IPL Playoffs : 'ஒரே நாளில் 3 அணிகள் ப்ளே ஆப்ஸ் செல்ல வாய்ப்பு' - எப்படி தெரியுமா?
'பரபர ப்ளே ஆப்ஸ் ரேஸ்!'
ஐ.பி.எல் தொடர் க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது. இன்னும் 12 லீக் போட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், இன்னமும் ப்ளே ஆப்ஸூக்கு ஒரு அணி கூட தகுதிபெறவில்லை. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவிருவிருக்கிறது. அந்த இரண்டு போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இன்றே மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸூக்குத் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது. எப்படி?

'கொல்கத்தா அவுட்!'
பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று மழையால் ரத்தாகியிருந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால் கொல்கத்தா அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பெங்களூரு அணி நேற்றைய போட்டியை வென்று 2 புள்ளிகளை பெற்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றிருக்கும். ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் கொஞ்சம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

'இன்றைய இரண்டு போட்டிகள்!'
இன்று ராஜஸ்தான் vs பஞ்சாப், குஜராத் vs டெல்லி என இரண்டு ஆட்டங்கள் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இந்த இரண்டு ஆட்டங்களும் ரொம்பவே முக்கியமானவை. டெல்லி, பஞ்சாப் இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தோற்றாலும் பெங்களூரு அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றுவிடும்.

இரண்டு அணிகளுமே தோற்றால் குஜராத்தும் பெங்களூருவும் ப்ளே ஆப்ஸூக்கு சென்றுவிடும். பஞ்சாபும் குஜராத்தும் வென்றால் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் என மூன்று அணிகளும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றுவிடும். டெல்லியும் பஞ்சாபும் வெல்லும்பட்சத்தில் இன்றும் எந்த அணியும் ப்ளே ஆப்ஸூக்கு செல்லாது. ப்ளே ஆப்ஸ் ரேஸ் இன்னும் விறுவிறுப்பாகும்.