தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா... சரியான உணவு முறை எது?
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகள் தவிர்த்து, புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சாப்பிடும் தேடல் இயல்பாகவே அதிகரிக்கும். 'வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடு' என்பார்கள் வீடுகளில். ஆனால், மருத்துவர்களோ, கண்டதையும் சாப்பிடக்கூடாது... பார்த்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்' என்பார்கள். இரண்டில் எது சரி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தனக்காக மட்டுமல்லாமல், தன் கருவில் வளரும் குழந்தைக்காகவும் சேர்த்துச் சாப்பிடுகிறாள். அதனால், எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை கவனமாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அதாவது குழந்தைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதே சமயத்தில் அம்மாவுக்கும் சிக்கல்கள் தராத உணவாக இருக்க வேண்டும். அதாவது அம்மா சாப்பிடும் உணவுகள், பிபி, சுகர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும்.
கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோ, ஊசிகளோ பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒருவேளை அந்தப் பெண் ரத்தச்சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்க மாட்டோம். அப்படிக் கொடுத்தால் கர்ப்பிணிகள் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதே காரணம். எனவே, அந்த முதல் 3 மாதங்களில் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும். அந்த வகையில் நிறைய காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.

இரும்புச்சத்தைப் போலவே கால்சியம் சத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகமிக முக்கியம். அதனால் பால் மற்றும் பால் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இந்தச் சமயத்தில் கர்ப்பிணிகளுக்கு புரதச்சத்தும் மிக முக்கியம். எனவே, கார்போஹைட்ரேட் உணவுகளை மிதமாக எடுத்துக்கொண்டு, கொழுப்பைத் தவிர்த்துவிட்டு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குழந்தையின் உடல் உறுப்புகள் முதல் 12 வாரங்களில்தான் உருவாகத் தொடங்கும். பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருந்தால், அதற்கு அந்த அம்மா முதல் 3 மாதங்களில் சாப்பிட்ட உணவுகள்தான் காரணம்.
ஆனால், பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கும் முதல் 3 மாதங்களில்தான் வாந்தி உணர்வு மிக அதிகமாக இருக்கும். அதனால் சாப்பிடவே தோன்றாது. எனவே, அந்த நாள்களில் அவர்களுக்குப் பிடித்த உணவுகளையே ஆரோக்கியமாக சமைத்துக்கொடுத்துச் சாப்பிட வைக்கலாம். முளைகட்டிய பயறு, முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், குட்டி மீன்கள் (பெரிய மீன்களில் பாதரசம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது) போன்றவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கட்டாயம் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு புரோட்டீன் பவுடரை மருத்துவர் பரிந்துரைப்பார், அந்த பவுடரை சூடான பாலில் கலக்காமல், வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். தினம் ஒரு கப் தயிர், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை அப்படியே சாப்பிடப் பிடிக்காவிட்டால் பாலுடன் சேர்த்து அரைத்து வாழைப்பழமும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிக்கலாம். உப்பு, சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் ரத்த அழுத்தமும் கர்ப்பகால நீரிழிவும் வராமல் தடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.