழமாக எதிரொலித்தது. அருண் கிளம்பும் போது ரயானும் கண்ணீர் விட்டார்.. ‘நான் உனக்கு அண்ணன்டா’ என்று பாசத்தைக் கொட்டினார் அருண். “பிக் பாஸ்.. உங்களை நேரில் பார்த்ததில்ல. ஆனா உங்க குரல் இருக்கே.. அது மீது பயம்.. மரியாதை.. லவ் எல்லாம் இருக்கும் அருண்ன்னு சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோஷமா இருக்கும். இந்த ஷோவிற்குப் பின்னால் இருக்கிற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி” என்ற அருணிடம் “இதுவரைக்கும் நான் இப்படியொரு காம்ப்ளிமெண்ட் யாருக்கும் சொன்னதில்லை. அருண்.. You are truly a gentleman” என்று சொல்லி அவரை நெகிழ வைத்தார் பிக் பாஸ்.
பாசிட்டிவ்வாக பேசிய அருண்
மேடைக்கு வந்த அருணை பாசத்துடன் வரவேற்றார் விசே. வழக்கம் போல் வீடியோ சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு வீடியோவை நமக்கும் யாராவது தயார் செய்து தருவார்களா என்கிற ஏக்கம் வருமளவிற்கான தயாரிப்பு.
“இந்த வீடு தந்த அனுபவத்தையும் மாற்றத்தையும் என் வாழ்நாள் முழுக்க தக்க வைத்துக் கொள்வேன்” என்று பாசிட்டிவ்வாக பேசிய அருணிடம் “அதுதான் தேவை. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தி விடை தந்தார் விசே. வீட்டாரிடம் பேசும் போது “ஜெயிக்கணும்னு ஒரு இளைஞன் வெறித்தனமா ஓடுவான் சார். அவனைப் பார்க்கணும்னா இப்ப பாருங்க. முத்து” என்று சிறப்பான வாழ்த்துரையை வழங்கி விட்டுச் சென்றார் அருண்.
இன்றைய எபிசோடில் இன்னொரு எவிக்ஷனும் இருக்கிறது. அது தீபக்காம். பேசாமல் பிக் பாஸையும் வெளியே அனுப்பி விட்டு ஷோ நடத்தலாம்! அடப் போங்கப்பா!..