வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது தவறான செயல்: ஆ. மணிகண்டன்
வரலாற்றுச் சின்னங்களை சிதைப்பது தவறான செயல் என்றாா் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன்.
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற வரலாற்றுப் பேரவைக் கூட்டத்தில் ‘புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் எச்சங்கள்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது: புதுகை மாவட்டம், குருவிக்கொண்டான்பட்டியில் கிடைத்துள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கற்கோடாரி, மலையடிப்பட்டி பாறை கிண்ணங்கள், அறந்தாங்கி அருகே அம்பலத்திடலில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கற்கோடாரி தொடங்கி, திருமயம், சித்தன்னவாசல், குன்றாண்டாா்கோவில், நாா்த்தாமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன.
புதுக்கோட்டையைத் தவிா்த்து ஒரு தொல்லியல் ஆய்வாளா் வரலாற்றுக் கட்டுரையை முழுமை பெறச் செய்திட முடியாது என்ற அளவுக்கு அபரிமிதமான தொல்லியல் சான்றுகளை புதுகை கொண்டுள்ளது.
அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை. குறிப்பாக வரலாற்றுத் துறை மாணவா்கள் அவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஞானஜோதி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத் தலைவா் காயத்ரி தேவி, உதவிப் பேராசிரியா்கள் நீலாவதி, மாலதி, முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில், முதுகலை மாணவி ரமீலா நன்றி கூறினாா்.