உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் பக்கம்? | Explained
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இரண்டு நாடுகளும் தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துள்ளன. வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை விட ஆயுத அணிவகுப்பே முக்கியத்துவம் பெறுகிறது.
கடலில் இரு நாடுகளும் போர் கப்பல்களை குவித்துள்ளன. சில இடங்களில் போர் நிறுத்தத்தை மீறும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த இந்தியா தயாராக உள்ளது என பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவிப்பதற்கு இந்திய தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் பாலஸ்தீன் போர், சூடான், மியான்மர், எத்தியோப்பியா நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் என பல சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடாக (Victim) இந்தியாவுக்கு பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கத்தார், ஜோர்தான், ஈராக், நார்வே, அங்கோலா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவின் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளன.
ஆனால் இந்தியா முற்றிலுமாக பாகிஸ்தானுக்கு எதிராக திரும்புவது அவர்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே வல்லரசு நாடுகளுடன் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன.
இஸ்லாமிய நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு என்பதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே வேளையில் இந்தியா அணி சேரா கொள்கையைப் பின்பற்றுவதனால் இந்தியாவுக்கான போர் கூட்டணி என எந்த நாட்டையும் குறிப்பிட முடியாது. இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகமுடியும்... மற்ற நாடுகள் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் போரை எப்படி அணுகுகின்றன, போர் என்று வந்தால் எந்த நாடுகள் அதிக ஆதரவைப் பெறும் என்ற விவாதங்களும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் நடந்தது என்ன?
பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்வதே இது போன்ற தாக்குதல்களுக்கு காரணம் என குற்றம்சாட்டி வருகிறது இந்தியா. பாகிஸ்தான் தரப்பில் தங்களுக்கு இதில் தொடர்பில்லை எனக் கூறப்பட்டாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பல விஷயங்களை முன்வைத்து வருகிறது.
இரண்டு நாடுகளும் பிறநாட்டு குடிமக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. விசாக்களை ரத்து செய்துள்ளன. கடிதப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. எல்லைகளை மூடியுள்ளன. தூதர்களைத் திரும்ப பெற்றுள்ளன.
இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இது ஒரு போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கண்டித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை வலியுறுத்தும் சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தங்கள் வான் வழியை மற்ற நாட்டு ஏர்லைன்களுக்கு தடை செய்துள்ளன. பாகிஸ்தான் ஏவுகனை சோதனைகளையும் ராணுவ ஒத்திகைகளையும் நடத்தி வருகிறது. அணு ஆயுத மிரட்டலும் விடுத்துள்ளது.
இன்று உலக பொருளாதாரம் இருக்கும் நிலையற்ற சூழலில் போர் எந்த நாட்டுக்கும் பாதகமானதாகவே அமையும். இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளன.
ஆனால் போர் என்று வந்துவிட்டால் உலக நாடுகள் யார் பக்கம் நிற்கும்?
இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள்
அமெரிக்கா
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜாங்க உறவு கடந்த தசாப்தத்தில் வலுவடைந்திருக்கிறது. குறிப்பாக QUAD (ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உரையாடல் குழு) இருநாடுகளுக்கு இடையிலான ஆதரவை வலுப்படுத்த உதவியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, கடந்த சில தசாப்தங்களில் பெரும் வளர்ச்சியடைந்துள்ள இந்தியா, ஆசியாவில் இருக்கும் மிக முக்கிய கூட்டாளி. சீனாவுடன் வர்த்தக போர் நடைபெறும் சூழலில் இந்திய சந்தை அமெரிக்காவுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மிக நீண்டது எனத் தெரிவித்த ட்ரம்ப், இந்தியா தன்னை பாதுகாத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது எனக் கூறியதன் மூலம் இந்தியாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் நேரடியாக களமிறங்க முடியாது என்றாலும், ராஜாங்க ஆதரவை வழங்கும், உளவுத்துறை மூலமாகவும் ராணுவ உதவிகள் செய்தும் ஆதரவு வழங்க முடியும்.

ரஷ்யா
பாகிஸ்தான் ரஷ்யாவிடம் உதவி கேட்டிருந்தாலும் நீண்டகால உறவின் அடிப்படையில் ரஷ்யா இந்தியாவுடன் துணை நிற்கும் வாய்ப்புகளே அதிக. 1971ம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது ரஷ்யா வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுகோய்-30 மற்றும் S-400 போன்ற ஆயுதங்களை இறக்குமதி செய்துவருகிறது. போர் ஏற்பட்டால் ரஷ்யா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நாவில் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் உடன் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த போரில் இந்தியா நடுநிலைமை பேணி வருகிறது. எனினும் மேற்கு நாடுகளின் அறிவுறுத்தலை மீறி, ரஷ்யாவுடன் பொருளாதார உறவில் நீடித்தது இந்தியா.
பாகிஸ்தான் மற்றும் சீனா தற்போது வலிமையான பிணைப்பைக் கொண்டுள்ளன. ரஷ்யாவுக்கு இந்தியாவை விட நெருக்கமான கூட்டாளியாகவும் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் திகழ்கிறது சீனா. இதனால் ராணுவ ரீதியில் பெரும் உதவிகளைச் செய்ய ரஷ்யா முன்வருமா என்பது கேள்விக்குறியே!
பிரான்ஸ்
இந்தியாவும் பிரான்ஸும் சிறந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. பிரான்ஸிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா. நீர்மூழ்கிகளை வாங்குவதுடன் விண்வெளி அறிவியல் மற்றும் பொருளாதாரத்திலும் பிணைப்புக்ளைக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் மாக்ரான் மற்றும் இந்திய பிரதமர் இடையிலான பேச்சுவார்த்தைகளை வைத்து, பிரான்ஸ் இந்தியாவுக்கு ராணுவ ரீதியில் ஆதரவாக நிற்கும் எனக் கூறலாம்.
இஸ்ரேல்
இந்தியாவும் இஸ்ரேலும் வலிமையான உறவைக் கொண்டுள்ளன. இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆயுத விற்பனையாளராக திகழ்கிறது இஸ்ரேல். குறிப்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துவருகின்றது.
வரலாற்று ரீதியாக இந்தியாவின் பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இஸ்ரேல் உதவியிருக்கிறது. இரண்டு நாடுகளும் இஸ்லாமிய தீவிரவாததுடன் போரிடுவதில் ஒன்றிணைகின்றன. இந்த காரணங்களால் இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கக்கூடும்.

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா
இந்த இரு நாடுகளும் QUAD உறுப்பினர்களாக இருப்பதனால் இந்தியாவுக்கு ராஜாந்திர உதவுகளை செய்ய முன்வரலாம்.
அத்துடன் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கையாக பொருளாதார உதவிகள் மற்றும் ராஜாந்திர உதவிகளைச் செய்ய முன்வரலாம்.
UAE
யுனைடட் அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் இந்தியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க உறுதிபூண்டுள்ளன.
பாகிஸ்தானுடன் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக யு.ஏ.இ தனது மேற்கு கூட்டாளிகளுடனேயே நெருக்கம் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுடன் நட்புறவு கொண்டுள்ள சீனா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் எதிர்க்கும் I2U2 குழுவில் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேலுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் ஏற்பட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் சௌதி அரேபியாவும் கூட இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கலாம்.
பாகிஸ்தான் ஆதரவு நாடுகள்
சீனா
பாகிஸ்தானுக்கு ராஜாந்திர ரீதியிலும் இராணுவ ரீதியாகவும் பெரிய கூட்டணி நாடு சீனா.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய கூட்டாளி நாடாக இருப்பதனால் இந்தியாவை பிராந்திய எதிரியாகப் பார்க்கிறது சீனா. அதுமட்டுமல்லாமல் இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னைகளும் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய துணை நிற்பதாக சீனா தெரிவித்தது. ஐ.நா நடுநிலையான விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது.
இந்தியா உடனான பொருளாதார உறவை பணயம் வைக்க சீனா தயங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் விதித்துள்ள வரிகளால் பொருளாதார சரிவை சந்திக்கும் சீனா, இந்தியாவுடன் நேரடி ராணுவ மோதலில் ஈடுபடாது என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் ஆயுதங்கள், பொருளாதார உதவிகள் வழங்கி சீனாவின் மத்திய ஆசியா, மத்திய கிழக்குக்கான வாசலாக திகழும் பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

துருக்கி
சமீப ஆண்டுகளில் துருக்கியும் பாகிஸ்தானும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியிருக்கின்றன. கலாச்சார ரீதியாகவும் மற்றும் வரலாற்று ரீதியாகவும் இரண்டுநாடுகளுக்கும் உள்ள பிணைப்பு நாம் அறிந்ததே.
சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கும் நாடாக துருக்கி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது துருக்கி. ஆர்டிகள் 370 ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதலை துருக்கி கண்டித்திருந்தாலும், அதனைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாணக்கூடிய உள்நாட்டு பிரச்னையாகவே அணுகியது. பாகிஸ்தான் தலையீடு பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை.
மத்திய கிழக்கில் இந்தியாவின் நண்பர்கள், துருக்கியின் எதிரிகளாக இருப்பதும், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மற்றொரு காரணமாக இருக்கும். போர் ஏற்பட்டால் துருக்கி இராணுவம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படவே வாய்ப்பு அதிகம் என எண்ணப்படுகிறது.
ஈரான்
2020ம் ஆண்டு முதல் இந்தியா - ஈரான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மத ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் ஈரானின் ஆதரவு பாகிஸ்தானுக்கு உள்ளது.
துருக்கியைப் போலவே இந்தியாவின் மத்திய கிழக்கு நட்பு நாடுகள் ஈரானின் எதிரகளாக உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்திருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளும், ஏற்கெனவே இஸ்ரேல் - காசா போரில் ஈரான் கவனம் செலுத்தி வருவதும் பாகிஸ்தான் விஷயத்தில் ஈரான் கவனம் செலுத்துவதைக் குறைக்கும் காரணிகளாக உள்ளன.
இதனால் ஈரான் ராணுவம் நேரடியாக இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே. ஆனால் பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக ராஜாந்திர ஆதரவை வழங்கும்.

அஜர்பைஜான்
வரலாற்று ரீதியாக துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் வலிமையான பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது அஜர்பைஜான்.
Nagorno-Karabakh போரில் இந்த இரு நாடுகளின் ஆதரவையே அஜர்பைஜான் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் இந்தியா அர்மேனியாவுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அஜர்பைஜானும் பாகிஸ்தானும் ஆயுதங்களைப் பரிமாறிக்கொள்ளும் நாடுகள்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அஜர்பைஜான் சீனா மற்றும் துருக்கியுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எனினும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அஜர்பைஜான் மோசமான நிலையில் இருப்பதனால் பெரிய அளவிலான உதவுகளை பாகிஸ்தானுக்கு செய்ய முடியாது எனக் கூறப்படுகிறது.
இவற்றுடன் கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் ராஜாந்திர ரீதியில் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வந்த மலேசியா சமீபத்தில் இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளைக் கொண்டிருப்பதனால் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்காது என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
எனினும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் கோரும் சுதந்திர விசாரணை அழைப்புக்கு மலேசியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தனம் செய்யவும் தயாராக இருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது.
வங்காள தேசம், மாலத்தீவு போன்ற வளர்ந்துவரும் இஸ்லாமிய நாடுகள் நடுநிலைமைப் பேணுகின்றன. இவை பேச்சளவில் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க முடியும்.
பாகிஸ்தானுடன் வடகொரியா அணு ஆயுத மற்றும் ஏவுகனை பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. மேலும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறது. ஆனாலும், அமெரிக்கா - சீனா இடையிலான சிக்கலில் கவனம் செலுத்தி வருவதால் வடகொரியா இந்தியா - பாகிஸ்தான் போரில் கவனம் செலுத்த வாய்ப்புகள் மிகக் குறைவே!
இந்தியா பெரும் வல்லரசுக் கூட்டாளிகளைக் கொண்டிருப்பது கண்கூடு. எனினும் எந்தெந்த நாடுகள் எந்தெந்த அளவில் உதவ முன்வருவர் என்பதை முன்னரே கணிக்க இயலாது.
எப்படியானாலும், போர் என்று வந்தால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள்தாம்.