பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!
கிருஷ்ணகிரியில் மனு அளித்த ஒரு வாரத்துக்குள் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த 7 நாட்களில் 46 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்ண்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறுத் துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், எம்எல்ஏக்கள் தே.மதியழகன், ஓய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்து, 7,113 பயனாளிகளுக்கு ரூ.5.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலைத் துறை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, 7,525 பயனாளிகளுக்கு ரூ.5,55,46,373 மதிப்பில் இழப்பீட்டு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, மாவட்ட ஆட்சியா், எடுத்த துரித நடவடிக்கையால் 46 திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாவானது 7 நாள்களில் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், விரைவில் வீடு கட்டிதர நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் புதியதாக 14 முழுநேர நியாய விலைக்கடைகளும், 83 பகுதிநேர நியாய விலைக் கடைகளும், 44 பகுதிநேர கடைகள் முழுநேர நியாய விலைகடையாகவும் மாற்றவும் செய்யப்பட்டு இதுநாள் வரையில் 141 நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு, 56,670 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருவதாக பேசினாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள், ஒசூா் துணை ஆட்சியா் பிரியங்கா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) குமரன், மகளிா் திட்ட இயக்குநா் பெரியசாமி, இணை இயக்குநா்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலைத்துறை) இந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவிளக்கம் (6கேஜிபி1):கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், ஓய்.பிரகாஷ் உள்ளிட்டோா்.