அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை
Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?
Doctor Vikatan: எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அளவுக்கதிகமாக பருக்கள் வருகின்றன. எப்போதும் போல பயத்த மாவும் கடலை மாவும் உபயோகித்தாலே போதுமா, பருக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

முதல் விஷயம், இத்தனை வருடங்களில இல்லாமல் உங்களுக்கு திடீரென பருக்கள் வர என்ன காரணம் என்பதை முதலில் பாருங்கள்.
ஆரோககியமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படை சரியான உணவுப்பழக்கம். அதிக மாவுச்சத்தும் இனிப்பும் பதப்படுத்திய உணவுகளும் பால் பொருள்களும் உள்ள உணவுப்பழக்கம் பருக்களைத் தூண்டும்.
பருக்களை ஏற்படுத்துபவை ஒருவகை பாக்டீரியா. சருமத்தில் அதிக எண்ணெய்ப்பசை சுரந்தால் அதை உண்பதற்காக பாக்டீரியா கிருமிகள் முன்வரும். எனவே, சருமத்தின் எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்துகிற மாதிரியான மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபேஸ்வாஷ் போன்ற புற சிகிச்சைகளை நாடலாம்.
இவற்றில் உங்களுக்கு எது சரி என்பதை உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பார்த்த பிறகுதான் மருத்துவரால் முடிவு செய்ய முடியும்.
ஆரம்பநிலை என்றால் புறப்பூச்சுகளின் மூலமே சமாளிக்கப் பார்க்கலாம். அதுவே, பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும்.

தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரியாக வைத்துக்கொள்ளலாம். பருக்கள் வராமல் தடுக்க முறையான சருமப் பராமரிப்பும் முக்கியம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட், நியாசினமைடு போன்றவை உள்ள ஃபேஸ்வாஷ், க்ரீம்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும்.
வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்துவது சிரமம். அப்படிப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றினால் இருக்கும் பருக்கள் மேலும் பெரிதாகி, சீழ்க்கட்டிகளாகி, பிறகு தழும்புகளும் நிரந்தரமாகிவிடும். எனவே, முதலில் சரும மருத்துவரை சந்தித்து உங்கள் பருக்களின் தீவிரத்துக்கேற்ப அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள்.
உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள். பயத்த மாவும் கடலை மாவும் பருக்கள் போக உதவாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















