Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?
Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை. எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்க் குளியல் எடுத்தால் முடி உதிர்வது நிற்கும் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உண்மையிலேயே முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எண்ணெய்க் குளியலுக்கு எந்த எண்ணெய் உகந்தது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்

எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது.
ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.
வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது கூந்தலை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ரிலாக்ஸ் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுப்பதால் முடி உதிர்வு குறையும் என்பது உண்மைதான்.
ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிகமிருக்கும். எனவே, உங்கள் மகளை ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கமும் அவசியம்.
எண்ணெய்க் குளியலுக்கு சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும்.
பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆற வைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும்.
ஒரு கப் சாற்றுக்கு 3 கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் 2 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்கு கொதிக்க விடவும். இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு இதுவும் நல்ல தீர்வளிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.