Attagasam: ``ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்..." - இயக்...
BB Tamil 9 Day 20: `ஏற்கெனவே இங்க நாறிடுச்சு' - பாரு, கம்ருதீனுக்கு ஊமைக் குத்து- எச்சரித்த விசே
கண்டிப்பான ஸ்கூல் மாஸ்டர் போல விஜய் சேதுபதி செயல்படுவதைக் குறித்து நிறைய விமர்சனங்கள் பொதுவாக உண்டு. ஆனால் இந்த எபிசோடிற்கு அந்த ‘பிரம்பு’ அவதாரம் தேவைப்பட்டது. வாரத்தில் போட்டியாளர்கள் செய்த சேட்டைகள் அப்படி.

“இந்த வாரம் வீடு பரபரன்னு இருந்தது. ஆனா நமக்குத்தான் படப்படப்பா இருந்துச்சு. அந்தளவிற்கு சம்பவம் பண்ணிட்டாங்க. இதெல்லாம் சினிமா கேரக்டர்கள் இல்ல. அவங்களோட ஒரிஜினல் கேரக்ட்டரைத்தான் புரொஜக்ட் பண்றாங்க. அது அவங்களுக்குத் தெரியுதா, இல்லையா, வாங்க. விசாரிப்போம்” என்ற விசே, வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.
பாருவும் கம்ருதீனும் சிறைக்குள் உட்கார்ந்து புறணி பேசிக்கொண்டிருந்தார்கள். திவாகர், கலை, வினோத் ஆகிய மூவரும் கூடிப் பேசிக்கொண்டிருந்ததை வயிற்றெரிச்சலுடன் பார்த்த பாரு “கூடிட்டாங்க.. பார்த்தியா.. Men are always men” என்று சொல்ல அதற்கு வில்லங்கமான கமென்ட்டை வில்லத்தனமான சிரிப்புடன் சொன்னார் கம்ருதீன்.
“பாருக்குள்ள ஒரு குழந்தை மனசு இருக்கு” என்று அனலைஸ் செய்து கொண்டிருந்தார் கலை. (அதனாலதான் குழந்தை அடிக்கடி அழுதுபோல!) “கரெக்ட்டுதான். ஆனா அந்த அகங்காரம் இருக்கே..” என்றார் திவாகர். மற்றவர்கள் என்றால் சற்று சீக்கிரமே சிறையிலிருந்து விடுவிக்கும் பிக் பாஸ், கம் - பாருவை மட்டும் கூடுதலாக அமரவைத்து அழகு பார்த்து பிறகு ரிலீஸ் செய்தார். “ஹப்பாடா.. இந்த ஸ்டேஷன்லதான் கொசுத் தொல்லை இல்லை” என்கிற ரேஞ்சிற்கு வெளியே வந்தார் பாரு.
வினோத்திற்கும் திவாகருக்கும் இடையில் சண்டை. இவர்கள் எப்போது காமெடியாக அடித்துக் கொள்கிறார்கள், எப்போது சீரியஸாக அடித்துக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு மாதிரியான கலவையாக இருக்கிறது. பாத்திரத்தை வழித்தெடுத்து வினோத் சாப்பிடுவதைப் பற்றி திவாகர் கிண்டலடிக்க இந்தச் சண்டை பற்றிக்கொண்டது.
திவாகர் விவகாரம் என்றவுடன் கம்ருதீனும் ஜோதியில் ஐக்கியமானார். “இங்க பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பயப்படறாங்க” என்று திவாகர் குறித்து கம்ருதீன் காமிரா முன்னால் புகாரளிக்க “அதை யாரு சொல்றாங்க.. பாரு.. அப்படில்லாம் ஒண்ணுமில்ல.. கிளம்பு.. காத்து வரட்டும்” என்கிற ரேஞ்சிற்கு ஹாண்டில் செய்தார் சுபிக்ஷா.

சுபிக்ஷா வந்தவுடன் பாருவும் வந்து இந்த ஜோதியில் ஐக்கியமானார். “நம்மள வெச்சு ஏமாத்தற கேரக்டர் இது” என்று நாமினேஷன் பாஸ் கிடைக்காத எரிச்சலைக் காட்டினார் பாரு. “ஆமா.. நான் நல்லவ இல்ல. இங்க யாரும் அப்படி இல்ல” என்று டேபிளில் ஏறி நின்று கத்தினார் சுபிக்ஷா. “அப்படித்தான் டிரிக்கர் பண்ணுவாங்க. வீணா எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத” என்று சுபிக்ஷாவை சமாதானப்படுத்தினார் சபரி.
மேடைக்கு வந்த விசே, “இந்த வாரம் இவங்க பண்ண சம்பவங்கள் ‘உவ்வேக்’ ரகமா இருந்தது. வாங்க பேசுவோம்” என்று வீட்டிற்குள் சென்றார். ‘அண்ணே.. ஒரு பாட்டு வெச்சிருக்கேன்’ என்று வினோத் உற்சாகமாக எழுந்து சொல்ல “அதெல்லாம் தேவையில்ல. நான் வெச்சிருக்கேன். ஒரு பாட்டு. அதைக் கேளுங்க” என்று அர்ச்சனையை ஆரம்பித்தார்.
“நீங்க பண்ண வேலையால உங்க பேருதான் கெடும். எங்களுக்கு என்ன போச்சு? உங்களுக்கு எங்க இருந்து இந்த தைரியம் வருது?.. இந்த ஷோ மீது விமர்சனங்கள் வருது. குழந்தைக கூட உக்காந்து பார்க்க முடியலைன்னு சொல்றாங்க. உங்க கிட்ட செல்ஃப் கன்ட்ரோல் இல்லை. எங்களால சகிச்சிக்க முடியலை. பார்க்கறவங்க டிவியை ஆஃப் பண்ணிட்டு போயிட்டா, யாருக்காக நீங்க பெர்பார்ம் பண்ணுவீங்க?” என்றெல்லாம் விசே சாட்டையை சுழற்ற ‘என்னடா.. இது… மனுஷன் வந்தவுடனே பொளக்கறாரு’ என்று போட்டியாளர்களின் முகங்கள் இருண்டன.

“உங்களுக்காக ஸ்டோர் ரூம்ல ஒரு ஸ்பெஷல் டிரிங்க் வெச்சிருக்கேன்.. கொண்டு வாங்க” என்றார் விசே. வந்தது பச்சைக்கலரில் ஒரு திரவம். “நான் ஈஸியா குடிச்சிடுவேன்” என்றார் திவாகர். (நீ ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக் கூட குடிப்பியே?!’ - வினோத் மைண்ட் வாய்ஸ்) அனைவரும் ஒரு கல்ப் அடிக்க, கசப்பு தாங்காமல் வாந்தியெடுப்பது போன்ற நிலைமைக்கு சென்றார் அரோரா. “இந்த வாரம் நீங்க பண்ண வேலைகள்.. எங்களுக்கு இப்படித்தான் இருந்தது” என்று குறியீடாக உணர்த்தினார் விசே.
இன்னொரு பெரிய ஜக்கில் ஜூஸ் வந்தது. “முதலாளிகள், தொழிலாளிகள், QC அணியா பிரிஞ்சு உக்காருங்க. கேக்கற கேள்விக்கு சுத்தாம நேரடியா பதில் சொல்லுங்க. தப்பா சொன்னா இன்னொரு கல்ப் ஜூஸ் அடிக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார் விசே.
“எனக்கு யார் காலையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையா ஆடினேன். ஆனா QC-ல அநியாயமா ரிஜக்ட் செஞ்சாங்க” என்றார் எஃப்ஜே. “எனக்கும் திவாகருக்கும் முன்ஜென்ம விரோதம் இருக்கு சார்” என்று வினோத் ஆரம்பிக்க சபை கலகலத்தது. “இவருக்கு மாதுளம் பழம் ஊட்டணுமாம். முட்டை சாதம் கொடுக்கணுமாம்.. இவரைப் போற்றி ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்ன்னு பாட்டு பாடணுமாம்.. இல்லாட்டி பாட்டில் ரிஜக்ட் செய்வாராம்” என்று வினோத் புகார்களை அடுக்க “எனக்கு பழிவாங்கற எண்ணமில்ல. பாட்டில்ல அழுக்கு இருந்தது” என்று சமாளித்தார் திவாகர்.
“அப்ப நீங்க நேர்மையாத்தான் ஆடினீங்க.. இல்லையா?” என்று விசே நக்கலாக கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மந்தகாசமாக சிரித்து சமாளித்தார் வாட்டர் மெலன். திவாகர் வறுத்தெடுக்கப்படும்போது பாருவிற்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. வழக்கம்போல் விதம் விதமான முக சேஷ்டைகளை செய்ய விசேவிற்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. “பாரு.. இந்த மாதிரி பண்ணாதீங்க. அநாகரிகம். இதை பொறுத்துக்க எனக்கு அவசியமில்லை” என்று எச்சரித்தவுடன் நமக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.

“ஸ்ட்ராட்டஜி க்வீன். நீங்க சொல்லுங்க” என்று சுபிக்ஷாவை கூப்பிட்டவுடன் அவர் சங்கடத்தில் நெளிந்தார். “கேரக்ட்டரா மாறிட்டேன் சார்.. வெற்றிதான் என் நோக்கம்” என்று அவர் சொல்ல, ‘அய்யோ. அதை நான் தப்பு சொல்லல… திவாகரை ‘என்னங்க’ன்னு கூப்பிட வேண்டியிருந்ததுல்ல’ என்று விசே சொல்ல திவாகர் அசடு வழிந்தார். “என் கிட்டயும் டீல் பேசினாங்க.. ரம்யா கிட்டயும் பாரு டீல் பேசினாங்க. அதனால அவங்களை நம்பலை” என்று சுபிக்ஷா சொல்ல, பாருவின் முகம் அஷ்ட கோணலாகியது.
போட்டியாளர்கள் மழுப்பலாக பதில் சொல்ல “ஞாபகம் இருக்கட்டும். பாகற்காய் ஜூஸ் இருக்கு.. குடிக்க வேண்டியிருக்கும். நீங்க வாந்தியெடுத்தாலும் பரவாயில்ல. ஏன்னா.. ஏற்கெனவே இங்க நாறிடுச்சு” என்று சர்காஸத்துடன் காட்டமாக பேசினார் விசே.
‘லெஃப்ட்டில் கை காண்பித்து, ரைட்டில் இண்டிகேட்டர் போட்டு நேராக வண்டியை ஓட்டிய’ சுபிக்ஷா, கனியை ஏமாற்றிய கதையும் பஞ்சாயத்திற்கு வந்தது. ‘நீங்கதான் உங்க உரிமையை தட்டிக் கேட்கணும்” என்று கனிக்கு அறிவுறுத்திய விசே, எஃப்ஜேவுடனான நட்பின் காரணமாக கனி விளையாடியதையும் வெளிச்சம் போட்டு காட்டினார்.
துஷாருடன் கூட்டணி வைத்த ஆதிரை “எதிர்பார்த்த மாதிரி பாட்டில் வரலை. அவரால போட்டி போட்டுக்கொண்டு வர முடியலை” என்று சொல்ல “கீழே நாலு பாடி ஏற்கெனவே கிடக்கு சார். என்னால முடியலை” என்று துஷார் சொல்ல “முதல் நாள் ஓகே.. ரெண்டாவது நாளும் ஏன் முடியல.. நைன்த் ஸ்டாண்டர்ட் பையன்னு சொன்னா மட்டும் கோவம் வருதுல்ல?” என்று விசே குத்திக் காட்ட, அதற்கு நமட்டுச் சிரிப்பு சிரித்தார் கம்ரூதீன். “நீங்க சிரிக்காதீங்க கம்ருதீன். நல்லால்ல. நீங்களே எடுத்து பூசிக்காதீங்க. உங்க கேரக்ட்டரை நீங்களே வெளிச்சம் போட்டு காட்றீங்க” என்று அவருக்கும் ஒரு குட்டு வைத்தார் விசே.

சபரியுடன் டீல் போட்ட கலை “QC-ல ரொம்ப அநியாயம் பண்ணாங்க.. பாரு சும்மாவே ஆடுவாங்க.. இப்ப சலங்கை கட்டி விட்ட மாதிரி ஆயிடுச்சு. பம்முற ஒருத்தன் சபரிக்கும், கும்முற ஒருத்தன் எஃப்ஜேவிற்கும் பாட்டில் கொடுத்தேன்” என்றார்.
“QC ஆளுங்களுக்கு ஒரு க்ளோசப் அப் வைங்க சார்.. நீங்க பண்ணது எல்லாத்தையும் மக்கள் பார்த்தாங்க. எனக்கு கேட்க எதுவுமே இல்லை” என்று என்ன சொல்லியும் படிக்காத மக்கு மாணவனை தண்ணீர் தெளித்து விடும் வாத்தியார் போல நடந்து கொண்டார் விசே. ‘ஏதாவது பேசினால் விசே புரட்டி எடுத்து விடுவார் என்று பாருவிற்கு தெரிந்திருந்ததால் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் திவாகரோ “ஆக்சுவலி.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்று பேச ஆரம்பிக்க “ரொம்ப நியாயஸ்தான் மாதிரி பேசாதீங்க. உக்காருங்க” என்று விசே சொன்னவுடன் கப்சிப் என்று அமர்ந்தார் திவாகர்.

பாரு சும்மா இருந்தாலும் கன்டென்ட் வேண்டுமே? “ஏதாவது சொல்ல இருக்கா பாரு?” என்று விசே ஒரண்டை இழுக்க “அவங்களைப் பார்த்து எனக்கு அல்லு கலங்கிடுச்சு” என்று பாரு ஓவர் ஆக்ட் செய்ய “யாருக்கு.. உங்களுக்கா.. ஹாஹா.. என் கிட்டயே எப்படி பேசறாங்க பாருங்களேன்.. மக்களே” என்று நையாண்டியாகச் சிரித்தார் விசே. “இன்னும் சிரிப்பு தாங்கலை. பிரேக்ல போய் சிரிச்சிட்டு வரேன்” என்று கிளம்பியும் விட்டார்.
அடி வாங்கிய வலியை மறைத்துக்கொண்டு “பாசிட்டிவ் சொல்லும் போது ஏத்துக்கறோம். அந்த மாதிரி நெகட்டிவையும் ஏத்துக்கணும்.. என்ன சொல்ற பாரு” என்று கம்ருதீன் பெருமிதமாக சொல்ல “சேதுண்ணா சொன்னா அதுல விஷயம் இருக்கும்” என்று பம்மினார் பாரு.
பிரேக் முடிந்து திரும்பிய விசே “நிறைய சண்டைகளைப் பார்த்தேன். இந்த வீட்லயே யார் ரொம்ப தைரியசாலி?.. ஒவ்வொருத்தரா சொல்லுங்க” என்று கேட்க ‘சர்காஸத்துடன் கூடிய அந்தக் கேள்வியை போட்டியாளர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. கம்ருதீன், பார்வதி, திவாகர் போன்றவர்களுக்கு வாக்குகள் விழுந்தன. “நான் தைரியசாலியா என்னையே சொல்லிப்பேன். இந்த மாதிரி டேஞ்சரஸ் பீப்பிள் கூட ஆடறதுக்கு தனி தைரியம் வேணும்” என்று வித்தியாசமாக சொன்னார் வியன்னா.

QC அதிகாரியாக நோ்மையாக நடந்துகொண்ட திவாகருக்கு பாராட்டும் கிடைத்தது. போலவே அடாவடியாக நடந்துகொண்டு பாருவிற்கும் ஊமைக்குத்து. ‘குருட்டாம் போக்குல தைரியமா இருந்தார் திவாகர்’ என்று பாரு சொல்ல “அடடா.. என்ன மாதிரி சொற்பிரயோகம்.. வாழ்க’ என்று நக்கலடித்தார் விசே. அதற்கும் மந்தகாசமாக சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார் திவாகர். “திவாகரை நிறைய bullying பண்ணாங்க” என்று புகார் சொன்னார் சுபிக்ஷா.
வினோத் மீது ஆதிரை காலை வீசியது, கலையரசன் நாற்காலியை தள்ளியது, கம்ருதீன் செய்த வன்முறைகள், பாருவின் அலப்பறைகள், திவாகரின் சேஷ்டைகள், வினோத்தின் சில்மிஷங்கள் போன்றவற்றை கண்டித்த விசே “என்ன தைரியத்துல இதையெல்லாம் பண்றீங்க.. இதையெல்லாம் ஷோல காட்டுங்க. மக்கள் வாக்களிக்கற வரைக்கும் நான் காத்துகிட்டிருக்க மாட்டேன். நானே ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிடுவேன். எங்க தைரியத்தை காட்ட வச்சுடாதீங்க” என்று விசே காட்டமாக எச்சரிக்க, அனைவரும் தலையைக் குனிந்து மௌனமாக இருந்தார்கள்.
“கம்ருதீன்.. பாரு கிட்ட எல்லோரும் விவாதிக்கறாங்க. சண்டை போடறாங்க. ஆனா உங்களை அவாய்ட் பண்ணிட்டு போறாங்க. அது ஏன்னு உங்களுக்குப் புரியதா.. புரியலைன்னா யோசிங்க.. யாரும் உங்களுக்கு பயப்படலை. உங்களை தவிர்க்கறாங்க. கட்டுப்பாடோடு விளையாடுங்க. அந்த பாகற்காய் ஜூஸை எடுத்து ஃபிரிட்ஜ்ல வைங்க.. நாளைக்கும் தேவைப்படும்.. சில பேரைப் பத்தி சொல்லப் போறதில்ல. சொன்னா பார்ஷியாலிட்டி ஆயிடும். நாளைக்கு பார்ப்போம்” என்று விடைபெற்ற விசே, மக்களிடம் “எதையாவது கொளுத்திப் போடுவோம். என்ன நடக்குதுன்னு பார்ப்போம். யோசிப்பாங்கன்னு நம்பறேன்” என்று கிளம்பினார்.

விசே சொன்னது கம்ருதீனுக்குப் புரியவில்லை. கோக்குமாக்காக புரிந்துகொள்ள, அவரை சரியான திசைக்கு நடத்திச் சென்ற பாரு “நீயும் ஒரு வாட்டர்மெலன் ஸ்டாராடா?” என்று கேட்டு பங்கப்படுத்தினார்.
இன்று எவிக்ஷன் நாள். ஆதிரை வெளியேற்றப்படுவார் என்பது முன்பே தெரிந்து விட்டது. எஃப்ஜே - ஆதிரை செய்யும் இம்சைகளை இனி பார்க்க வேண்டியிருக்காது என்பதுதான் இதில் இருக்கும் பெரிய ஆறுதல்.




















