Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம், சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத்துறை (ஐபி) அதிகாரி மணீஷ் ரஞ்சனும் ஒருவர். பீகாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன் ஹைதராபாத்தில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர், தனது குடும்பத்தினருடன் விடுமுறைப் பயணத்தில் கஷ்மீர் சென்றிருந்தார். அப்போதுதான் இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ``ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இந்த அர்த்தமற்ற வன்முறைச் செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, ``இந்த கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் இந்திய மக்களின் மன உறுதியையும், மீள்தன்மையையும் அசைக்க முடியாது. சம்பந்தப்பட்ட குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
