ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?
கடந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டிக்கு தயாராகி வருவதால், வருடாந்திர மத்திய ஒப்பந்தங்கள் உள்பட பல காரணங்களுக்காக இறுதிப்போட்டியின் முடிவை பிசிசிஐ உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டு பிப்.28 அன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்களை அறிவிப்பதில் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ ஏ+ பிரிவிலும் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 4 வீரர்கள் உள்ளனர்.
டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஏ+ பிரிவு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாலும், பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறத் தவறியதால் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்பட இருக்கின்றன.
இதையும் படிக்க: நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
சாம்பியன்ஸ் டிராபியில் வீரர்களின் செயல்திறனைப் பொறுத்து ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஒருவேளை ஓய்வு அறிவித்தால், அவரின் முடிவுக்குப் பின்னரே எதையும் அறிவிக்க முடியும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடததால் 2023 உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 11 போட்டிகளில் 530 ரன்கள் எடுத்து அசத்தலாக விளையாடியிருந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.
அதன்பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் டி20, டெஸ்ட் அணிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல்லில் 351 ரன்களும், ரஞ்சியில் 480 ரன்களும், விஜய் ஹசாரே தொடரில் 325 ரன்களும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 345 ரன்களும் விளாசினார். துபையில் நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து கேப்டனாகவும் நியமித்துள்ளது.
இந்திய அணிக்கு 4-வது வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஷ்ரேயஸ் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பிடிப்பார் என்று பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரஙக்ள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் மொத்தமாக 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 6 பேர் கிரேட் ஏ பிரிவிலும், 5 பேர் கிரேட் பி பிரிவிலும், 15 பேர் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், யஷ் தயாள், உம்ரான் மாலிக், விஜயகுமார் வைஷாக், கவரப்பா உள்ளிட்டோரும் இடம்பிடித்திருந்தனர்.
இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!