ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள ஆண்டாள் ஆறுமுகத்தின் வீட்டில், அபிராமிபுரம், பூக்கடை உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்தச் சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், "ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்திற்குச் சொந்தமான மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.912 கோடி வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்டவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் ஆறுமுகத்திற்குத் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.