ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
Doctor Vikatan: வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்தால் உடலுக்கு நல்லதா... சளி பிடிக்குமா?
Doctor Vikatan: வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? வெந்தயம் ஊறவைத்த நீர் குளிர்ச்சியானது, அது சளி பிடிக்க காரணமாகும், தவிர, மலச்சிக்கலையும் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா? வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் ஜலதோஷம் பிடிக்குமா?
பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி
நம் சமையலறையில், நம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும் ஆரோக்கியம் தரும் சமையல் பொருள்களில் மிக முக்கியமான ஒன்று வெந்தயம். இதில் புரோட்டீன், நியாசின், வைட்டமின் சி, நார்ச்சத்துகள், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல சத்துகள் நிறைந்து இருப்பதால், மருத்துவப் பயன்களையும் வெகுவாகக் கொண்டுள்ளது.
வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச்சுவை நம்மில் சிலரை, பொதுவாகக் குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும். வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. பசியைத் தூண்டக்கூடியது. நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.
வெந்தய தோசை, வெந்தயக்களி, வெந்தயக் குழம்பு, வெந்தய ரசம் போன்றவை பாரம்பர்யமாக நம் சமையலில் இடம்பெறும் உணவுகள். தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த பிரசவித்த பெண்களுக்கு வெந்தயக் கஞ்சி, வெந்தயக்களி கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள், ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தினசரி வெந்தயத்தை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் பச்சையாகவோ, அல்லது பொடித்தோ எடுத்துக் கொள்ளலாம். இரவில் ஊறவைத்து காலையில் அந்த நீருடன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். அந்த நீரை அருந்துவதால் சளி பிடிக்காது.
அடிக்கடி சளித்தொல்லைக்கு உட்படுபவர்கள் ஊறவைத்த வெந்தயத்துடன் சிறிது வெந்நீர் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். வெந்தயத்தைப் பச்சையாகவோ, பொடித்தோ அல்லது வெந்தயப் பொடியுடன் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த மலச்சிக்கல் தீரும்.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம் குறைந்து முடி உதிர்வு கட்டுப்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். தலைமுடியின் கருமை நிறம் அதிகரிக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி தரும். தலைச்சூடு நீங்கும்.
வெந்தய விழுதைத் தலையில் தேய்த்து 20 முதல் 30 நிமிடங்களில் குளித்து விடுதல் நல்லது . குளித்த பிறகு தலையை ஈரம் போக நன்கு துவட்டுதல் மிகவும் அவசியம். அத்துடன் தலைக்கு சாம்பிராணி தூபம் போடுவதாலும் நீரேற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.