Dhanush: ``தனுஷ் - மாரி செல்வராஜ் படத்துக்கு முன் இன்னொரு தனுஷ் படம் இருக்கு.." - ஐசரி.கே.கணேஷ்
தனுஷ் தற்போது பெரிய லிஸ்ட் கொண்ட படங்களின் லைன்-அப்பை தனது கையில் வைத்திருக்கிறார்.
இந்த லிஸ்டில் முதலாவதாக சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'குபேரா' திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கடுத்து, அக்டோபர் 1-ம் தேதி தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படமும் வெளியாகிறது.
இந்த இரண்டு படங்களைத் தாண்டி, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படமான 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தாண்டி, தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு இயக்குநர்களை டிக் செய்து தயாராக வைத்திருக்கிறார் தனுஷ்.

'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பும் முன்பே வெளியாகியிருந்தது.
ஆனால், முன்பு அறிவிப்பு வெளியானபோது அப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.
தற்போது இப்படத்தைத் தயாரிக்க வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருக்கிறது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ், மிர்ச்சி சிவா நடித்திருக்கும் 'சுமோ' திரைப்படம். இப்படத்திற்கான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் படங்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் 'D56' திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார் ஐசரி கே.கணேஷ்.
ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ் இயக்கிய 'ராயன்' படத்திற்கு இசையமைத்திருந்தார். இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய 'மாமன்னன்' படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
தற்போது மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜுடன் இணைகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
மாரி செல்வராஜின் படத்திற்கு முன்பு, தனுஷ் மற்றொரு இயக்குநருடன் இணைந்து ஒரு படம் செய்யவிருக்கிறார் என்ற தகவலை நேற்றைய நிகழ்வில் தெரிவித்திருக்கிறார் ஐசரி கே.கணேஷ்.
அந்தப் படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கிறதாம்.
கூடிய விரைவில் அப்படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும் எனச் சொல்லியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
