IND vs NZ: ``இந்தியா 0 கி.மீ, நியூசிலாந்து 7,150 கி.மீ" - வெற்றி குறித்து விமர்சிக்கும் ஜுனைத் கான்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் துபாய் மைதானத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடி வரும் இதேநேரத்தில், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் ஒரே மைதானத்தில் நடத்தப்படுவது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். `இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதால், இந்தியாவுடன் மோதும் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால், மற்ற அணி வீரர்கள் சோர்வாகினர். ஐ.சி.சி-யின் இந்த செயல் இந்தியாவுக்குச் சாதகம்.' என ஒருபுறம் விமர்சனம் எழுகிறது.

அதற்கு, `2009-ல் தென்னாப்பிரிக்காவும் இதேபோன்று ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிங்களையும் விளையாடியது. ஆனால், அரையிறுதிக்குக் கூட முன்னேறவில்லை. அணி நன்றாக விளையாடினால் வெற்றிபெறும்.' என்று அஸ்வின் உள்ளிட்டோர் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடிய ஜுனைத் கான், இந்தியா அணி ஒரே மைதானத்தில் விளையாடும்படி திட்டமிடபட்டதை விமர்சித்திருக்கிறார்.

ஜுனைத் கான் தனது எக்ஸ் தள பதிவில், ``சாம்பியன்ஸ் டிராபியில் போட்டிகளுக்கு நடுவே அணிகள் பயணம் செய்த தூரம். நியூசிலாந்து அணி 7,150 கிலோமீட்டர், தென்னாப்பிரிக்கா அணி 3,286 கிலோமீட்டர், இந்தியா அணி 0 கிலோமீட்டர். சில அணிகள் தங்கள் திறமையால் வெற்றி பெறுகின்றன. சில அணிகள் போட்டி அட்டவணை மூலம் தான் வெற்றி பெறுகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.