செய்திகள் :

e-Ambulance: இனி வருகிறது இ-ஆம்புலன்ஸ்கள்: எந்தெந்த நிறுவனங்கள் இதில் இணையக்கூடும்?

post image

எலெக்ட்ரிக் டூ-வீலர், கார்கள் வரிசையில் இ-ஆம்புலன்ஸ்கள் புதிதாக வரவுள்ளன. இதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு வெளியிட்ட நிலையில், முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் அவசர ஊர்தி வாகனங்களை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

e-Ambulance

மத்திய அரசின் திட்டமான இந்த PM e-Drive திட்டம், கனரக தொழில்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைந்த செயல்பாடு. இந்த திட்டத்தில் தகுதியுடைய வாகனங்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் மானியம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

ஆட்டோ மொபைல் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்ஸ், டாடா, மாருதி சுஸுகி மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனமான EKA இந்த முன்னெடுப்பில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களுக்கான வரையறைகள் மற்றும் மானிய அமைப்புகள் இறுதி செய்யப்படவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் மானியம் பெற தயாரிப்பாளர்கள் தங்கள் வடிவமைப்பின் முந்தைய மாதிரியை (ப்ரோட்டோடைப்) ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் கூட்டமைப்பின்(ARAI) பரிசீலனைக்காக சமர்பிக்க வேண்டியிருக்கும்.

Electric Vehicle Ambulance

மருத்துவ துறையில் பயன்பாட்டில் உள்ள முதலுதவி வாகனம் (Medical First Responder Units), நோயாளிகள் இடபெயர்வு வாகனங்கள்(Patient Transport Ambulances), பேசிக் லைஃப் சப்போர்ட் (Basic Life Support) மற்றும் அட்வான்ஸ்ட் லைஃப் சப்போர்ட் (Advanced Life Support) பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க மத்திய அமைச்சகம் வழிகாட்டுதல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தயாரிப்பாளர்களும் நான்கு பிரிவுகளிலும் வாகனங்களை தயாரிப்பதில்லை. எனவே இதில் பங்கு எடுப்பது அந்தந்த தயாரிப்பாளரின் முந்தைய அனுபவம் மற்றும் ஆர்வம் தொடர்புடையது எனவும் சொல்லப்படுகிறது.

எனினும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் சேவைகளை பரவலாக்கம் செய்யவும் அவசர ஊர்தி உள்ளிட்ட அத்தியாவசிய வாகன துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கவும் இந்த திட்டம் உதவக்கூடும் எனக் கூறப்படுகிறது.