Doctor Vikatan: `50 வயதில் திடீர் மூச்சுத்திணறல்.. கொரோனா வந்தவர்களுக்கு இப்படி வருமா?'
Doctor Vikatan: நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார்.
பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
அறிகுறிகளை உணர்ந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகிய செயல் பாராட்டத்தக்கது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு 'லாங் கோவிட் சிண்ட்ரோம்' (long covid syndrome) என்ற பாதிப்பு வருவது பற்றி கொரோனா காலத்திலேயே நிறைய பேசியிருக்கிறோம்.
அதாவது கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்கள். களைப்பாக உணர்வார்கள். ஒரு மாடி ஏறினாலே நெஞ்சை அடைப்பது போலிருப்பதாகச் சொல்வார்கள். தூக்கம் வரவில்லை என்பார்கள். படபடப்பு, பதற்றம் இருக்கும். மொத்தத்தில் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். இந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை என்றே அவரை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். சம்பந்தமே இல்லாத அறிகுறிகளாகப் பார்ப்பார்கள்.

ஆனால், கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்படுவதை 'லாங் ஹாலர்ஸ் அல்லது 'லாங் கோவிட்' என்றும் இந்த அறிகுறிகள் கொரோனாவிலிருந்து குணமானதிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வைரஸ் உருவாக்கும் வீக்கமே இதற்கு காரணம். உலகம் முழுவதிலும் காணப்படுகிற லாங் கோவிட் பிரச்னையிலிருந்து இவர்கள் குணமாக தாமதமாகலாம். கொரோனா தொற்றுக்குள்ளான எல்லா வயதினருக்கும் இந்த அறிகுறிகள் பாதித்தாலும் 40-60 வயதுக்காரர்களுக்கு சற்று அதிகம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள், சுவாசப்பாதை தொற்றின் காரணமாகவோ, வீக்கம் காரணமாகவோ ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வேறு பிரச்னைகளாகவும் இருக்கலாம். நீங்கள் சாதாரண இசிஜி, எக்கோ பரிசோதனைகளை மட்டும் பார்த்துவிட்டு, இது இதயம் தொடர்பான பிரச்னை இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. எனவே, நீங்கள் இதயநல மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளைச் செய்து பார்த்து உறுதிசெய்வதுதான் சரியானது. வேறு ஏதேனும் ரிஸ்க் காரணிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

மருத்துவர் பார்த்துவிட்டு, உங்களுக்கு டிரெட்மில் டெஸ்ட், இதயத்துக்கான ஸ்கேன் போன்றவை தேவையா என்று சொல்வார். அதே சமயம், இந்தப் பிரச்னை கொரோனா தொற்றுக்குப் பிறகான பாதிப்பாகவும் இருக்கக்கூடும். எனவே, மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.