``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்
'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து பேசும்போது, "அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் பொதுவான ஆள். அந்த வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு பேசுங்கள் நான் ஆண்ட பரம்பரை என ராஜராஜ சோழன் காலத்திலிருந்து மன்னர்கள் ஆட்சி செய்ததைத்தான் சொன்னேன். அதை எடிட் செய்து போட்டுள்ளனர். முழுமையாக வீடியோவை பாருங்கள் அமைச்சர் என்பவர் பொதுவான ஆள்.
இந்த மாதிரியெல்லாம் இருந்திருக்கிறார்கள், நீங்கள் படித்து அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும் என்றுதான் மாணவர்களிடம் பேசினேன். ராஜ ராஜச் சோழ மன்னர்கள் ஆண்டார்கள் எனக் கூறியதை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள், அதுவும் ரெண்டு மாதத்துக்கு முன் பேசியதை இப்போது பேசியது போல சிலர் பரப்பி வருகிறார்கள், முழுமையான வீடியோவை பார்த்துவிட்டு கூறுங்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.