3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
Champions Trophy : இறுதிப்போட்டியுடன் ஓய்வை அறிவிக்கிறாரா கேப்டன் ரோஹித்? - கில் கொடுத்த அப்டேட்!
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நாளை மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வந்திருந்தார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

சுப்மன் கில் பேசியதாவது, ''இறுதிப்போட்டியில் ஆட ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஐ.சி.சி தொடர்களை பொறுத்தவரைக்கும் இது என்னுடைய இரண்டாவது இறுதிப்போட்டி. கடந்த முறை தோல்வியடைந்துவிட்டோம். இந்த முறை வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நான் பங்கெடுப்பு செய்ததிலேயே இந்த இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்தான் மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப்.
ஒயிட் பாலின் ஆகச்சிறந்த ஓப்பனர்களில் ரோஹித்தும் ஒருவர். அதேமாதிரி, ஒயிட் பாலின் ஆகச்சிறந்த பேட்டர்களில் கோலியும் ஒருவர். அவர்கள் போக இன்னும் ஸ்ரேயாஷ் ஐயர், ராகுல், ஹர்திக் என ஆழமான பேட்டிங் லைன் அப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
ஒரு துணை கேப்டனாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். அந்தப் பதவி ஒரு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. இளம் வீரர்களிடம் நான் பேச வேண்டும். குறிப்பாக, இளம் பௌலர்களிடம் பேசி அவர்கள் ஏற்கெனவே வகுத்து வைத்திருக்கும் திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரோஹித் தொடர்ச்சியாக டாஸ்களில் தோற்பதைப் பற்றி ஜாலியாக எங்களுக்குள் உரையாடிக்கிறோம். மற்றபடி ஒரு பேட்டராக நான் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவேன். 2024 டி20 உலகக்கோப்பையை வென்றதால் எங்களிடம் வெற்றிக்கான பசி தீர்ந்துவிட்டதென எடுத்துக் கொள்ள முடியாது. அந்த வெற்றி எங்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும்தான் கொடுத்திருக்கிறது.

அணிக்குள் ஒருவருக்கொருவர் எங்களை நாங்களே உத்வேகப்படுத்திக் கொள்வோம். ஒரு வீரர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அவரை எப்படி அதிலிருந்து மீட்கலாம் என்றுதான் யோசிப்போம். சதம் அடிப்பதை விடவும் 5 விக்கெட் ஹாலை எடுப்பதை விடவும் இந்த பண்பு முக்கியமென நினைக்கிறேன். இறுதிப்போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பாரா என கேட்கிறீர்கள். ஆனால், இப்போது வரைக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமில் அதைப்பற்றி எதுவும் பேசப்படவில்லை. ரோஹித்தும் இறுதிப்போட்டியை பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார். போட்டி முடிந்த பிறகுதான் ஓய்வை பற்றியெல்லாம் ரோஹித் யோசிப்பார்.' என்றார்.
நாளைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
