மக்களால் மாற்றப்பட்ட முடிவு! டிரம்ப்பை விமர்சித்ததால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ட...
Kalaimamani Award: `கோடான கோடி நன்றிகள்' - கலைமாமணி விருது குறித்து நெகிழும் எஸ்.ஜே. சூர்யா
தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும்.
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா துறையிலிருந்து 2021-ம் ஆண்டுக்கு நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கும், 2022-ம் ஆண்டுக்கு நடிகர்கள் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கும், 2023-ம் ஆண்டுக்கு நடிகர்கள் மணி கண்டன், மரியம் ஜார்ஜ், நடன இயக்குநர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தடுத்து படப்பிடிப்பு என பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா தனக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர், ``கோடான கோடி நன்றி! என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
என் அன்பும் ஆருயிருமான என் ரசிகப் பெருமக்களுக்கும், இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.