MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
Good Bad Ugly: "சைனா செட் மொபைல் மூலமாகதான் என் பாடல் தமிழ்நாட்டுக்கு வந்தது!'' - டார்க்கீ பேட்டி
தமிழ் சுயாதீன இசைதுறை இப்போது பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதற்கு முதல் முதன்மையான காரணமானவர் டார்க்கீ நாகராஜ். சி.டி, ஸ்பாடிஃபை, யூட்யூப் என எந்த தளமும் இல்லாத சமயத்திலே உலகத்தின் அத்தனை பக்கங்களுக்கும் தன்னையும் தன்னுடைய சுயாதீனப் பாடல்களையும் கொண்டுச் சேர்த்தவர்.
தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தன்னுடைய 'புலி புலி' பாடலை மீண்டும் ரீ ரெக்கார்ட் செய்துப் பாடியிருக்கிறார். மலேசியாவில் வசிக்கும் டார்க்கீயைத் தொடர்புக் கொண்டு பேசினோம். மலேசியா தமிழில் உற்சாகத்துடன் வணக்கம் சொல்லி வரவேற்று அனைத்துக் கேள்விக்கும் பதில் கொடுத்தார்.

ரொம்ப மகிழ்ச்சி யா!
பேச தொடங்கிய டார்க்கீ நாகராஜ், " படத்துக்கு இங்கயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. படக்குழுவினருக்கு எனக்கு கால் பண்ணி தமிழ்நாட்டிலையும் படம் நல்லா ஓடுறதாக சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி யா! முதன் முதல்ல படத்தோட இணை இயக்குநர் ஹரீஷ்தான் எனக்கு கால் பண்ணி இந்த மாதிரி படம் பண்றோம். அதுல உங்களுடைய பாடல் வைக்கணும்னு சொன்னாரு.
எனக்கென்னா முதல்ல இந்த தகவலை நம்பவே முடியல. உடனடியாக, அங்க விசாரிக்கச் சொன்னேன். உண்மைதான், இங்க கிளம்பி வந்திடுங்கனு சொன்னாங்க. அப்படிதான் 'குட் பேட் அக்லி' படத்துக்குள்ள நானும் என்னுடைய 'அரக்கனா' பாடலும் வந்தது. (சிரித்துக் கொண்டே...)
என்ன 'புலி புலி' பாடலுக்கு பதிலா புதியதாக ஒரு பெயரைச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அந்த 'புலி புலி' பாடலோட உண்மையான பெயர் 'அரக்கனா'. அதிலிருக்கிற வரிகள்லதான் 'புலி புலி' இருக்கும். மற்றபடி அந்த பாடலின் பெயர் அரக்கனாதான்.
அதே மாதிரி முன்னாடி 'தி கீஸ் (The Keys)'னு ஒரு இசைக்குழுவுல இருந்தேன். அந்தக் குழுவிலிருந்து வந்த முதல் பாடல்தான் 'அக்கா மக' பாடல். இந்த 'தி கீஸ்' குழுவுல இருந்து வெளில வந்து பிறகு நான் பண்ணின பாடல்தான் இந்த 'அரக்கனா'.

`தைப்பூசம்'
முக்கியமாக, என்னுடைய பாடலை எப்போதும் நான் 'தைப்பூசம்' அன்னைக்குதான் வெளியிடுவேன். மக்கள் அன்னைக்குதான் அதிகமாக மலேசியாவுல இருப்பாங்க. அதுனால திட்டமிட்டு தைப்பூசம் அன்னக்குதான் வெளியிடுவேன். அன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் அங்க வருவாங்க. என்னுடைய பாடல் தமிழகத்துல வந்ததுல ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கு.
முன்பெல்லாம் தமிழகத்துல இருந்து பலரும் மலேசியாவுக்கு வேலைக்கு வருவாங்க. இப்போ பல நாடுகளுக்கு வேலைக்குப் போறாங்க. அப்படி முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவங்க மொபைல் வாங்கியிருக்காங்க. 'சைனா செட் மொபைல்'னு சொல்வாங்களே..அந்த மொபைல்ல ஒரு 20 பாடல்கள் ஏத்திக் கொடுப்பாங்க. அதுல என்னுடைய பாடலும் இருந்திருக்கு.
அப்படி மலேசியாவுல இருந்து தமிழகத்துக்கு வரும்போது அவங்களோட மொபைல்ல இருந்த இந்த பாடல்களெல்லாம் பலருக்கும் பரிச்சயமாகியிருக்கு. என்னைப் பற்றி இப்போ 'அகு டார்க்கீ' (அகு என்றால் நான் என தமிழில் பொருள்) ஒரு ஆவணப்படம் தயாராகிட்டு இருக்கு. அந்த ஆவணப்படத்துக்காக மேற்கொண்ட சில ஆராய்ச்சிகள் மூலமாக இந்த விஷயத்தை எனக்கு சொன்னாங்க யா!
இந்தப் 'புலி புலி' பாடலுக்காக சென்னைக்கு வந்து ஜி.வி. பிரகாஷ் ஸ்டியோவுல ரெக்கார்ட் பண்ணினோம். இப்போதான் இந்தப் பாடலுக்காக முதல் முறையாக சென்னைக்கு வந்தேன். வடபழனியெல்லாம் நான் சுற்றிப் பார்த்தேன்.

முதல் நாள் ரெக்கார்டிங் முடிச்சிட்டு இரண்டாவது நாளே ஷூட் போயிட்டோம். ஷூட்ல கோரியோகிராஃபர் அசார் என்னுடைய ஒரிஜினல் அரக்கனா பாடலை வச்சு நடனங்கள் ஆடச் சொன்னாரு.
அவர் சொன்னதுக்கு நான் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஆடினேன்." எனச் சிரித்தவரிடம், "இப்போ சமீபத்தில ஹிப் ஹாப் தமிழா உங்களைப் பாராட்டி பேசியிருந்த காணொளி ஒன்றைப் பார்த்திருந்தோமே..." எனக் கேட்டதும், " ஆமா, யா..ஹிப் ஹாப் ஆதி தமிழ் சுயாதீன இசைக்கு நீங்கள்தான் முதல்புள்ளினு சொல்லியிருந்தாரு. அது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது.
'உலகம் ஒருவனுக்கா'
அவர பெரியளவுல வச்சிருக்கேன். அவரும் இசைப் பற்றி நிறைய படிச்சிருக்கார். அவருடைய பாடல்களையும் , அவர் நடிக்கிற படங்களையும் நான் தொடர்ந்து ஃபாலோவ் பண்ணீட்டுதான் இருக்கேன்.
அதே மாதிரி சந்தோஷ் நாராயணன் என்னை 'கபாலி' படத்துக்காகக் கூப்பிட்டாரு. அவர் 'படத்துல முதல் பாடலான உலகம் ஒருவனுக்கா பாடலை நீங்கதான் படிக்கணும்'னு சொன்னாரு. அப்போ எனக்கு கம்யூட்டர் ரெக்கார்டிங் பற்றி எதுவும் தெரியாது. எப்படி பாடுறதுனு தெரியாமல் நான் படத்துல டான்ஸ் பண்ண வர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி 'கபாலி' படத்தினுடைய 'உலகம் ஒருவனுக்கா' பாடல்ல வந்தேன்.

இப்போ சமீபத்துல என்னை கான்சர்டுக்குக் சந்தோஷ் நாராயணன் கூப்பிட்டாரு. அந்த சமயத்துல என்னால போக முடியல. அவருமே 'டார்க்கீ அண்ணனைப் பார்க்கணும்'னு சொன்னாரு. அப்புறம் அவரை நான் மீட் பண்ணி பேசினேன்." என்றார் மகிழ்ச்சியுடன்.
டார்க்கீயின் அடையாளே விரித்துப் போட்ட அவருடைய தலைமுடிதான். டார்க்கீ மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரைப் பார்த்துதான் அவர் இப்போது வரை அதே லாங் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் பற்றி பேசுகையில், " மைக்கேல் ஜாக்சனை எனக்கு அறிமுகப்படுத்தியதே என்னுடைய தந்தைதான்.
அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார்.
எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய நிகழ்வுகளுக்குப் போய் அவரை மாதிரியே ஆடுவேன். அப்போ அனைவரும் கொடுத்த ஊக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை தொடர்ந்து அதே மாதிரி இயங்க வைக்குது.
அதே மாதிரி 'நீ எவ்வளவு உயரம் போனாலும் அனைவரும் சமம்தான். அனைத்து பகுதிகளுக்கும் போய் நீ ஃபெர்பார்ம் பண்ணனும்'னு என்னுடைய தந்தை எனக்குச் சொல்லி வளர்த்திருக்கார்.

சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா!
இன்னைக்கு நான் அனைத்து மக்களோட நிகழ்வுகளுக்கும் போய் ஃபெர்பார்ம் பண்றேன். குறைவான பணத்துக்கு இன்னைக்கு ஒருத்தர் கூப்பிட்டால் அன்னைக்கு அங்கதான் போவேன். அதே தேதியில திடீர்னு மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாலும் நான் போகமாட்டேன்." என்றவர், "இன்னைக்கு தமிழ் சுயாதீன இசை ரொம்பவே வளர்ந்திருக்கு. பார்க்கவே சந்தோஷமாக இருக்கு. என்னைப் பற்றிய ஆவணப்படமும் கூடிய விரைவுல வெளியாகுது. அந்த ஆவணப்படத்தை பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த விக்ரம் இயக்கியிருக்கிறார். பாருங்க கூடிய விரைவுல சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா!" என உற்சாகத்துடன் பேசி முடித்துக் கொண்டார்.