சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
GOAT Bumrah: 'சரிந்துபோன குடும்பத் தொழில்; சிங்கிள் மதர் வளர்ப்பு - பும்ராவின் குடும்ப பின்னணி| Ep 2
'கிரிக்கெட் கனவுடன் குட்டிப் பையன்!'
கன்னத்தை பிடித்துக் கிள்ளி கொஞ்சும் அளவுக்கு குழந்தைமை மாறாமல் இருக்கும் அந்த சிறுவனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் அவனுக்கு பௌலர்கள் மீதுதான் கண். பௌலர்களின் வேகம், அவர்களின் பரபரப்பு, வியர்க்க விறுவிறுக்க வீசி பேட்டர்களை திணறடிக்கும் அவர்களின் தீரம், இவையெல்லாம்தான் அந்த சிறுவனுக்கு எதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியையும் எனர்ஜியையும் கொடுக்கிறது.
கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் ஆவது விட பௌலராவது ரொம்பவே எளிது. ஏனெனில், பௌலராவதுதான் பட்ஜெட் ப்ரண்ட்லி. பேட்டராக பயிற்சி எடுக்க ஒரு கிட் பேக் வாங்க வேண்டும். சாமானிய குடும்பங்களால் செய்ய இயலாத செலவு அது. அதேநேரத்தில் பௌலராக ஒரு ஷூவும் டென்னிஸ் பந்தும் மட்டுமே போதும். ஆனால், அந்த சிறுவனுக்கு ஒரு புதிய ஷூ கூட கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருந்தது.
பிரபலமான ஒரு ஷூ பிராண்டின் கடை முன் நின்று கொண்டு, 'அம்மா...எனக்கு ஒரு ஷூ வாங்கி கொடுங்களேன்..' என அந்த குட்டிப் பையன் கேட்கிறார். அந்த அம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவித ஆற்றாமையோடு மகனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அம்மாவின் நிலையை புரிந்துகொண்ட அச்சிறுவன், 'ஒரு நாள் வளர்ந்து பெரிய ஆளாகி நானே ஒரு நல்ல ஷூவா வாங்கிப்பேன்...' என உள்ளுக்குள் கூறிக்கொள்கிறான்.
சிறுவன் வளர்ந்தான். அவனது ஆசையும் நிறைவேறியது. தனக்கென ஷூ மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கென ஒரு உலகக்கோப்பையையே வாங்கிக் கொடுத்தான். ஷூ கடைக்கு வெளியே அம்மாவோடு ஏக்கத்தோடு நின்று வேடிக்கை பார்த்த அந்த குட்டிப் பையன் நம்முடைய பும்ராதான்.
'பும்ராவின் குடும்பப் பின்னணி'
ஜஸ்ப்ரீட் பும்ரா, குஜராத்தில் வசிக்கும் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். தாராளமயமாக்கலுக்குள் இந்தியா நுழைந்திருந்த 1993 காலக்கட்டத்தில்தான் பும்ராவும் பிறக்கிறார். இயல்பில் பும்ராவின் குடும்பம் அத்தனை ஏழ்மையான குடும்பம் கிடையாது. பும்ராவின் அப்பா ஜஸ்பீர் சிங் 3 தொழிற்சாலைகளை நடத்தி வந்தார். அம்மா தல்ஜீத் நன்கு படித்தவர். ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். ஒரு செட்டிலான குடும்பம். ஆனால், ஒரு துயர நிகழ்வு பும்ராவின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. பும்ராவுக்கு 5 வயதாக இருக்கையில் அவரது தந்தை திடீர் மரணம் அடைகிறார். இங்கிருந்துதான் எல்லாமே மாற தொடங்குகிறது.

சந்தோக் சிங், பும்ராவின் தாத்தா. சந்தோக் சிங்குக்கு பக்கப்பலமாக இருந்து தொழிற்சாலைகளை லாபகரமாக நடத்த காரணமாக இருந்தது பும்ராவின் அப்பாதான். திடீரென பும்ராவின் அப்பா உயிரிழந்ததால் சந்தோக் சிங்கும் திணறிப்போனார். தொழிலும் நொடி விழுந்தது. தொழில் நட்டத்தை அடைய தங்களின் மூன்று தொழிற்சாலைகளையும் விற்கும் நிலைக்கு சென்றார் சங்கோத் சிங். பும்ராவின் அம்மாவுக்கும் சங்கோத் சிங்கின் குடும்பத்துக்கும் பல வருடங்களாக பேச்சுவார்த்தையே கிடையாது. அதற்கான காரணம் சரியாக எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் கணவர் இறந்த, தொழிற்சாலைகளெல்லாம் கையைவிட்டு சென்ற காலக்கட்டத்தில்தான் குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டத்தை உணர முடிகிறது.
சங்கோத் சிங் பிறகு தன்னுடைய மற்ற மகன்களுடன் உத்ரகாண்ட்டுக்கு குடிபெயர்கிறார். தொழிலதிபராக சுகபோகமாக வாழ்ந்தவர், அங்கே ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இறுதியில் அவரின் முடிவும் துயரமானதே. ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளையும் செய்து கொண்டிருக்கும் தன்னுடைய பேரனை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவரின் ஆசையும் கனவாகவே போனது.

'தந்தை இழந்த பும்ராவின் நிலை!'
விவரமே அறியாத வயதில் தந்தையை இழந்ததால் நிறைய பொருளாதார நெருக்கடிகளை இளம் வயதிலேயே பும்ரா எதிர்கொள்ள ஆரம்பித்தார். ஒரு பால் பாக்கெட் வாங்க கூட காசில்லாமல் கஷ்டப்பட்டனர் என பும்ராவின் குடும்பத்துக்கு நெருக்கமான பத்திரிகையாளர் தீபாள் திரிவேதி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரே ஜெர்சி, ஒரே ட்ராக் பேண்ட், ஒரே பழைய ஷூ என அதையே மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்தும் நிலையில்தான் அந்த சிறுவயது பும்ரா இருந்திருக்கிறார். ஆனால், அந்த ஏழ்மையெல்லாம் அவருக்கு எங்கேயும் தடைக்கல்லாக மாறவில்லை.
`சொல்லப்போனால் அப்பாவை இழந்து பொருளாதார சுமைகளை எதிர்கொண்டதால்தான் அம்மாவுடனும் அக்காவுடனும் இன்னும் நெருக்கமானேன். அந்த கஷ்டங்கள்தான் எங்களுக்கிடையேயான பிணைப்பை இன்னும் வலுப்படுத்தியது’ என பும்ராவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில் உலகக்கோப்பையை வென்ற சமயத்தில், 'அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்கலாம். உங்களின் வெற்றிடத்தை நாங்கள் இப்போதும் உணர்கிறோம்.' என நெகிழ்ந்து போயும் பும்ரா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஒரு தந்தையாக மாறிய பிறகுதான் உங்களிடம் நான் எந்தெந்த தருணங்களையெல்லாம் அனுபவிக்க தவறியிருக்கிறேன் என்பதை உணர்கிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இழப்பின் வலி எப்படியிருக்கும் தந்தையில்லாத வெறுமை எப்படியிருக்கும் என்பதெல்லாம் புரிபடும் முன்பே பும்ரா தந்தையை இழந்திருந்தார் என்பதுதான் வேதனை.
கிரிக்கெட் ஆடும் பையன்களுக்கு தந்தைகள் எப்போதுமே பெரும் பக்கப்பலமாக இருப்பார்கள். கிட்டத்தட்ட கிரிக்கெட் கனவு கொண்டிருக்கும் பையன்களின் முதல் பயிற்சியாளரே அவர்களின் தந்தையாகத்தான் இருப்பார்கள். அதற்கான வெகு சமீபத்திய உதாரணம் நிதீஷ் ரெட்டி. அவருக்காக அவருடைய தந்தை தன்னுடைய வேலையை விட்டுவிட்டு களத்தில் குதித்தவர். பும்ராவுக்கு அப்படி ஒரு வாய்ப்பையெல்லாம் வாழ்க்கைக் கொடுக்கவில்லை. ஆனால், தந்தையின் இழப்பு வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது. ஒருவித தைரியத்தையும் மனோதிடத்தையும் கொடுத்தது.

பும்ராவின் அம்மாவுக்கும் கிரிக்கெட் தெரியாது. அக்காவுக்கும் கிரிக்கெட் தெரியாது. இருவருமே நன்கு படித்தவர்கள் என்பதால் பும்ராவையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், பும்ராவின் எண்ணமெல்லாம் வேறாக இருக்கிறது. அவருக்கு எல்லாமே கிரிக்கெட்தான். அதிலும் இந்தியாவில் பாவப்பட்ட ஜென்மங்களாக கருதப்படும் பௌலராக வேண்டும் என்பதுதான் ஆசை.
பும்ரா எப்படி கிரிக்கெட் ஆட தொடங்கினார்? எப்படி தன்னுடைய ஆசையை வீட்டில் சொல்லி ஹெட்மாஸ்டரான அம்மாவிடம் பர்மிசன் வாங்கினார்? இதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
(வேகம்... வீசும்..!)
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
