Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு நாயுடு
மும்மொழிக் கொள்கையைத் தமிழக ஆளும் திமுக அரசு, இந்தித் திணிப்பு என்று அரசியலாக்கி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகவும், ஏற்காவிட்டால் கல்விக்கு இரண்டாயிரம் கோடி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் மத்திய பாஜக அரசு கூறிவிட்டது. மறுபக்கம், இந்தி புகுத்தப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தி பிரதானமாக்கப்பட்டிருக்கிறது. அதையேதான் தமிழ் நாட்டிலும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் செய்கிறார்கள் என்று திமுக கூறிவருகிறது. அதைவிட, மீண்டும் ஒரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என்று மத்திய பாஜக அரசுக்குத் திமுக கண்டனம் தெரிவித்துவருகிறது.
இவ்வாறான சூழலில், மத்திய பாஜக அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தமிழர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கற்றுக்கொண்டு அமெரிக்கா சென்று சிறப்பாகச் செயல்படுவதாகவும், கூகுள் தலைமை அதிகாரிகூட ஒரு தமிழர்தான் எனவும் புகழ்ந்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சந்திரபாபு நாயுடு, ``தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு நிறைய பேர் தமிழர்களாக இருக்கின்றனர். ஆங்கிலம் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றனர். கூகுள் தலைமைச் செயல் அதிகாரியைப் (CEO) பாருங்கள். பெரும்பாலான நிறுவனங்களில் முதல் இரு தலைமை அதிகாரிகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார்." என்று கூறினார்.

அதேசமயம், இந்தியையும் படிக்க வேண்டும் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ``அறிவு என்பது வேறு, மொழி என்பது வேறு. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கவிருக்கிறேன். மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன். நாங்கள் தெலுங்கை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கான சர்வதேச மொழி ஆங்கிலம் என்பதால் அதையும் ஊக்குவிக்க வேண்டும். அதோடு, இந்தி கற்றுக்கொள்வது நல்லது. இதன்மூலம் மக்களுடன் நாம் எளிதில் பழக முடியும்." என்று கூறினார்.