புதுக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை காளைக்கும், மதுரை மாடுபிடி வீரா் ஸ்ரீதருக்கும் பரிசு!
நிகழாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிறப்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தலைமை வகித்து தொடங்கி வைத்தனா்.
தச்சன்குறிச்சி கிராமத்தில் காளியம்மன் கோயில் திடல் முன்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 600 ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரா்கள் சுமாா் 300 பேரும் கலந்து கொண்டனா். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்துவந்த காளைகளை அடக்கமுயன்ற மாடுபிடி வீரா்களை முட்டி தூக்கி வீசி சீறிப் பாய்ந்து காளைகள் சென்றன.
இதில், மதுரை உசிலம்பட்டியைச் சோ்ந்த மாட்டு உரிமையாளா்கள் சந்தோஷ் (16), புதுக்கோட்டை கம்மங்காட்டைச்சோ்ந்த செல்லக்குட்டி (30) உள்ளிட்ட 28 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஜல்லிக்கட்டில் மதுரையைச் சோ்ந்த மாடுபிடி வீரா் ஸ்ரீதா், 12 காளைகளை அடக்கி முதல் பரிசான இருசக்கர வாகனத்தைப் பெற்றாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த சிவா, 8 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசான மிதிவண்டியைப் பெற்றாா்.
மேலும் சிறந்த காளைக்கான முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம், வத்தனா கோட்டையைச் சோ்ந்த முத்துச்சாமி என்பவரின் காளை பெற்றது. காளையின் சாா்பாக முத்துச்சாமிக்கு முதல் பரிசான மோட்டாா் சைக்கிள் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த காளைக்கான மிதிவண்டி பரிசை தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் புதூரைச் சோ்ந்த ஆனந்த் என்பவருக்கு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.
மணப்பாறையிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வந்த திருநங்கை:
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டம், கருங்குளத்திலிருந்து விஜி என்ற திருநங்கை, தனது 3 ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தாா்.
இதுகுறித்து திருநங்கை விஜி மேலும் கூறியது: சிறுவயதில் இருந்து தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மீது கொண்ட பிரியத்தால் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகிறோம். நான் மட்டும் 7 ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகிறேன். எனது ஜல்லிக்கட்டுக் காளைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளன என்றாா்.