FICCI : 'இருவரையும் இந்த விஷயத்தில் மன்னிக்க மாட்டேன்' - கமல், த்ரிஷா `Fireside Chat'
சென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, 'மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு' என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரை நட்சத்திரங்கள் கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்ட 'ஃபயர்சைட் சாட்' நிகழ்ச்சி நடந்தது.
நடிகர் கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, "இப்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். தொழில்நுட்பம் தாமதமானதால் அதன் விளைவுகளும் தாமதாமகிறது. ஓ.டி.டி 2012-ம் ஆண்டே வந்திருக்கலாம்.
இந்தியர்கள் எளிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்வார்கள்... அதில் ஒன்றிக்கொள்வார்கள். சென்னையில் இருக்கும் நான் முதலில் ப்ளூடூத்தை பயன்படுத்தவில்லை. விருமாண்டி படத்திற்காக நான் அலைந்துகொண்டிருந்தப்போது பரமக்குடியில் இருப்பவர் ப்ளூடூத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

ஏ.ஐ போன்று எதுவாக இருந்தாலும், இந்தியர்களுக்கு கொடுத்தால் போதும், அவர்கள் அதை அழகாக பயன்படுத்தி கொள்வார்கள்.
நானும், மணிரத்னமும் எப்போதும் இணைந்து பணிப்புரிய ரெடியாகத்தான் இருந்தோம். காரணம், நாங்கள் இரண்டு பேரும் இணையும்போது, அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால் தான் நாயகனுக்கு பிறகு இவ்வளவு தாமதம்.
ஹே ராம் த்ரில்லர், வரலாற்று படம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எனக்கு நான் காந்தியை பற்றி படம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். நான் என் அப்பா சொல்லி கொடுத்து காந்தியை கற்கவில்லை. அவருக்கு முன்பே, காந்தியை கற்றவன் நான்.
எனக்கு காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் காந்தி, கூடவே பெரியார் என இருவருக்கும் சினிமா பிடிக்காது. இந்த விஷயத்தில் மட்டும் நான் இருவரையும் மன்னிக்கவே மாட்டேன்.
எனக்கு எப்போதுமே குரு ஸ்தானம் பிடிக்காது. அந்தப் பதவியை வைத்துக்கொண்டு பாலசந்தர் தான் தவிக்க வேண்டுமே தவிர... நான் அல்ல. நான் கடைசி வரை மாணவனாகவே இருந்துகொள்கிறேன். ஒவ்வொரு படத்திற்கும் நான் மாணவனாகவே செல்கிறேன்.
நான் நல்லவனா, கெட்டவனா என்று கேட்டால், என்னுடைய கேமராவில் நான் எப்போதுமே நல்லவன்" என்று பேசினார்.

த்ரிஷா தனக்கான கேள்விகளுக்கு பதில் கூறும்போது, "நான் கமல் சாரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரின் சில படங்களை 20 - 30 முறை கூட பார்த்திருக்கிறேன். எனக்கு மைக்கேல் மதன காமராஜன், நாயகன் என கமல் சாரின் படங்களில் பல ஃபேவரைட்டுகள் உண்டு. டல்லாக இருந்தாலோ, நன்றாக சிரிக்க வேண்டுமானாலும் அவரின் படத்தை பார்ப்பேன். இப்போது லேட்டஸ்டாக விக்ரம் படத்தை மூன்று முறை பார்த்தேன்.
மணிரத்னம் சார் என்னிடம் தக் லைஃப் பற்றிய கதை சொல்லும்போது, 'பொன்னியின் செல்வனின் என்ன செஞ்சீங்களோ, அதற்கு எதிரான கதாபாத்திரம் இது' என்று கூறினார்.
கமல் சாருடன் நான் செய்திருக்கும் ஒவ்வொரு படத்திலும் பெண்களின் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படி இப்போது திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு தொழில்நுட்பம் தொடங்கி திரை வரை அதிகரித்துள்ளது.
கமல்ஹாசன் சார் 'நல்லவரா, கெட்டவரா' என்று கேட்கிறீர்கள்... இதற்கான பதில் தக் லைஃபை பார்த்தால் கூட பதில் தெரியாது" என்று பேசி முடித்தார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play