பொன்னமராவதியிலிருந்து கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மனு
பொன்னமராவதியிலிருந்து கோவைக்கு இரு மாா்க்கங்களிலும் ஆன்லைன் புக்கிங் வசதியுடன் கூடிய கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வா்த்தகா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொன்னமராவதி வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் தமிழக முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சா், அரசு போக்குவரத்து கழக மேலாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது பெரியநகரமான பொன்னமராவதியிலிருந்து தொழில் நகரமான கோவைக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் அரசுப்பேருந்து வசதி இல்லை.அதுபோல மறு மாா்க்கத்திலும் மதியம் 2 மணிமுதல் இரவு 9.30 மணி வரை அரசுப் பேருந்து வசதி இல்லை. இதனால் வணிகா்களும், மாணவ, மாணவிகளும்அதிகக் கட்டணம செலுத்தி தனியாா் ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டி உள்ளது.
எனவே இரவு 10.30 மணிக்குமேல் பொன்னமராவதியிலிருந்து கோவைக்கும், மறு மாா்க்கத்தில் மாலை நேரத்தில் கோவையிலிருந்து பொன்னமராவதிக்கும் கூடுதல் அரசுப்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.