Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
Doctor Vikatan: தீபாவளி விருந்து; விதம்விதமான ஸ்வீட்ஸ், கார வகைகள், டயட் சோடா குடிக்கலாமா?
Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவோராக இருந்தாலும், தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் அன்று ஒருநாள் டயட்டை பின்பற்றுவது சாத்தியமாகாது. அதே சமயம், விதம் விதமான விருந்து, இனிப்பு, பலகாரங்களைச் சாப்பிடுவதால், வயிறு கெட்டுப்போகாமல் இருக்கவும், செரிமானம் சீராக இருக்கவும் டயட் சோடா குடிப்பது சரியானதா... அது வழக்கமான சோடாவை விட ஆரோக்கியமானதுதானே?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

வழக்கமான சோடாதான் ஆரோக்கியமற்றது, டயட் சோடா ஆரோக்கியமானது என்ற உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான கார்போனேட்டடு பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரி அளவுகள் எக்கச்சக்கம் என்பதால் அவை உடல் பருமனையோ, நீரிழிவையோ ஏற்படுத்தலாம் என்ற பயத்தில் நம்மில் பலர் அவற்றைத் தவிர்க்கிறோம்.
கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்கு பதிலாக பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள்.
பருமன், சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும், ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல, அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.
வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டட் பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட் பானங்கள் ஆபத்தானவை.
இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக உடல் பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம்.

டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவை விட பல மடங்கு அதிகம்.
இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி, அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் உடல் எடையும் கூடும்.
இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதைமாற்ற அளவும் குறையும், எனவே உங்கள் உடல் தினமும் எரிக்கும் ஆற்றலின் அளவும் குறையும்.
அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும். குறிப்பாக, அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.
அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எனவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். இனிப்பு, கொழுப்பு சேர்த்த உணவுகள் உடல் எடையைக் கூட்டும் என்பதில் எப்போதுமே எச்சரிக்கையோடு இருப்பதுதான் சரியானது.
என்றாவது ஒருநாள் விருந்து, இனிப்பு, பலகாரங்கள் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அளவு முக்கியம்!
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.