செய்திகள் :

BBTAMIL 8: DAY 55: 'நம்மையும் சேர்த்து சுத்த விடுகிறார்களா...' - ஏன் இப்படி விசே?

post image
இது யாருடைய தவறு? பிக் பாஸ் டீமின் திறமையற்ற இயக்கமா? போட்டியாளர்கள் மட்டும்தான் சொதப்புகிறார்களா? “என்னை ரொம்ப சுத்த விடறீங்க?’ என்று ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களிடம் புலம்பும் விஜய் சேதுபதி நம்மையும் சேர்த்து சுத்த விடுகிறாரா? புரியவில்லை.

இப்போதெல்லாம் ‘புயல் அறிவிப்பு’ வந்தால் கூட சமாளித்துக் கொள்ளலாம் என்று துணிச்சல் வந்து விடுகிறது. ஆனால் வார இறுதி எபிசோடுகள் வருகிறது என்றாலே ‘இந்த வாரம் இந்த மனுஷன் என்ன பண்ணப் போறாரோ?’ என்று பீதியாகி விடுகிறது. இந்த வாரத்தின் எபிசோடு அந்த அளவிற்கு இழுவை.

 ‘ஒரு புறாவிற்கு அக்கப்போரா’ காமெடி மாதிரி ஒரு சின்ன வழக்கிற்கு  சுப்ரீம் கோர்ட்டு வரை வாய்தா வாங்குவது  கண்ணைக் கட்ட வைக்க வைக்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 55

“கோட்டை அழிச்சிட்டு தனியா ஆடச் சொன்னா, புயல் மாதிரி சேதம் பண்ணி வெச்சிருக்காங்க.. வாங்க விசாரிப்போம்” என்று வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் விசே. அருணின் பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலகமாக நடந்தது. அவருக்காக கேசரி கேக் செய்து குங்குமப்பூ டாப்பிங் எல்லாம் வைத்து சக போட்டியாளர்கள் பாசத்தைக் கொட்டினார்கள். போதாதற்கு Harley Quinn கேக்கும் லெட்டரும் அனுப்பியதில் ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’. 

BBTAMIL 8: DAY 55

“இந்த வீட்ல பிரெண்ட்ஷிப்பும் கிடையாது. லவ்வும் கிடையாது. யாரோட ஃபீலிங்க்ஸையும் காயப்படுத்தக்கூடாதுன்னு நாங்க ரெண்டு பேருமே தெளிவா இருக்கோம்” என்று ‘பொம்மை’ தண்டனையில் இருந்த  ராணவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார் விஷால். விஷாலின் தரப்பு மிகத் தெளிவாக இருந்தாலும் அவரும் தர்ஷிகாவும் நடந்து கொள்ளும் விஷயங்கள் அவ்வாறு இல்லை. கூட இருக்கும் பவித்ரா, ஆனந்தி, அன்ஷிதா போன்றவர்கள் காண்டாகும் அளவிற்கு இந்த ஜோடியின் ‘லவ் டிராக்’ அமைந்திருக்கிறது. ஷோவின் சுவாரசியத்திற்காக இவர்கள் செய்கிறார்கள் என்றால் இது முழுமையான ஃபெயிலியர் ஆக்ட். 

ஜெப்ரி சாச்சனாவிற்காக கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்கப் போகிறாராம். ‘யார் கிட்டயும் சொல்லாத’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு வீடு முழுக்க இதை பேசிக் கொண்டிருந்தார்கள். பொம்மை டாஸ்க்கில் வென்று ‘நாமினேஷன் ஃப்ரீ பாஸை’ ஜெப்ரி வைத்திருப்பதால், இறுதி வரை போராடித் தோற்ற சாச்சனாவிற்கு கேப்டன் பதவியை ஆறுதல் பரிசாக தர விரும்புகிறாராம். இப்படியெல்லாம் தியாகம் செய்தால் ‘நல்லவன்’ என்கிற தோற்றத்தை மக்களுக்கு அளிக்கலாம் என்று நினைக்கிறார்கள் போல. நல்லவனாக இருப்பது வேறு. ஸ்போர்ட்டிவ்தன்மையுடன் இருப்பது வேறு. பின்னதில் எதற்காகவும் விட்டுத்தர வேண்டியதில்லை. 

BBTAMIL 8: DAY 55

முத்துவின் பேச்சுத்திறமை குறித்து அருண் சர்காஸம் செய்ய, பதிலுக்கு “அதை வெச்சுதானே போன முறை டைட்டில் வின் பண்ணியிருக்காங்க” என்று முத்து ஊமைக்குத்தாக குத்தியதில் அருண் அப்செட் ஆனார். ‘இதை பர்சனல் தாக்குதலாத்தான் பார்க்கிறேன்’ என்று சொன்ன தீபக் இருவருக்குமான பஞ்சாயத்தை ஏற்பாடு செய்தார். வழக்கம் போல் முத்து அணிந்துரை, பொழிப்புரை, நன்றியுரையெல்லாம் சொல்லி அருணைக் குழப்பி கையைக் குலுக்கி விட்டார். முத்துவின் கமெண்ட்டை ‘பர்சனல் தாக்குதல்’ என்று சொல்ல முடியாது. ஒருவரின் திறமையைத்தான் அவர் சர்காஸ்டிக்காக பாராட்டியிருக்கிறார். பதிலடி தாக்குதலில் குத்தலாக பயன்படுத்திய போது அது தவறான தோற்றத்தை அளிக்கிறது. 

விசேவின் ஹோஸ்டிங் - ஆரம்பத்தில் காமெடி, பிறகு டிராஜிடி


வீட்டிற்குள் வந்தார் விஜய்சேதுபதி. அருணின் பிறந்த நாளுக்காக இவர் வாழ்த்த, அருண் கையெடுத்துக் கும்பிட “இந்தக் கும்பிடுதலை நல்லபடியா எடுத்துக்கலாமா?” என்று ஆரம்பத்திலேயே ஒரு நகைச்சுவை பவுண்டரியை அடித்தார் விசே. இப்படியே எபிசோடு முழுக்க சர்காஸ குண்டூசிகளாக சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

தனக்கு வழங்கப்பட்ட சாக்லெட்டுக்களை ஒவ்வொருத்தரையும்  உறவு முறை சொல்லி அருண் தர வேண்டும். ரஞ்சித்தை ‘மச்சி’ என்று சொல்லி ஜாலியாக அலற விட்டார் அருண். இப்படியே ஒவ்வொருவரையும் மச்சி..மச்சான்.. என்று அழைத்தது சுவாரசியமான காட்சி. மஞ்சரியிடம் மட்டும் ‘மேம்’ என்று அழைத்தது நக்கல். (அந்தப் பயம் இருக்கணும்டா!).

BBTAMIL 8: DAY 55

“கோட்டைக் கலைச்சப்புறம் ஆட்டத்துல சூடு பிடிச்சுதா.. எப்படி இருந்தது?” என்று விசே விசாரிக்க “அய்யோ.. அதை ஏன் சார் கேக்கறீங்க..  ஒரே கலவரம்தான். அவனவன் அரிவாளை எடுத்துட்டு குறுக்கும் நெடுக்குமா ஓடறான். இன்னொரு பக்கம் சவுந்தர்யா தலையை விரிச்சுப் போட்டு பப்பரப்பே’ன்னு ஆடுது.” என்று காமெடியாக தீபக் விவரிக்க அதை ரசித்துக் கேட்டார் விசே. “முதல் வாரத்திற்கு போயிட்ட மாதிரி இருந்தது” என்றார் விஷால். “எந்தத் தடையும் இல்லாத மாதிரி ஃபீல் ஆச்சு” என்றார் ஆனந்தி. “இரண்டு டீமா இருந்தது போயி நெறய டீமா ஆயிட்டாங்க” என்று உண்மையைச் சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார் ராணவ். (ஹே.. சூப்பர்ப்பா!).

‘ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கு” என்று புலம்பிக் கொண்டிருந்த பவித்ரா, இப்போது பிளேட்டை மாற்றி “சுதந்திரமா இருந்தது’ என்றார். “உங்க சட்டை நல்லாயிருக்கு முத்து” என்று விசேவால் பாராட்டப்பட்ட முத்து என்ன சொன்னார் என்றால் “எட்டாவது சீசன்ல எட்டாவது வாரம்தான் பெஸ்ட். இதுதான் பென்ச்மார்க் வாரம். நல்லாவே சோறு போட்டாங்க.  காஸ்ட்லியான ஹாஸ்டல்ல தங்கியிருந்த மாதிரி இருந்தது” என்று சர்காஸமாகச் சொல்ல  “நீங்க சொல்றது முரணா இருக்கே” என்று கட்டையைப் போட்டார் விசே. 

சத்யாவைப் பேச வைத்த விசே

“ஏதாவது பேசுங்க சத்யா.. உங்க குரலைக் கேக்கறதுக்குத்தான் நான் ஓடி வரேன்” என்று விசே உசுப்பி விட்டதால் வழக்கம் போல் அசட்டுத்தனமான சிரிப்புடன் எழுந்த சத்யா “நண்பனா இருந்தவன் எதிரி ஆயிட்டான்.. எதிரியா இருந்தவன் நண்பன் ஆயிட்டான். உதாரணத்திற்கு நானும் ஜாக்குலினும் பிரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஆரம்பத்துல நண்பர்களா இருந்த விஷாலும் ஜாக்கும் எதிரி ஆயிட்டாங்க” என்று சொல்ல “அட! இது நல்லாயிருக்கே?!” என்பது மாதிரி டாப்பிக்கை மாற்றி இதையே வைத்து உரையாடலைத் தொடர்ந்தார் விசே. பிறகு வந்தவர்களும் இந்த ரூட்டில் பயணித்தார்கள். 

BBTAMIL 8: DAY 55

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த அருணும் முத்துவும் இப்போது தல -தளபதி மாதிரி இருக்கிறார்கள் என்பதை பலரும் குறிப்பிட்டார்கள். “அணியா இருந்தாங்க. இப்ப தனியா இருக்காங்க” என்று பன்ச் வசனத்தில் ரஞ்சித் சொன்னதை விசே மிகவும் ரசித்தார். “நண்பர்களாக இருந்த பவித்ரா - தர்ஷிகா இடையே விரிசல் வந்துடுச்சு” என்று சாச்சனா சொல்ல “அப்ப எதிரிகளா  யார் இருக்காங்க?” என்று போட்டு வாங்கினார் விசே. 

சவுந்தர்யா எழுந்த போது பயங்கர கைத்தட்டல் ‘அய்யோ.. வெட்கம் வெட்கமா வருதே’ என்று புன்னகைத்த சவுண்டு “நானும் தீபக்கும் இப்போ ரொம்ப பிரெண்ட்ஸா மாறிட்டோம்” என்றார். (சார்ஜெண்ட் பதவியின் காரணம் போல!). “எலியும் பூனையுமா இருந்த ஜெப்ரியும் சாச்சனாவும் இப்ப பிரெண்டாயிட்டாங்க” என்று இன்னொரு பாயிண்ட்டைச் சேர்த்துக் கொண்டார் சவுண்டு. 

“ஏன்.. ஒவ்வொரு வாரமும் எல்லோரும் ஒரே பேட்டர்ன்ல உக்கார்றீங்க. மாறி மாறி உக்காருங்க” என்ற விசே, ரஞ்சித்தை நடுவில் அமர வைத்து அழகு பார்த்தார். “சார். ஐம்பது நாள் ஆச்சு. நல்லாப் பேசுங்க சார்.. சாச்சனா சொன்ன மாதிரி-ன்னுல்லாம் பின்னாடி ஒளியாதீங்க. உங்க கருத்தை நல்லா சொல்லுங்க. தப்பா ஆனாலும் என்ன இப்போ?” என்று விசே ஊக்கம் தந்தது பாராட்டத்தக்க விஷயம். 

BBTAMIL 8: DAY 55

அடுத்த தலைப்பிற்கு வந்த விசே “தனியா ஆடறதால என்ன மாற்றம் தெரிஞ்சது.? சத்யா… ஏதாவது பேசுங்க.. பேசினாதானே தெரியும்?” என்று அவரையும் கோர்த்து விட “கால் வெக்கற இடமெல்லாம் கண்ணி வெடியா தெரியுது. நானெல்லாம் ஆயில் ஊத்தி மெதுவா ஸ்டார்ட் ஆகற ஜெனரேட்டர் மாதிரி இருந்தேன். மத்தவங்கள்லாம் யூபிஎஸ் மாதிரி டக்குன்னு பத்திக்கிட்டாங்க” என்று அவர் சொல்ல “பார்த்தீங்களா.. உங்களுக்கு நல்லா பேச வருது… அப்படியே கண்டினியூ பண்ணுங்க. தப்பா வந்தாலும் என்ன இப்போ?” என்று உற்சாகப்படுத்தினார் விசே. 

‘காஸ்ட்லி ஹாஸ்டல் மாதிரி இருந்தது’ - சர்காஸ்டிக் முத்து

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய விசே, “முத்து மறுபடியும் சொல்லுங்க.. அது என்ன காஸ்ட்லி ஹாஸ்டல்? புரியல” என்று கேட்க “இந்த ஹாஸ்டலோட முதலாளி தீபக். விடுதி மேலாளர் அருண்.. “ என்று மறுபடியும் சர்காஸம் செய்தார் முத்து. இந்த வீட்டின் அடிப்படையான வசதிகளில் குறையில்லை என்றாலும் ஒரு வித இறுக்கமும் இயந்திரத்தனமும் இருந்தது என்பதுதான் முத்து சொல்ல வந்ததாக இருக்கும். “கண்ணைக் கட்டிக்கிட்டு கும்மாங்குத்து குத்தின மாதிரி இருக்கு” என்றார் விசே. 

பிரெட் விஷயத்தை வைத்து முத்து நிதானமாக விளக்க இப்போதும் விசேவிற்குப் புரியவில்லை. “ரொம்ப சுத்த விடறீங்க முத்து. இதைத்தான் தீபக் வீட்டுக்குள்ள சொன்னார். எனக்காகப் பேசின ஒரே நல்ல மனுஷன் அவர்தான். இப்பவாவது என் கஷ்டம் உங்களுக்குப் புரிஞ்சதா தீபக்?” என்று தன்னுடைய வழக்கமான புலம்பலை முன்வைத்தார் விசே.

BBTAMIL 8: DAY 55

இந்த இடத்தில் நாமும் விசேவின் ஹோஸ்டிங் மற்றும் பிக் பாஸ் டீமின் இயக்கம் பற்றி அனத்த வேண்டியிருக்கிறது. ‘போட்டியாளர்கள் நேரடியாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து பதில் சொல்லி தலையைச் சுற்ற வைக்கிறார்கள்’ என்பது விசேவின் ஒவ்வொரு வாரத்தின் அனத்தலாக இருக்கிறது. சரி, அந்தப் புகார் உண்மையே. எனில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்தான் சரியான திசையில் இதை வழிநடத்திச் சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பும் பொறுமையும் அவருக்குத்தான் இருக்க வேண்டும். 

ஒரு வகுப்பில் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆசிரியர்தான் அனைவரின் நிறை குறையையும் அனுசரித்து பாடத்தை நடத்திச் செல்ல வேண்டும். மாறாக தனக்குப் புரிந்த மாதிரியே அனைவருக்கும் புரிந்திருக்க வேண்டும் என்று அவசரப்பட்டு “மக்குப் பசங்களா இருக்கீங்களே..” என்று சாக்பீஸை ஆத்திரத்துடன் தூக்கியெறிந்தால் அது ஆசிரியரின் தவறா அல்லது மாணவர்களின் தவறா? 

விசேவின் ஹோஸ்டிங்கில் இருக்கும் நெருடல்கள்

தனக்கு ஏற்ற பதில் வரவில்லையென்றால் விசே உடனே முகத்தைச் சுளிக்கிறார். ‘உக்காருங்க’ என்று கோபத்தைக் காட்டி விடுகிறார். தான் எதிர்பார்க்கும் பதிலை வாங்கும் வரை மல்லுக்கட்டுகிறார். ஒரே விஷயத்தை வைத்து ‘நீங்க.. சொல்லுங்க.. நீங்க சொல்லுங்க..” என்று பார்வையாளர்கள் உட்பட அனைவரிடமும் கேட்டு  நேரத்தைக் கடத்துகிறார். ‘யப்பா.. சாமி.. இந்தப் பதில்தானே வேண்டும்?” என்று போட்டியாளர்களும் மரியாதை கருதி கடைசியில் சரண் அடைகிறார்கள். இதைத்தானே ஆரம்பத்தில் கேட்டேன்? என்று அவர்கள் மீதே பழியைப் போடுகிறார் விசே. பிறகு “மக்களே.. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல” என்று ஜகா வாங்கி விடுகிறார். கேள்விகளைத் தொகுக்க முடியாமல் விசே திணறுவதும் அப்பட்டமாகத் தெரிகிறது. இதெல்லாம் எடிட்டிங் டீமின் குறையா, அல்லது அடிப்படையிலேயே விசே சொதப்புகிறாரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். 

அது யார் மீது தவறோ, ஒட்டு மொத்தத்தில் வாரயிறுதி எபிசோடுகள் சுவாரசியத்தை இழந்து வருகிறது என்பது மட்டும் உண்மை. பிக் பாஸ் டீமும் சரி, விசேவும் சரி எதையாவது செய்ய வேண்டும். வெறுமனே விசாரணையாக வைத்து சலிப்பேற்றாமல் சுவாரசியமான டாஸ்க்குகளைத் தரலாம். யாராவது ஒரு விஷயத்தை மறுத்தால் சற்று பில்டப் தந்து ‘குறும்படம்’ போடலாம். இன்னமும் என்னெ்னமோ செய்யலாம். மாறாக ‘எனக்கு சூட்டிங் டைம் ஆச்சு. சீக்கிரம் சொல்லித் தொலைங்க” என்கிற சலிப்பு மாதிரியே விசே அவசரப்படுவது நமக்கே பதட்டத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. 

BBTAMIL 8: DAY 55

‘இந்த வார கேப்டன்சி மிலிட்டரி கட்டமைப்பு மாதிரி இருந்தது’ என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார் ஆனந்தி. எங்கே விரிவாகச் சொன்னால் விசே பாய்ந்து விடுவாரோ என்கிற பயம் தெரிந்தது. “இந்த வாரம் யாருமே தூங்கலை. எல்லோரையும்  ஆக்டிவ்வா வெச்சிருந்தாரு. பிக் பாஸே  தீபக்கை பாராட்டினாரு” என்று கேப்டனுக்கு புகழாரம் சூட்டிய ராணவ் ‘வாட்ச்மேன் மாதிரி இருந்தாரு’ என்று வெள்ளந்தியாகச் சொல்ல ‘யப்பா.. சாமி.. நீ பாராட்டவே வேண்டாம்’ என்கிற எக்ஸ்பிரஷனைத் தந்தார் தீபக். 

விசே தந்த உற்சாகத்தில் ஜெனரேட்டரை ஆன் செய்திருந்த சத்யா, தனது அடைமொழிகளைத் தொடர்ந்தார், “இங்க நிறைய சிறுவண்டுகள் இருக்கு சார்.. ஆனந்தி, பவித்ரா, முத்து மாதிரி.. சவுந்தர்யாலாம் ஆர்டிஎக்ஸ் பாம்.. “ என்று சொல்ல, “முக்கியமான ஆளை விட்டுட்டீங்க.. மஞ்சரி..” என்று மற்றவர்கள் எடுத்துக் கொடுக்க “அய்யோ அது கண்ணி வெடி” என்று சத்யா அலற மஞ்சரியும் வேறு வழியில்லாமல் சிரித்தார். சிறப்பாகச் செயல்பட்ட கேப்டனுக்கு ஸபீட் பிரேக்கர் போட்ட இம்சைகளாம் இவர்கள். “ஆனந்தியும் சிவாவும் தெரபிஸ்ட்டா இருக்காங்க. ரஞ்சித் அண்ணன்லாம் என்ன கேட்டகிரி பாம்ன்னே தெரியல” என்று சத்யாவின் கிண்டல் தொடர “என்ன தம்பி.. அண்ணனைப் பத்தி தப்பா சொல்ற?” என்கிற மாதிரி பார்த்தார் ரஞ்சித். 

“பார்த்தீங்களா.. எவ்ளோ நல்லா ப்ளோல பேசறீங்க.. இப்படியொரு திறமையை ஏன் ஒளிச்சு வெக்கறீங்க…” என்று சத்யாவை விசே பாராட்ட ‘அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி’ என்கிற பாடல் சத்யாவின் மைண்ட் வாய்ஸில் ஓடியிருக்கலாம். 

ஒரே விஷயத்தை வைத்து இழுவையாகச் சென்ற விசாரணை

அடுத்து எழுந்தார் சாச்சனா.. அப்போதுதான் இந்த எபிசோடில் ஏழரையும் உற்சாகமாக உள்ளே நுழைந்தது. அதுவரை சுமாராக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி, ஆமை புகுந்த ஷேர்மார்கெட் மாதிரி கீழே சரியத் துவங்கியது.  சாச்சனா கலங்கும் போதெல்லாம் ‘அது இல்லம்மா.. சாச்சு..” என்று விசேவும் திணறி விடுகிறார். இந்தச் சின்னப் பெண்ணை வறுத்தால் கெட்ட பெயர் வந்து விடும் என்று நினைக்கிறாரா அல்லது தன்னிச்சையான ‘டாடி’ பாசமா? விசேவின் திணறுதலுக்கு காரணம் தெரியவில்லை. 

70:30 என்று மதிப்பெண் தந்த சாச்சனாவிடம் “என்னை சுத்த விடாதீங்க. நேரடியா பதில் சொல்லுங்க” என்று அதட்டினார் விசே. “ஏன் மைக் மாட்டலைன்னு கேட்டாரு?” என்று முகம் மாறி சாச்சனா பதில் சொல்ல “தப்பைத்தானே சுட்டிக் காட்டினாரு. அப்புறம் என்ன பிரச்சினை?” என்று விசே மடக்க “அது இல்ல.. தப்பே வரக்கூடாதுன்ற மாதிரி ஓவர் போலீஸ்காரரா இருக்காரு” என்று குட்டையைக் குழப்பினார் சாச்சனா. அது தீபக்கிற்கான காம்ப்ளிமெண்ட் போலவே தெரிந்தது. 

BBTAMIL 8: DAY 55

“அப்புறம் ஏன் பூவை கட் பண்ணீங்க?” என்று விசே கேட்க “முத்துவை பேச விடாம பண்ணாரு.. ஆனந்தியை பேச விடாம பண்ணாரு” என்று சாச்சனா சொல்ல “சார்.. அதுக்கு நான் விளக்கம் சொல்றேன். நாலு விஷயம் ஒரே நேரத்துல வந்தா நான் மறந்துடுவேன்.. அதுக்குத்தான் உடனுக்குடன் கட் பண்ணி கேட்கறேன்” என்று தீபக் சொல்ல, “யெஸ்.. கரெக்ட்.. எனக்கும் அந்தப் பிரச்சினை உண்டு.. நானும் மறந்துடுவேன்” என்ற விசே “அதுக்காக தீபக்கை சப்போர்ட் பண்றேன்னு அர்த்தமில்ல” என்கிற வாக்கியத்தையும் ஜாக்கிரதையாக இணைத்துக் கொண்டார். தன்னைப் போல நடக்கிறவர்களை மட்டும்தான் விசேவிற்கு பிடிக்கிறது என்றால் அது யாருடைய பிரச்சினை?

“அலங்கார வார்த்தைகள்லாம் வேணாம்.. நேரடியா பாயிண்ட்டிற்கு வரச் சொல்லி சொல்லுவேன்” என்று தீபக் சொல்ல “என் இனமய்யா.. நீங்கள்” என்கிற மாதிரி அவரை ஆசையாகப் பார்த்தார் விசே. ஒருவர் இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதா இல்லையா? “என் கேள்வி சுருக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பதில் வரலை” என்று தக்க சமயத்தில் தீபக்கிற்கு செக் பாயிண்ட் வைத்தார் ஆனந்தி. “எனக்கு சரிசமமான நேரம் தரலை. அருணிற்கு மட்டும் போதுமான நேரம் தரப்பட்டது” என்பதும் ஆனந்தி இணைத்த புகார். தீபக் பெரும்பான்மையாக சரியான கேப்டனாக நடந்து கொண்டாலும் அருண் போன்றவர்களிடம் பாரபட்சம் காட்டுகிறார் என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. 

விசேவும் சாச்சனாவும் இணைந்து கழுவிய நீண்ட பாத்திரம்

சாச்சனா பாத்திரம் கழுவாத ஒரு விஷயம் விவாதத்திற்குள் வந்தது. அந்த ஒரேயொரு பாத்திரத்தை வைத்து கழுவு.. கழுவு.. என்று கழுவினார்கள். “பொதுவான பாத்திரமாக இருந்தாலும் உனக்காக சமைச்சதுன்ற போது நீதானே அதைக் கழுவியிருக்கணும்?”   - இதுதான் சாச்சனாவிடம் விசே கேட்க விரும்பிய கேள்வி. இதை ஈரோடு ரோட்டில் போய் திருச்சி திரும்பி வந்து செங்கல்பட்டில் யூடர்ன் போட்டு திருவனந்தபுரம் போய்.. விசேவும் சாச்சானாவும் இழுத்த இழுப்பு இருக்கிறதே.. ‘கோவிந்தா.. டீ சூடா இருக்கில்ல கோவிந்தா’ காமெடி மாதிரி சென்றது. “அப்புறமா நான்தான் கழுவினேன்” என்று சொல்லி இறுதியில் பயங்கரமான காமெடியைச் செய்தார் சாச்சனா. 

சுருக்கமாகச் சொன்னால், பல விஷயங்கள் பிளஸ்ஸாக இருந்தாலும்  தீபக்கிடமிருந்த தனிப்பட்ட எரிச்சல் காரணமாக அவசரக்குடுக்கையாக சாச்சனா பூவை கட் செய்தார்.  ஒரு கட்டத்தில்  கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி மாதிரியே இந்த உரையாடல் செல்ல, விசேவிற்கே இது புரிந்து விட்டது. பேச்சை நிறுத்தி விட்டு சிரிக்க வேண்டியதாக இருந்தது. 

BBTAMIL 8: DAY 55

“கிச்சன் டீமில் இருந்தவர்கள் பிரஷரில் இல்லை’ என்பது அடுத்த தலைப்பு. “நாங்க எங்க வேலையை ஜாலியாகச் செய்தோம். அன்பாகப் பரிமாறினோம்” என்று ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் சாதித்தார்கள். கிச்சன் டீமின் உழைப்பு, கரிசனம், விருந்தோம்பல், தியாகம் போன்றவை பாராட்ட வேண்டிய அம்சங்கள்தான். ஆனால் செய்வதற்கு இடமும் ஆளும் இருந்தாலும் பிரட் டோஸ்ட் செய்ய ஆரம்பத்தில் அவர்கள் அனுமதி மறுத்தது நிச்சயம் அதிகார துஷ்பிரயோகம். 

இந்த டோஸ்ட் விவகாரம் மஞ்சரி சம்பந்தப்படாமல் இருந்தால் சுமூகமாக முடிந்திருக்கும். அருணிற்கும் மஞ்சரிக்கும் இருந்த ஈகோ காரணமாக ஊதி.. ஊதி.. பெரிதானது. ‘காக்கா இம்பூட்டு ஆய் போனதுக்கு ஊரையே கொளுத்திய கலவரப் பிரச்சினையாகி விட்டது. அருணின் சார்பாக தீபக் களத்தில் குதித்ததும் இன்னமும் எரிந்தது. மஞ்சரி விடாமல் மல்லுக்கட்டி பெரும்பாலோனோரின் விரோதத்தை சம்பாதித்தார். ‘டோஸ்ட் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஆசைப்பட்டவர்கள் கூட மௌனமாக இருந்து தப்பித்துக் கொண்டார்கள். மஞ்சரி மட்டும் தனியாக தொக்காக மாட்டிக் கொண்டார். 

மஞ்சரியை கார்னர் செய்த விசே


“கிச்சன் டீம் பிரஷர்ல இருந்ததை என்னாலும் உணர முடிந்தது” என்று மஞ்சரிக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னவர் ஆனந்தி மட்டுமே. பிரேக் சமயத்தில் “அவருக்கு என் மேல ஏதாவது கோபமா.. என்னை மட்டும் ஏன் இப்படிப் பண்றாரு?” என்று விசேவின் வறுத்தல் குறித்து முத்துவிடம் அனத்திக் கொண்டிருந்தார் சாச்சனா.
“அவரு ஹோஸ்ட்டோட வேலையைக் கரெக்ட்டா பண்றாரு. நீ ஏன் அப்படி நெனக்கற?” என்று சரியான அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் முத்து. 

சாச்சனாவிற்கு மட்டும் விஜய்சேதுபதி தனியான சலுகையைத் தருகிறார் என்பது மாதிரியான கிண்டல்கள் சமூகவலைத்தளமெங்கும் நிறைந்திருக்கின்றன. அப்படியெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் ‘dad’s little princess’ புகார் காரணமாகவே சாச்சனாவிடம் விசே கூடுதல் கடுமையை செயற்கையாக காட்டி “தான் அப்படியில்லை” என்று உணர்த்த விரும்புகிறாரா? “நீ ஏன் காஸ்ட்லி ஹாஸ்டல்ன்னு பூசி மெழுகின?” என்று முத்துவிடம் சரியான கேள்வியைக் கேட்டார் மஞ்சரி. 

BBTAMIL 8: DAY 55

பிரேக் முடிந்து திரும்பிய விசே “ஏம்மா.. சாச்சனா.. உன் மேல கோபப்பட்டு நான் என்னம்மா பண்ணப் போறேன்.. ஒரு கரிசனம்தான்.  எல்லோர் மேலயும் அக்கறைதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெறப்போகும் மாற்றம்தான் உங்களுக்கு கிடைக்கப் போகும் உண்மையான பரிசு. அதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றேன்” என்று அவர் அட்வைஸ் தந்த இடம் சிறப்பு. 

மஞ்சரியின் டோஸ்ட் பிரச்சினையை விசே அடுத்ததாக ஆரம்பித்த போது ‘அய்யய்யோ.. இன்னொண்ணா...’ என்று நமக்குத்தான் பதட்டம் ஆரம்பித்தது. இதுவும் இழுத்துக் கொண்டே போனது. “கிச்சன் டீம் பாவம்ல.. அவங்க பக்கம் நின்று நீங்க பார்த்திருக்கணும்ல.. ஆமாவா.. இல்லையா,?’ என்று விசே அதட்டிக் கேட்டவுடன் வேறு வழியில்லாமல் “குத்தத்தை ஒப்புக்கறேங்க எஜமான்” என்று கையைத் தூக்கி விட்டார் மஞ்சரி. பிறகு மறுபடியும் எதையோ அவர் ஆரம்பிக்க “ஏம்மா.. இப்பத்தானே குத்தத்தை ஒப்புக்கிட்டே.. அதுக்கு நான் எவ்ளோ போராடினேன் தெரியுமா..” என்று டென்ஷன் ஆனார் விசே. 

கட்டக் கடேசியில் அருணிற்கும் தனக்கும் இருந்த ஈகோதான் அனைத்திற்கும் காரணம் என்பதை ஒருவழியாக ஒப்புக் கொண்டார் மஞ்சரி. 

“நான் டீல் பண்ணிக்கறேன்” - மிதப்பாக பேசிய சாச்சனாவை டீல் செய்த விசே


ஓகே.. எனக்கே போரடிக்கிறது.  இதை வாசிக்கிற உங்களின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எனவே கட்டுரையை முடித்து விடலாம்.  கடைசியாக வந்த பாயிண்ட்டில்தான் விசே சிக்ஸர் அடித்தார். “நான் டீல் பண்ணிக்கறேன்” என்று தெனாவெட்டாக பதிலளித்த சாச்சனாவை “என்ன டீல் பண்ணப் போறீங்க.. இப்பச் சொல்லுங்க” என்று மடக்கிய காட்சி சிறப்பானது.. ‘எங்க டாடிதானே.. நான் சொல்லிக்கறேன்” என்று சாச்சனாவிடம் இருந்த மிதப்பை, விசே கருணையே இன்றி இப்போது உடைத்தது நல்ல விஷயம். 

BBTAMIL 8: DAY 55

‘தீபக்காக மாறி நிலைதடுமாறியது தவிர, மற்ற விஷயங்களில் நீங்க ஒரு சிறந்த கேப்டனா இருந்தீங்க’ என்கிற பாராட்டைத் தந்து விட்டு “பொம்மை டாஸ்க்ல நீங்க எல்லோரும் பண்ணதைப் பத்தி நாளைக்குப் பேசலாம்” என்று விசே கிளம்பியவுடன்,  போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட ‘ஹப்பாடா’ என்றிருந்தது. 

இந்த வாரம் வெளியேறப்போகிறவர் நடிகர் வீட்டு வாரிசு என்கிற தகவல் வந்திருக்கிறது. அதென்ன வரிசையாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக வெளியேறுகிறார்கள்? இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். 

விசேவின் ஹோஸ்டிங்கிற்கு நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்? கமெண்ட்டில் வந்து பாரபட்சமற்ற பதில்களைச் சொல்லுங்கள் மக்களே!.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

BB Tamil 8: `மூணு வாரம் நல்லா விளையாடிட்டு டைட்டில் வின்னரா நீ வா...' - ஜாக்குலினை தேற்றிய அம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8: 'Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்...' - நெகிழும் ஜெஃப்ரியின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 80: `எங்க அக்காவ திட்டாதீங்க' - நெகிழ்ந்த பவியின் தம்பி; அன்ஷிதா கேட்ட மன்னிப்பு

வெவ்வேறு குடும்பங்கள், வெவ்வேறு கலாசாரங்கள், வெவ்வேறு உணர்வுகள். இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் கலவையான மையமாக இன்றைய எபிசோடு இருந்தது, போட்டியாளர்கள், தங்களுக்குப் பிரியமானவர்களைக் காண்பதற்காக அடையும்... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நம்ம பரம்பரைக்கே பெருமை சாமி" - கட்டி அணைத்து நெகிழ்ந்த முத்துகுமரனின் அம்மா, அப்பா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்த... மேலும் பார்க்க

BB Tamil 8 : ' என் பையனை அப்படி சொன்னது..!' - முத்துகுமரனை சாடிய அருணின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருக... மேலும் பார்க்க

BB Tamil 8 : `மஞ்சரி அவரைதான் பட்டுனு சொன்னாங்க..!' - மஞ்சரி ஃபேமிலி எக்ஸ்க்ளூசிவ்

பிக் பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த டாஸ்க்கில் அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சந்திப்பதோடு மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களை தெரிவிக்கிறா... மேலும் பார்க்க