Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
Doctor Vikatan: தாய்ப்பால் கட்டினால், அதைக் குழந்தைக்குக் கொடுக்கலாமா?
Doctor Vikatan: என் வயது 28. குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகின்றன. எனக்கு அடிக்கடி மார்பகங்களில் பால் கட்டிக் கொள்கிறது. பால் கட்டிக் கொண்டால் அதைக் கொடுக்கக்கூடாது என்று சிலர் சொல்வது உண்மையா...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
பால் கட்டிக்கொண்டாலும் குழந்தைக்கு அதைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், சில பெண்களுக்கு பால் கட்டுவதோடு, மார்பகங்களில் இன்ஃபெக்ஷனும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் மட்டும் தாய்ப்பால் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பால் கட்டோடு சேர்த்து மார்பகங்களில் இன்ஃபெக்ஷன் ஏற்படும் நிலையில் அது அளவுக்கதிகமான வலியைத் தரும். பால் சுரப்பிகளில் தொற்று பாதிக்கும் பிரச்னையை 'மாஸ்டைட்டிஸ்' (Mastitis) என்று சொல்கிறோம். அந்தத் தொற்று ஏற்பட்டிருந்தால் வலியோடு குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாது என்பதால் அதைத் தவிர்க்கலாம்.
மற்றபடி, நீண்ட நேரம் குழந்தைக்குப் பால் கொடுக்காததால் உங்களுக்கு மார்பகங்களில் பால் கட்டுகிறது என்ற நிலையில், அதை வெளியே எடுத்து பத்திரப்படுத்தி வைத்து, குழந்தைக்குக் கொடுக்கலாம்.
மார்பகங்களில் இருந்து தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து எடுத்து சேகரிக்க, எலக்ட்ரானிக் பம்ப் உபயோகிப்பதே சிறந்தது. மேனுவல் பம்ப் உபயோகிக்க வேண்டாம். மேனுவல் பம்ப் உபயோகிப்பதால் அதை உபயோகிக்கும் அம்மாக்கள்தான் களைத்துப் போவார்கள்.
ஏற்கெனவே தாய்ப்பால் கொடுப்பதில் சோர்ந்து, ஆற்றலின்றி உணரும் அம்மாக்களுக்கு மேனுவல் பம்ப் உபயோகித்து தாய்ப்பாலை எடுக்கும் வேலை இன்னும் சோர்வைக் கொடுக்கும் என்பதால் எலக்ட்ரானிக் பம்ப்தான் சிறந்தது. இப்படி தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்யும்போது இரண்டு மார்பகங்களில் இருந்தும் பாலை எடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.