``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர...
BB Tamil 9: ‘அடடே, இவங்களா! அப்ப பிரச்னைக்கு பஞ்சமே இருக்காது' - தொடக்க விழாவின் மேக்ரோ பார்வை
விகடன்.காம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். இன்னொரு பிக் பாஸ் சீசனின் மூலமாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த 9வது சீசனில் 10 ஆண்கள், 10 பெண்கள் என்று மொத்தம் இருபது போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் முதல் ‘அகோரி’ கலையரசன் வரை பல வித்தியாசமான முகங்கள். ஆனால் சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பது மட்டுமே பிக் பாஸ் என்ட்ரிக்கான தகுதியாக ஆகி விடுமா?
மைக்ரோ சமூகத்தின் மூலம் ஒரு மேக்ரோ பார்வை:
பிக் பாஸ் இல்லத்தை ஒரு ‘மைக்ரோ’ சமூகம் எனலாம். பல்வேறு துறை, சமூகம், பின்னணி, வர்க்கம் சார்ந்த நபர்களை, அடைக்கப்பட்ட சூழலில் வைத்து செய்யும் பரிசோதனையாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். இவர்களின் செயல்கள், உரையாடல்கள், நடத்தைகள் போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை நம்மால் அறிய முடியும்.
இதற்கு போட்டியாளர்களின் தோ்வு என்பது முற்றிலும் தற்செயலானதாக, Random செலக்ஷனில் இருக்க வேண்டும். பிரபலம் என்பதற்கு மட்டுமே முன்னுரிமை தராமல், ஒரு கலவையான தொகுப்பை தேர்வு செய்யலாம்.

உதாரணத்திற்கு ஒரு வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் CEO வும், ஃபுட் டெலிவரி செய்யும் ஒரு நபரும் சில நாட்களுக்கு ஒன்றாக ஒரே வீட்டில் வாழ நேர்ந்தால் அவர்களின் கலந்துரையாடல் எப்படியிருக்கும்? ஒரு கல்லூரி பேராசிரியரும் விளிம்பு நிலை சமூகத்தின் இளைஞனும் பழகினால் எப்படியிருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட ஊடாட்டங்களின் மூலம் ஒரு சமூகத்தின் பல்வேறு உளவியல் அடுக்குகளை, பிரச்சினைகளை, சிக்கல்களை நம்மால் உணர முடியும்.
அது இந்த நிகழ்ச்சியின் தரத்தை சிறப்பானதாக்குவதோடு சமூகப் பரிசோதனை என்கிற முறையிலும் ஆக்கப்பூர்வமானதாக அமையும். ஆனால் இந்த ஃபார்மட் பார்வையாளர்களுக்கு சுவாரசியமானதாக இருக்குமா என்பது கேள்வி.
பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி பிரதானமாக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமூக பரிசோதனை என்பதை விடவும் பிரபலமான முகங்களுக்குத்தான் அவை முன்னுரிமை தரும். அப்படிப்பட்ட நபர்களைத்தான் பார்வையாளர்களும் ஆர்வமாக கவனிப்பார்கள். ஆனால் சமூக வலைதளம், மீடியா போன்றவற்றின் மூலம் வெளிச்சம் பெற்றிருப்பது மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கான ஒருவருக்கு அளிக்கும் என்பது துரதிர்ஷ்டவசமானது.
இந்த 9-வது சீசனில் பிரபலம் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் ஆறுதலாக வெவ்வேறு பின்னணிகளைச் சார்ந்திருப்பவர்கள் சிலரும் வந்திருப்பது சிறப்பு. உதாரணத்திற்கு 15-வது போட்டியாளராக நுழைந்த, மீனவ சமூகத்தைச் சேர்ந்த சுபிக்ஷாவைச் சொல்லலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - துவக்க நாள்
சங்கு சக்கர பட்டாசு பற்றி எரிகிற கருப்பு நிற சூட்டில், ஃபிட்டான தோற்றத்துடன் வந்தார் விஜய் சேதுபதி. முதலில் சீசன் 9-க்கான வீட்டை சுற்றிக் காட்டினார். அடடா! வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது வரை வந்த சீசன்களிலேயே இந்த 9வது சீசன வீடுதான் டாப் எனலாம்.
ஓர் அட்டகாசமான ராயல் லுக் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் இருக்கிறது. அப்படி பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.
அரண்மணை போன்ற தோற்றத்தில் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் ரகளையான வண்ணங்களில் அற்புதமான வடிவமைப்புகள்.
ஆர்ட் டிபார்ட்மென்ட்டின் அசுரத்தனமான உழைப்பிற்கு மிகப் பெரிய வந்தனம். நவீன விட்டலாச்சார்யா பட செட்டிற்குள் நுழைந்தது போல் விசித்திரமான உருவங்களும் இருந்தன.

முந்தைய சீசன்களில் ஓரமாக இருந்த கிச்சன் ஏரியா இந்த முறை நட்ட நடுவே வந்திருக்கிறது. பஞ்சாயத்து ஓவராக நடக்கும் என்பதால் முன்னுரிமை தந்திரு்ககிறார்கள் போல.
நீர்க்குழாய் பாம்பு வடிவில் இருப்பது ஒரு குறியீடு போல. பிறகு தண்ணீரை வைத்தே தன் ராஜதந்திர ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். (லட்டுல வச்சேன்னு நெனைச்சியா தாஸ்.... நட்டுல வச்சேன்..’ மொமன்ட்).
‘ஆரம்பமே கண்ணைக் கட்டுதே’... - வாட்டர்மெலன் ஸ்டார்
தனக்குத் தானே ‘நடிப்பு அரக்கன்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிற திவாகர் முதல் போட்டியாளராக உள்ளே வந்தார். பிக் பாஸ் இன்டர்வியூக்களின் போது துறை சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லி அசத்தியதாக விசே பாராட்டினார்.
மருத்துவம் சார்ந்த இந்த முகத்தை திவாகர் அடிக்கடி வெளிப்படுத்தலாம். மாறாக `கர்ணன்' படத்தில் சிவாஜி இறந்து போகும் காட்சி, `அந்நியன்' படத்தின் காட்சி போன்றவற்றையே தொடர்ந்து செய்து காண்பித்து தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது கொஞ்சம் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது.

“ஆயிரம் போ் எதிர்த்தா கூட அதை சமாளிச்சு முன்னேறுகிற திறமை என்னிடம் இருக்கிறது” என்ற திவாகர் “சார்.. ஒரு சீன் நடிச்சுக் காண்பிக்கட்டுமா?” என்று விசேவிடம் கேட்க, அவர் ஜெர்க் ஆகி “அதெல்லாம் வேணாம் பாஸூ.. உங்களை நிரூபிக்க ரொம்ப டிரை பண்ணாதீங்க” என்று கலாய்த்தது சுவாரசியம்.
மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆரம்பத்தில் ஏதாவது கிம்மிக்ஸ் செய்வது கூட ஓகே. ஆனால் அதையே தொடர்ந்து செய்து வந்தால் இருக்கிற இடமும் சீக்கிரம் காலியாகி விடும் என்கிற உண்மையை திவாகர் புரிந்து கொண்டால் சரி.
ஆனால் வீட்டிற்குள் சென்ற பின்னரும் “பாஸ்.. உங்க வீடியோல்லாம் சூப்பர். அந்த கர்ணன் சீன் நடிங்களேன்” என்று யாரோ டைம்பாஸூக்கு உசுப்பி விட, உடனே திவாகர் ஸ்விட்ச் போட்டது போல முகத்தை மாற்றிக் கொண்டு மலச்சிக்கலால் அவதிப்படுவது போல விஸ்வரூப நடிப்பை வெளிப்படுத்தியது கோவம் வருவது போன்ற காமெடி காட்சி. (இதையெல்லாம் தடுக்கும் வகையில் யாராவது பொது நல வழக்கே போடலாம்!. குறிப்பாக நடிகர் சிவாஜி, விக்ரம் குடும்பத்தினர்!).

இரண்டாவது போட்டியாளராக வந்தவர் அரோரா. (Aurora Sinclair). மாடலிங் துறை. சோஷியல் மீடியா புகழ் கொண்ட இவருக்கு இன்னொரு திருநாமம் இருப்பதை இப்போதுதான் அறியும் பாக்கியம் பெற்றேன். மாடலிங் தாண்டி சர்ச்சையான வீடியோக்களினாலும் கவனம் பெற்றவர் போல.
மூன்றாவது போட்டியாளராக நுழைந்தவர் F J. இந்த இரண்டு எழுத்தைத் தவிர தனது இயற்பெயரை சொல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்தார்.
FJ Adhisayam என்கிற பெயரில் சோஷியல் மீடியா பிரபலம். ‘சுழல்’ என்கிற வெப்சீரிஸ், அரண்மணை 4 திரைப்படம் போன்றவற்றில் நடித்திருக்கிறார். ‘டுப்புசிக்கு டுப்புசிக்கு’ என்று வாயாலேயே இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ‘Beatboxing’ என்கிற விஷயத்தை செய்கிறார். துறுதுறுவென ஹைப்பர் எனர்ஜியுடன் இருக்கும் F J, பிக் பாஸ் ரொமான்ஸ் சர்ச்சைகளில் மாட்டுவாரா?
‘அடடே.. இவரா.. அப்ப பிரச்சினைக்கு பஞ்சமே இல்ல’:
நான்காவதாக நுழைந்தவர் விஜே பார்வதி. ‘பாரு’ என்பது சமீபத்திய பரிணாம பெயர் போலிருக்கிறது. முந்தைய சீசன்களில் எல்லாம் இவரது பெயர் அடிபட்டது.
இப்போது உண்மையாகி இருக்கிறது. சீரியல் மற்றும் யூட்யூப் பிரபலம். பார்வதி இருக்கும் இடத்தில் பாடாவதி பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது என்பதால் சர்ச்சைகளின் நாயகியாக இந்த சீசனில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
5வது போட்டியாளராக வந்தவர் துஷார். இப்போதைய 2கே கிட்ஸ்களிடம் கொரியன் கலாசாரத்தின் தாக்கம் அதிகமிருப்பதால் அங்கிருந்துதான் ஒருவரைப் பிடித்து வந்து விட்டார்கள் போல என்று பார்த்தால்.. இல்லை. தமிழ்ப் பையன்தானாம்.
பாட்டி சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்பதால் அப்படியான தோற்றம். தந்தையின் தொடர்ச்சியான பணிமாற்றம் காரணமாக பல்வேறு ஊர்களில், மனிதர்களுடன் புழங்கியிருப்பது பிக் பாஸ் ஆட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.

ஆறாவது போட்டியாளர் ‘காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட்’ கனி. சின்னத் திரை பிரபலம். ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியில் விருது பெற்றவர். இயக்குநர் அகத்தியனின் மகள்.
இவரது சகோதரியான விஜயலஷ்மி, பிக் பாஸ் சீசன் 2-ல் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்து இரண்டாவது ரன்னர் அப்பராக வெற்றி பெற்றவர்.
கனி கார்த்திகா சமையல் திறமை கொண்டிருப்பதால் இந்த சீசனின் தவிர்க்க முடியாத போட்டியாளராக இருக்கக்கூடும்.
இயக்குநர் அகத்தியன் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவருடன் விசே ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. (எடிட்டிங்கில் போய் விட்டதோ?!)
சீரியல் நடிகர்கள் முதல் சினிமா இயக்குநர் வரை:
ஏழாவதாக உள்ளே வந்தவர் சபரி. சீரியல் நடிகர். பெரும்பாலான சக போட்டியாளர்களை இவருக்கு தெரிந்திருக்கிறது. எனவே பலரையும் வீட்டிற்குள் வரவேற்பதில் ஆர்வம் காட்டினார்.
நீர்ப்பற்றாக்குறை பிரச்சினைக்கு இவர் தந்த ஐடியாவை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். எனவே இந்த சீசனின் முக்கியமான போட்டியாளராக இருப்பார். முதல் வாரத்தின் கேப்டனாக ஆனால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை.
எட்டாவதாக வந்தவர் இயக்குநர் பிரவீன் காந்தி. ரட்சகன், ஜோடி போன்ற ஹிட் படங்களைத் தந்தவர். பிறகு சில தோல்விப் படங்களைத் தொடர்ந்து காணாமல் போனார். சர்ச்சையான பேச்சுக்களின் காரணமாக மீண்டும் கவனம் பெற்றார்.

‘எங்கே வீழ்ந்தேன்’ என்பதை மற்றவர்களுக்கு சொல்லி நம்பிக்கையை விதைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பதாக சொல்கிறார். சொல்ல வந்த பன்ச் டயலாக்கை சொல்லியே தீருவேன் என்று விசேவிடம் மேடையில் அடம்பிடித்த பிரவீன் காந்தியின் மூலம் வீட்டிற்குள் சில சச்சரவுகள் ஏற்படக்கூடும்.
“இங்க வந்திருக்கிறவங்க எல்லாம் விஜே.. ஆர்ஜேன்னு ரொம்ப காலமா பிரபலமாக இருக்கறவங்க.. ஆனா நான் பாருங்க.. ஒரே வருஷத்துல ஃபேமஸ் ஆயிட்டேன்.. அதுக்கு எனக்குள்ள இருக்கிற விஸ்வரூப நடிப்புத் திறமைதான் காரணம்.
இன்னமும் சொல்றேன் கேளுங்க” என்று நடிப்பு அரக்கன் தொடர்ந்து அனத்திய போது ‘குட்.. குட்’ என்று சொல்லி அங்கிருந்து சாமர்த்தியமாக எஸ்கேப் ஆனார் பிரவீன் காந்தி (உஷார்தான்!)
9வது போட்டியாளராக வந்தவர் கெமி. மாடலிங் மற்றும் சின்னத் திரை பிரபலம். கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி அங்கு நடந்த அரசியல் காரணமாக கசப்புடன் வெளியேறியிருக்கிறார்.
இவரது பின்னணி உருக்கமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஆங்ரி பேர்டாக இருப்பதால், பிக் பாஸ் சண்டைகளுக்கு காரணமாக இருப்பார் என்று தோன்றியது.
‘நீங்க வெறும் தாஸா, லாடு லபக்கு தாஸா?’ என்கிற காமெடி காட்சி மாதிரி, ‘நீங்க உண்மையாலுமே டாக்டரா, பிஸியோதெரபிஸ்ட்தானே?’ என்று திவாகரிடம் கேட்டு ஆரம்ப நாளிலேடயே ஒரண்டை இழுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல சகுனம்.

பத்தாவது போட்டியாளர் ஆதிரை. பிகில் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். பல வருட ஹாஸ்டல் அனுபவம் இருப்பதால் பிக் பாஸ் வீட்டை சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறார். பார்க்கலாம்.
11-வது போட்டியாளர் ரம்யா ஜோ. ஆடல்பாடல் கலைஞர். இவரது பின்னணியும் உருக்கமானதாக இருக்கிறது. பெற்றோர்களை இழந்த நிலையில் சகோதரிகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்திருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இவர் ஆடுவதற்கு வீட்டில் எதிர்ப்பும் ஆதரவும் கலந்து வந்திருக்கிறது. சாமானியர்களின் பிரதிநிதியாக இவர் இருக்கலாம்.
ஒன்பதாவது சீசனின் ‘சௌந்தர்யா’வாக இருப்பாரா வியன்னா?
12-வது போட்டியாளராக வந்தவர் வினோத் குமார். வடசென்னையிலிருந்து ஒரு பிரதிநிதியை இறக்குவது பிக் பாஸ் ஸ்டைல். அந்த வகையில் ‘கானா’ பாடகரான வினோத் களம் இறங்கியிருக்கிறார்.
சொந்தமாக வரிகளைப் போட்டு பாடும் திறமையுள்ள இவருடைய திறமை, பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கலாம்.
13-வது என்ட்ரி ‘வியன்னா’, பியானா ஒலியைப் போல பேசும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஹீரோயின் ஹாசினியை நினைவுப்படுத்துகிறார்.
நடிகர் விவேக் லேடிகெட்டப்பில் ‘என்ன சொல்றே.. நீ என்னதாண்டா சொல்றே?’ என்று ஹஸ்கி வாய்ஸில் பேசுவது போல கொஞ்சு தமிழில்தான் பேசுகிறார்.
இவர் செய்த அலப்பறை காரணமாக விசேவால் மேடையிலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த சீசனின் ‘சௌந்தர்யா’வாக வியன்னா இருக்கலாம்.

14வது போட்டியாளர் பிரவீன் ராஜ்தேவ். டிவி சீரியல் நடிகர். ஸ்போர்ட்ஸில் நிறைய ஆர்வம். ஹாலிவுட் படங்களில் நடிப்பது இவரது லட்சியமாம்.
இவருக்கும் இயக்குநர் பிரவீன் காந்திக்கும் இடையே பெயர்க்குழப்பம் நிகழலாம். பிஸிக்கல் டாஸ்க்கில் வெற்றி பெறுவதன் மூலம் ஆட்டத்தில் நீடித்திருக்க வாய்ப்புண்டு.
15-வதாக வந்தவர் சுபிக்ஷா. மீனவர் சமூகத்தின் பெண். ஊரார் புறணி பேசினாலும் தன் தந்தைக்கு உதவியாக படகில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்றிருக்கிறார். ‘கடல் அலை எழலாம். விழலாம். ஆனால் எப்போதும் ஓயாது’ என்று இவர் பேசிய பன்ச் டயலாக் சுவாரசியமாக இருந்தது. ‘ரொம்ப இன்ஸ்பயரிங்கா இருக்குல்ல’ என்று விசே பாராட்டினார். ‘என்னைப் போன்ற எளிய பின்னணி கொண்டவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தப் போட்டியில் ஆடுவேன்’ என்கிற சுபிக்ஷா, இந்த சீசனின் கவனிக்கத்தக்க ஆட்டக்காரராக இருப்பார் என்று நம்புவோம்.

‘உலக அழகி’ முதல் ‘உள்ளுர் அகோரி வரை
16-வது என்ட்ரி - அப்சரா. Transwoman. ஐந்தாவது சீசனில் வந்த நமீதா மாரிமுத்து உடனடியாக வெளியேறி விட்டாலும் ஆறாம் சீசனில் வந்த ஷிவின் முக்கியமான போட்டியாளராக செயல்பட்டார். அந்த வரிசையில் அப்சராவும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளிம்பு நிலை சமூகத்தினரும் இப்படிப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது நல்ல விஷயம்.
17வது போட்டியாளர் - நந்தினி - ஸ்போர்ட்ஸில் நிறைய ஆர்வம் கொண்டவர் என்பதால் பிஸிக்கல் டாஸ்க்குகளில் பெருமளவு முன்னேறக்கூடியவராகத் தோன்றுகிறது.
18வது போட்டியாளர் விக்கல்ஸ் விக்ரம். ஸ்டாண்ட் அப் காமெடியன். சாங் ரிக்கார்டிங் என்கிற பெயரில் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை வைத்து இவர்கள் செய்த வீடியோ அலப்பறைகள் இணையத்தில் மிகவும் பிரபலமானது.
இந்த டீமின் கிண்டலை ஏஆர் ரஹ்மானே ரசித்து வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 9-ம் சீசனின் கலகலப்பிற்கு விக்ரம் முக்கிய காரணமாக இருப்பாரா என்பதைக் காத்திருந்து காண வேண்டும்.
19-வது வருகையாளர் - கம்ருதீன் - சீரியல் நடிகர் மற்றும் ஃபிட்னெஸில் நிறைய ஆர்வம். மேடையில் தயங்கி தயங்கிப் பேசிய இவரை “மச்சான்.. இது நீ இல்ல. நல்லா பேசு.. சிறப்பா ஆடிட்டு வா” என்று இவருடைய நண்பர் உற்சாகமாக ஆதரவளிக்க “உங்க பிரெண்டா ஆகணும்னா என்ன செய்யணும்” என்று கேட்டு அந்தக் கணத்தை சுவாரசியமாக்கினார் விசே.

20-வது மற்றும் கடைசி போட்டியாளர் - கலையரசன். ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் பாத்திரத்தைப் போல இவரது கதை இருக்கிறது.
நடனக்கலைஞராக இருந்த இவர் திடீரென காசிக்குச் சென்று ஞானம் பெற்று தன்னை அகோரியாக அறிவித்துக் கொண்டு அருள் வாக்கு சொன்னவர். இதன் காரணமாக குடும்பத்தில் பிரிவு.
அதன் பிறகு நிறைய வில்லங்கமான சர்ச்சைகள். இப்போது மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். ‘இவரெல்லாம் போட்டியாளரா.. என்னமோ போங்க’ என்கிற கமென்ட்டுகளை முதல் நாளிலேயே பெற்று வருகிறார். வித்தியாசமான போட்டியாளராக கலையரசன் இருப்பாரா?
சிவப்பா .. நீலமா..? நிறத்தை வைத்து டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ்
மேடையில் வந்த போட்டியாளர்கள் அனைவரிடமும் சிவப்பு, நீலம் ஆகிய இரு நிறங்களில் இருந்து ஒரு பேட்ஜை தேர்ந்தெடுக்கச் சொன்னார் விசே. “இந்தத் தேர்வு ஆட்டத்தின் ஆரம்பத்திற்கு உதவும் அல்லது பாதிக்கும். எனவே கவனமாக தேர்ந்தெடுங்கள்’ என்று எச்சரிக்கையும் தந்தார்.
இது என்னவாக இருக்கும் என்கிற சஸ்பென்ஸ் வீட்டிற்குள் தெரியவந்தது. வீட்டிற்குள் இரண்டு விதமான படுக்கையறைகள் இருந்தன.
ஒன்று, வழக்கமான வசதிகளுடன் கூடிய பெட்ரூம். இன்னொன்று மிக ஆடம்பரமான வசதிகளுடன் கூடிய சூப்பர் டீலக்ஸ் பெட்ரூம். Jacuzzi bathtub உள்ளிட்ட பணக்காரத்தனம்.
மெஜாரிட்டியாக பலரும் சிவப்பு நிறத்தை தோ்ந்தெடுத்ததால் அவர்களுக்கு வழக்கமான பெட்ரூம் கிடைத்தது. நீல நிறத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட். அவர்களுக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படுக்கையறை வசதி. இந்த ஆரம்ப அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம்.

பாம்பு வடிவில் ‘வாட்டர் சதி’ - திணறிய போட்டியாளர்கள்
இதைப் போலவே உள்ளே வந்த போட்டியாளர்களுக்கு உடனேயே ஒரு டாஸ்க் தரப்பட்டது. நீர்க்குழாயை திறப்பதா அல்லது மூடுவதா என்பதைத் தோ்வு செய்வதின் மூலம் விளைவுகள் இருக்கும் என்று சொல்லப்பட்டது. இது என்ன மாதிரியான டாஸ்க் என்பது அந்த பிக் பாஸிற்குத்தான் வெளிச்சம். ஒன்றும் புரியவில்லை. பாத்ரூம், கிச்சன் என்று எங்குமே தண்ணீர் வராமல் கையில் கிடைத்த பக்கெட், குடம் போன்றவற்றில் எல்லாம் பிடித்து வைத்துக் கொண்டார்கள். பார்வதிக்கும் கனிக்கும் இடையே குழாயடிச் சண்டை போல ஆரம்பத்திலேயே ஓர் உரசல் ஏற்பட்டது நல்ல சகுனம்.
‘குழாயில தண்ணி வரலைங்க’ என்று உள்ளே சென்ற கெமி அலறிக்கொண்டே வெளியே வந்தார். இத்தனை ஆடம்பரமான வீட்டை கட்டி விட்டு முதல் நாளிலேயே கலீஜ் ஆக்குவது நியாயமா பிக் பாஸ்?, ஆரம்ப போட்டியாளர்கள் கோட்டை விட்ட நிலையில், டாஸ்க் லெட்டரை திறந்து வாசித்த கனிக்கு சிறப்பு பாராட்டை தெரிவித்தார் பிக் பாஸ். முதல் பென்ச் மாணவன் போல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் கனி.
‘வெளியில் இருக்கும் வாட்டர் டாங்க் மட்டும்தான் நீர் ஆதாரத்திற்கான ஒரே வழி’ என்று அதிரடியாக தெரிவித்த பிக் பாஸ் “போட்டிகள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக இருக்கும். ஜாக்கிரதை’ என்று எச்சரித்து விட்டு ‘குட் நைட்’ என்றும் இனிமையாக சொல்லி போட்டியாளர்களை அவரவர்களின் பெட்ரூம்களுக்கு அனுப்பினார்.

பெட்ரூம் பிரச்சினை, நீர்ப் பிரச்சினை என்று ஆரம்பத்திலேயே களை கட்டி இருக்கிறது. நடிப்பு அரக்கன், காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட், அகோரி என்று போட்டியாளர்களின் வரிசையும் தாறுமாறாக இருக்கிறது. என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடக்க நாளை வைத்து ஒன்றும் முடிவு செய்ய முடியாது என்றாலும் ஆரம்பத்திலேயே மனம் கவர்ந்த போட்டியாளர் ஒருவரையும் “இவரையெல்லாம் போய்.. ஏங்க..’ என்று நினைக்கிற போட்டியாளர் ஒருவரையும் கமென்ட்டில் சொல்லுங்கள்.