செய்திகள் :

Financial Resolution கிரெடிட் கார்டு டு முதலீடு; 2025-ல் கட்டாயம் எடுக்க வேண்டிய 5 நிதி ரெசல்யூசன்ஸ்

post image

'2025-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கும். ஆரம்பத்தில் நன்கு சென்றுகொண்டிருந்த பங்குச்சந்தை, கடந்த சில மாதங்களாக இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும்.

'இந்த ஆண்டு பங்குச்சந்தை எப்படி இருக்கலாம்?', 'எதில் முதலீடு செய்யலாம்?' போன்றவற்றை விளக்குகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்.

2025 இனிதே தொடங்கிவிட்டது... இந்நேரத்திற்கு ரெசல்யூசன் எல்லாம் எடுத்திருப்பீர்கள். அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்றும் மனக்கணக்கு போட்டிருப்பீர்கள். அந்த ரெசல்யூசனுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இந்தக் கட்டுரை.

நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்

'பணம் பத்தும் செய்யும்' என்பது மாறி, தற்போது 'எதை செய்ய வேண்டுமானாலும் பணம் வேண்டும்' என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி பணம் எல்லாமுமாக மாறியிருக்கும் சூழலில் 'நிதி ஒழுக்க'த்தை வளர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.

அந்த நிதி ஒழுக்கத்தை பின்பற்ற 5 டிப்ஸ்களை வழங்குகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்...

வேண்டாம் அல்ல...வேண்டும்!

கிரெடிட் கார்டு என்று சொன்னதும் 'அது ஒரு குழி...அதில் சிக்கி கொள்ள வேண்டாம்' என்ற குரல் பரவலாக எழுகிறது. ஆம்...அது ஒரு குழி தான். ஆனால், சாமர்த்தியமாகச் செயல்பட்டால், அதற்குள் விழாமல் தப்பித்துவிடலாம். கிரெடிட் கார்டை எடுத்துகொண்டால் கேஷ் பேக், பாயிண்ட்ஸ், நல்ல கிரெடிட் கார்டு ஹிஸ்டரி, விமான நிலையங்களில் சலுகை என ஏகப்பட்ட சலுகைகள் இருக்கின்றன.

credit card
வேண்டாம் அல்ல...வேண்டும்!

நமக்கு தேவைப்படும்போது இதை பயன்படுத்தினால் நமக்கு லாபம். முன்னர் சொன்ன வாக்கியத்தில், 'நமக்கு தேவைப்படும்போது' என்பதை நன்கு கவனிக்கவும். ஆம்.. நமக்கு தேவைப்படும்போது அல்லாமல், 'கார்டில் லிமிட் பாக்கி உள்ளதே' என்று பயன்படுத்தினால், கிரெடிட் கார்டு குழிக்குள் நாம் விழுவதை யாராலும் தடுக்கவே முடியாது. கிரெடிட் கார்டை 45 நாள்களுக்கு திரும்ப செலுத்த வேண்டாத கடன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்ட் பயன்படுத்திய பில்லை 'டான்' என்று சரியான தேதியில் கட்டிவிட்டால், நாம் தான் கில்லி.

கவனம் தேவை

இன்று இருக்கும் விலைவாசிக்கு முடிந்தளவுக்கு கடன் வாங்காதீர்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, கடன் வாங்கவே வாங்காதீர்கள் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒருவேளை நீங்கள் கடன் வாங்கினால்... வாங்கியிருந்தால் அதை சரியாக கட்டிவிடுங்கள். தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி செய்வார்கள்... வாராக் கடன் என்று நம் கடன்களை கழித்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். தற்போதைய சூழலில் இதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

இப்போதெல்லாம் வங்கிகள் கடன் கட்டாத வாடிக்கையாளர்களின் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து கடனை வசூலிக்கச் செய்கிறார்கள். கடன் வசூலிப்பதில் வங்கி கடைபிடிக்கும் மென்மையான நடைமுறைகளை தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிக தொகையுள்ள கடன்களை அடைப்பது, அதிக வட்டி கொண்ட கடன்களை அடைப்பது - இந்த இரண்டில் ஏதாவது ஒருமுறையை பின்பற்றி சீக்கிரம் கடனை முடிக்க பாருங்கள்.

அதனால், கடனை சரியாக கட்டும் பழக்கத்தை கொள்ளுங்கள்.

கவனம் தேவை

அதிகப்படுத்துங்கள்!

'இதுவரை முதலீடே செய்யாதவர்கள்' இந்த ஆண்டு முதலீடு செய்ய தொடங்குங்கள். ஏற்கனவே முதலீடு செய்துகொண்டிருப்பவர்கள் எஸ்.ஐ.பி, ஆர்.டி என எதில் முதலீடு செய்துகொண்டிருந்தாலும், உங்கள் முதலீட்டு தொகையை இந்த ஆண்டு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது உயர்த்துங்கள்.

'அது கொஞ்சம்... இது கொஞ்சம்' என ஏகப்பட்ட முதலீடு செய்துவருகிறீர்கள் என்றால், அவை அனைத்தையும் மாற்றி நான்கு ஐந்து தரமான முதலீடுகளாக செய்யுங்கள். வட்டி மிக குறைவாக கிடைப்பவற்றில் முதலீடுகள் நிச்சயம் வேண்டாம். அதிக வட்டி கிடைக்கும் என்று கூறும் முதலீடுகளும் அபாயம் தான்...கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.

பழகுங்கள்!

ஆண்டுக்கு மொத்தம் 12 மாதங்கள். இதில் மூன்று மாதங்களை 'No Buy Month' ஆகவும், இன்னும் மூன்று மாதங்களை 'Low Buy Month' ஆகவும் கடைபிடியுங்கள். No Buy மாதத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர, வேறு எந்த பொருளையும் வாங்கவே கூடாது. Low Buy மாதத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் வேறு சில பொருட்களையும் வாங்கலாம் தான். ஆனால், அதற்கென ஒரு லிமிட் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் உங்கள் செலவுகள் போகவே கூடாது.

இந்த No Buy Month-யும், Low Buy Month-யும் ஒரு மாதத்திற்கு அடுத்த மாதம் என மாற்று முறையில் பின்பற்றலாம். இந்த மாதங்களில் மீதமாகும் தொகைகளை உடனே முதலீடு செய்துவிடுங்கள். இல்லையென்றால், செலவாகிவிடும்.

பழகுங்கள்!

கட்டாயம் சொல்லிவிடுங்கள்!

பலர் தங்கள் முதலீடுகளைப் பற்றி தங்களது குடும்பங்களிடம் சொல்வதில்லை. இது மிக தவறு. குடும்பத்திற்காக செய்யும் முதலீடுகளை அவர்கள் தெரிந்திருப்பது மிக மிக அவசியம். அதனால், அவர்களுக்கு இந்த ஆண்டில் எல்லா முதலீடுகளையும் தெரிவியுங்கள். எதாவது ஒரு எதிர்பாராத சூழலில் இது தான் உங்கள் குடும்பத்திற்கு கை கொடுக்கும். இல்லையென்றால், தெரியாமல் போகவே வாய்ப்புகள் அதிகம். நாம் பாடுபட்டு சேர்த்ததற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

மேலே கூறிய ஐந்தையும் கட்டாயம் உங்கள் சூழ்நிலைக்கு பின்பற்ற முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இரண்டையாவது பின்பற்றுங்கள். அதுவே உங்களுக்கு பெரிய அளவிலான நிதி ஒழுக்கத்தைக் கொண்டுவரும்.

ஹேப்பி 2025 :-)

Credit Card: `இனி 30 சதவிகிதம் கிடையாது...' - கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்

கிரெடிட் கார்டு பில்லை தாமதமாக கட்டினால் 30 சதவிகிதத்திற்கு மேல் வங்கிகள் வட்டி வசூலிக்கக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை மாற்றி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியு... மேலும் பார்க்க

நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால் போட்ட பணம் என்ன ஆகும்?!

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசை சேமித்து மட்டும் வைக்காமல், அதை பெருக்குவதற்கான சிறந்த ஆப்ஷன் 'மியூச்சுவல் ஃபண்ட்'. 'பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயமாக இருக்கிறது' என்பவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்... மேலும் பார்க்க