தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சி...
Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?
Doctor Vikatan: நான் சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டாலும் எனக்கு வாயுத் தொல்லை வருகிறது. துவரம் பருப்புகூட ஏற்றுக்கொள்வதில்லை. எந்தப் பருப்பு வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது... புரதச்சத்து தேவைக்கு வேறு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு நார்ச்சத்து நிறைந்தது. அது வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது. மற்றபடி துவரம் பருப்பு, கடலைப்பருப்பை சற்று குறைத்துக்கொள்ளலாம். கறுப்பு உளுந்து ஓரளவு சேர்த்துக்கொள்ளலாம். பச்சைப் பயறைப் பொறுத்தவரை, தோலுடன் சேர்த்துக்கொள்ளலாம். மொச்சைக் கொட்டை போன்றவற்றைத் தவிர்க்கவும்.
பருப்பு என்பது புரதச்சத்து நிறைந்த உணவு. குறிப்பாக, சைவ உணவுக்காரர்களுக்கு பருப்பின் மூலம்தான் புரதச்சத்தின் தேவை பூர்த்தி செய்யப்படும். ஒவ்வொருவரும் அவரவர் உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 50 கிலோ எடை உள்ள ஒருவர், 50 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துக்காக பருப்பு வகைகளை எடுக்கும்போது நிறைய பேருக்கு வாயுத் தொல்லை வருகிறது. அப்படிப்பட்டவர்கள் மட்டும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
அடை, பயறு தோசை போன்ற புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை காலை உணவுக்குச் சாப்பிடுவது சிறந்தது. இரவு உணவுக்கு அவற்றைத் தவிர்க்கவும். காலையில் சாப்பிடும்போது, அன்றைய தினம் முழுவதும் வேலை செய்வதால், உணவு முழுமையாக செரிமானமாகிவிடும். வயிற்றையும் பதம் பார்க்காது.

பருப்பு சேர்த்த உணவுகளைச் சமைக்கும்போது அவற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்துச் சமைப்பது செரிமானத்தை சீராக்கும். உதாரணத்துக்கு, அடை செய்யும்போதும் அந்த மாவில் கொஞ்சம் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். வாயுப் பிரச்னைகளைத் தவிர்க்க, பயறு வகைகளை முளைகட்டச் செய்து சாப்பிட வேண்டும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்றவற்றை ஊறவைத்து, முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, வாயுவை உற்பத்தி செய்கிற தன்மை அவற்றில் குறையும். முளைகட்டச் செய்வதால், வைட்டமின் ஈ சத்தும் சற்று கூடுதலாகக் கிடைக்கும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும்.
பருப்போடு சேர்த்து எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதும் இதில் முக்கியம். பஜ்ஜி, போண்டா மாதிரியான உணவுகள்தான் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அவைதான் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும். கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் செரிமான கோளாறுக்கும் அதுதான் காரணம். எனவே, கூடியவரையில் எண்ணெய் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.