ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
Health: கால்களுக்காகத்தான் காலணி; காலணிக்காக கால்கள் இல்லை..!
உயரத்தை வைத்தும் மனிதர்களை மதிப்பிடும் காலம் இது. குறைந்தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அறிமுகமாயின. இவற்றால் ஏற்படும் 'பின்’ விளைவுகள் குறித்து இப்போதுதான் விழிப்பு உணர்வு ஏற்படத் தொடங்கி இருக்கிறது.
பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட ஹீல்ஸ் அணிய வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஹீல்ஸ் உள்ள செருப்புகளின் உயரம், அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என்று பல காரணிகளின் அளவைத் தீர்மானிக்கிறது. அழகாகக் காட்டுவதற்காக, அதிக உயரம் உள்ள ஹீல்ஸ் செருப்பை அணிவதால், உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகும், பாதத்துக்குப் பங்கம் விளைவிக்காத செருப்பு எது என்பன பற்றி, பாத வல்லுனர் டாக்டர் டி.வி.ராஜா விரிவாகச் சொல்கிறார்.
''முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் காலுக்குக் கொடுப்பது இல்லை. தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் நாம் ஒரு முறையாவது, பூமி மேல் அழுந்திப் பதியும் பாதத்தைப் பார்க்கிறோமா? அதேபோல், செருப்புகளை உங்கள் கண்கள் தேர்வு செய்யக் கூடாது. காலணிக்காக உங்கள் கால்கள் இல்லை; உங்கள் கால்களுக்காகத்தான் காலணி. எனவே உங்கள் கால்தான் அதற்கேற்ற செருப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்று காலுக்குப் பொருந்தாத செருப்பை வாங்கக் கூடாது' என்று அறிவுரை தந்த மருத்துவர், காலுக்கு உகந்த செருப்பைத் தேர்வு செய்வது பற்றிக் கூறினார்.
''இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். திருமணம், பார்ட்டி போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது ஹீல் உயரம் ஒன்றரை இன்சுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அணிந்தால் காலுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
பெரிய ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நின்று பணிபுரிபவர்களை 'புரஃபஷனல் ஹசார்ட்’ (Professional Hazard) பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் என்பார்கள். இவர்களுக்குக் கால் பெருவிரலில் வீக்கம் (Bunion) ஏற்படும். ஒருகட்டத்தில் காலின் வடிவமே மாறிவிடும். அதிக நேரம் நின்று பணிபுரிபவர்கள், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிவது நல்லது. இல்லை எனில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
நடிகைகள், மாடல்கள் உயரத்தைக் கூட்டுவதற்காக பாயின்டட், பென்சில் ஹீல்ஸ்களை அணிகின்றனர். ஆனால், தற்போது, பத்து வயது நிரம்பும் பெண் குழந்தைகள்கூட ஹீல்ஸ் போடுகிறார்கள். பாயின்டட் ஹீல்ஸ் மற்றும் பென்சில் ஹீல்ஸைத் தொடர்ந்து அணியும்போது, உடல் எடையைத் தாங்கி நிற்கும் பாதத்திலும், குதிகாலிலும் வலி ஏற்படும். இடுப்பு மற்றும் பின்பக்கத்தில் சதை போடும். ஸ்டூல் போன்று செருப்புகள் வந்துவிட்டன. பக்கிள்ஸ் வைத்த ஸ்டூல் செருப்பு பாதுகாப்பானதோடு, உயரமாகவும் காட்டும்.
ஹீல்ஸ் இல்லாமல் முழுவதும் தட்டையாக உள்ள செருப்புகளை இளம் வயதினர் அணியலாம். பாதிப்பு இருக்காது. ஆனால், வயது ஏற ஏற இதுபோன்ற செருப்பு அணிவதைத் தவிர்க்க வேண்டும். நம் காலின் வளைவிற்கு ஏற்ற செருப்பையே அணியவேண்டும்.
நம் சீதோஷண நிலைக்கு ரப்பர் செருப்புதான் பெஸ்ட். ரப்பர் செருப்பில் காற்று புகக் கூடியது (Breathable), காற்று புகாதது (Non-breathable) என இரண்டு வகைகள் உண்டு. இதில் காற்று புகக்கூடிய செருப்புதான் மிகவும் நல்லது. இந்த வகைச் செருப்பில் காற்று, காலின் அடிப்பாதம் வரை செல்லும். முன்பு தயாரிக்கப்பட்ட செருப்பின் அடிப்பகுதி மட்டும் பி.வி.சி (PVC)-யில் இருந்தது. ஆனால், தற்போது சில செருப்புகளில் மேல்பகுதியிலும் பி.வி.சி-தான் இருக்கிறது. இந்த வகைச் செருப்புகளை அறவே தவிர்க்கவும். சிலருக்குத் தோல் செருப்பு சௌகரியமாக இருக்கும். ஆனால், அதையே தொடர்ந்து அணியவும் கூடாது. பாதம் காற்றோட்டம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகும்.
சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் ஷூ, செருப்பு அணிவதற்கு முன்பு காட்டன் சாக்ஸ் அணியலாம். வியர்வையைக் காட்டன் உறிந்துகொள்ளும். காட்டன் அடுக்கு ஒன்று சேர்த்தே செருப்புகள் விற்கின்றனர். அது உங்கள் காலுக்குப் பொருந்தினால் வாங்கலாம்.
அதிக எடை உள்ள செருப்பை அணிந்தால், கால் வலி, காய்ப்பு வரும். அதிக எடை இல்லாத செருப்பை அணியுங்கள். வேலைக்குத் தகுந்த மாதிரியான செருப்பை அணிவது நல்லது.'' என விளக்கமாகச் சொன்ன மருத்துவர் கால்களின் பாதுகாப்புக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய டிப்ஸ் ஒன்றையும் குறிப்பிட்டார். ''இரவு படுக்கைக்குப் போகும் முன், பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.''
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...