Rohit Sharma: ``இது ஒற்றைப்படை ஆண்டு..." - உற்சாகத்தில் சூர்யகுமார் யாதவ்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் (2013 வெற்றி, 2017 தோல்வி) பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி இன்று கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில், இன்றைய போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் ஓய்வுபெறப்போவதாக பரவலாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவுக்கு புகழாரம் சூட்டி, இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லும் என்று கூறியிருக்கிறார்.
இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் நேற்று பேசிய சூர்யகுமார் யாதவ், ``ரோஹித் சர்மா மிகவும் இயல்பானவர். எதைச் செய்தாலும் மற்றவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் வளர்ச்சியைப் பார்ப்பார். எளிதில் அணுகக்கூடிய நபர் அவர். எப்போதும், உனக்காக நான் செய்கிறேன் என கைகளை உயர்த்துவார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மிகவும் இயல்பாக இருப்பவர். தூய்மையான உள்ளம் கொண்ட நேர்மையானவர். இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெறும். இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது." என்று கூறினார்.

மேலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், ``நான் கொல்கத்தா அணியில் இருந்தபோது, அவர் எப்போது என்னிடம் தலைமைப்பண்பு, களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதை எப்படி செயல்படுத்துவது, எவ்வாறு சிறந்த கேப்டனாக இருப்பது என்று பேசுவார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் புத்திசாலியான நபர். அதேசமயம், மிகவும் சாதாரண நபரும் கூட. களத்துக்கு வெளியே எதுவும் பேசமாட்டார். மிகவும் நல்ல நபர்." என்று புகழ்ந்தார்.

அதேபோல், ஐ.பி.எல் குறித்து பேசுகையில், ``இது ஒற்றைப்படை ஆண்டு. எமோஷன்ஸ் அதிகமாக இருக்கிறது. பாதி வீரர்கள் ஏற்கெனவே பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்." என்று சூர்யகுமார் என்றார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றான மும்பை அணி (5 முறை), நான்கு முறை 2013, 2015, 2017, 2019 ஒற்றைப்படை ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.