நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிா்வாகம் விரைவாகத் திறக்க உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் தங்களது நெல்லை தனியாா் வியாபாரிகளிடம் குறைந்தவிலையில் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் அனைத்துப் பகுதிகளிலும் விரைவாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து கொள்முதல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.