Champions Trophy: 'தீவிரவாத அச்சுறுத்தல்; உளவுத்துறை தகவல்' - பாதுகாப்பைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சில தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போட்டிகளுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு பலப்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் 1996 க்குப் பிறகு ஒரு ஐ.சி.சி தொடர் இப்போதுதான் நடந்து வருகிறது. 2009 இல் அங்கே கிரிக்கெட் ஆட சென்ற இலங்கை அணியின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன்பிறகு, எந்த நாட்டு அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. ரொம்ப காலம் கழித்துதான் ஒவ்வொரு அணியாக மீண்டும் அங்கே கிரிக்கெட் ஆட சென்றன. அதிலும் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதே தவிர்த்தே வந்திருக்கிறது. இப்போதும் கூட சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டின் உளவுத்துறை தகவல் கொடுத்திருக்கிறது. போட்டிகளை காண வெளிநாடுகளிலிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களை குறிவைத்து தாக்குதல் அல்லது கடத்தல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

இதனால் போட்டிகள் நடைபெறும் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி ஆகிய மைதானங்களில் 12,000 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருக்கின்றனர். போட்டியை காண வரும் ரசிகர்கள் பலத்த சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
