Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா?
நீரிழிவு இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா, சாப்பிடலாம் என்றால் என்னென்ன பழங்களை, எவ்வளவு சாப்பிடலாம், சாப்பிடக்கூடாத பழங்கள்... இப்படி ஏராளமான சந்தேகங்கள் உண்டு பலருக்கும். அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
நாட்டுப் பப்பாளி, நாட்டு கொய்யா, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, கொடைக்கானல் மற்றும் இமயமலைப்பகுதியில் விளைவிக்கப்படுகிற பேரிக்காய், நாட்டு மாதுளம் பழம், நாட்டு நாவல் பழம் ஆகியவற்றை நீரிழிவு இருப்பவர்களும் சாப்பிடலாம்.
டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவைச் சாப்பிடாதீர்கள். அதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால், அதில் இருக்கிற சர்க்கரைச்சத்து வெகு சீக்கிரம் ரத்தத்துடன் கலந்துவிடும்.
நீரிழிவு இருப்பவர்கள் பழச்சாறு அருந்தவே கூடாது. சாத்துக்குடியின் மேல் தோல், நடுத்தோல் இரண்டையும் உரித்துவிட்டு, விதையை மட்டும் நீக்கி, சுளைகளின்மீது இருக்கும் மெல்லியத்தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும்.
ஜூஸ் போடுவதற்காகவே மார்க்கெட்டுக்கு வருகிற ஆரஞ்சுப்பழங்களையும் கொழகொழப்பாக இருக்கிற வெளிநாட்டு பேரிக்காய்களையும் நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது.
பிங்க் நிற முத்துகள் கொண்ட மாதுளையை, சாறாக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.
விரல் நீளத்துக்கு இருக்கிற நாவல் பழங்கள் வேண்டாம். குட்டிக்குட்டியாக வட்டமாக இருக்கிற நம்மூர் நாவல் பழம்தான் பெஸ்ட்.
நாளொன்றுக்கு ஒரு கப் நிறைய மேலே சொன்ன பழங்களில் ஒன்றையோ அல்லது மேலே சொன்ன பழங்களையும் சேர்த்தோ சாப்பிடலாம். இங்கே ஒரு கப் என்பது 200 மில்லி நீர் கொள்ளும் அளவுக்கான கப். இந்த அளவுக்கு மேல் பழங்களை சாப்பிட வேண்டாம்.
அதிக கலோரிகள் கொண்ட மாம்பழத்தையும் பலாப்பழத்தையும் நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிடவே கூடாது. ஆசைக்கு ஒரு துண்டு சாப்பிடலாம் என்று வாயில் போட்டால், சாப்பிடத்தூண்டிக் கொண்டே இருக்கும் பழங்கள் இவை. அதனால், நீரிழிவு இருப்பவர்கள் இந்தப் பழங்களின் மீது ஆசைப்படாமல் இருப்பதே நல்லது. மாம்பழத்தின் மீது தீரா விருப்பம் கொண்டவர்கள், மாங்காய் சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம். அதுவும் தோலுடன் சேர்த்துத்தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ‘மா’வில் செங்காய்கூட சாப்பிடக்கூடாது.
தினமோர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி வராது என்பது வெளிநாட்டு பழமொழி. நம் ஊருக்கு நெல்லிக்காயே போதும். ஒரு பெரிய நெல்லியில் வெறும் இரண்டு துண்டுகளைச் சாப்பிட்டாலே நல்ல நோயெதிர்ப்பு சக்தியுடன் இருக்கலாம். நெல்லிக்காயைப் பச்சையாகவோ சாறெடுத்தோ குடிக்க வேண்டிய அவசியமில்லை. கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு இரண்டு மாதங்கள் வரை சாப்பிடலாம். நீரிழிவு இருப்பவர்கள் ஆப்பிளுக்கு பதில் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.
உங்கள் சுகர் அளவுக்கு ஏற்றபடி என்ன பழம் சாப்பிடலாம் என்பதை டயட்டீஷியன் ஆலோசனையோடு சாப்பிடுங்கள்.
பழங்களைச் செங்காயாகச் சாப்பிட்டால் சுகர் அதிகமாகாது என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், நீங்கள் சாப்பிடுகிற பழத்தின் கலோரி, நீங்கள் சாப்பிடுகிற அளவு போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...