Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
Health: அட்டையில் ஒட்டிய மாத்திரை; ஓப்பன் செய்த மருந்து பாட்டில் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
நமக்கு நல்லது செய்கிற, பிரச்னைகளைச் சரி செய்கிற மாத்திரை, மருந்துகள் சில நேரம் கெட்டதும் செய்யலாம். அது நிகழாமல் தடுக்க நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்களை இங்கே சொல்கிறார் பொது நல மருத்துவர் செல்வராஜன்.

* கண், காது, மூக்கு போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்காக வாங்கும் சொட்டு மருந்துகளை நாள்பட வைத்திருந்து பயன்படுத்தக்கூடாது.
* சர்க்கரைநோய், இதயநோய் உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். அவர்களேகூட 15 நாள்களுக்கு ஒரு முறை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

* நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு, புதிதாகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரையில் டோசேஜ் குறைக்கப்படுவதுண்டு. அது தெரியாமல் மீதமான பழைய மாத்திரைகளைச் சிலர் பயன்படுத்துவார்கள். இது, நோய் பாதிப்பை அதிகரித்துவிடும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்திவிடும்... கவனம்.
* மாத்திரையின் நிறத்தில் மாற்றம், நாற்றம், அட்டையுடன் மாத்திரை ஒட்டிக்கொண்டிருப்பது, கவர் பிரிந்திருப்பது தெரியவந்தால், காலாவதி தேதிக்கான அவகாசம் இருந்தாலும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* பிரிக்கப்பட்ட மருந்து பாட்டிலை அதிகபட்சம் பத்து நாள்கள்வரைதான் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் மருந்தில் சேர்ந்து, அதன் தன்மையை அழித்துவிடும். சிரப் போன்ற திரவ வடிவிலான அனைத்து மருந்துகளுக்கும் இந்தக் கால அவகாசம் பொருந்தும்.
* முழு அட்டையாக அல்லாமல் தனியாகத் தரப்படும் மாத்திரையில் காலாவதி தேதி இருப்பது உறுதி இல்லை. அவற்றை வாங்க வேண்டாம். அட்டையில் காலாவதி தேதி இருக்கும் பகுதியிலுள்ள மாத்திரையை இறுதியாகப் பயன்படுத்தவும்.