ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
Kerala: 18 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த காங். எம்எல்ஏ உமா தாமஸ்... ஆபத்தான நிலையில் சிகிச்சை
கேரள மாநிலம் கொச்சி கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடிகை திவ்யா உண்ணி தலைமையில் 12,000 நடன மங்கையர் கலந்துகொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செறியான் மற்றும் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உமா தாமஸ் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
18 அடி உயரமுள்ள கேலரியில் இருந்து மேடைக்குச் செல்லும்போது திடீரென உமா தாமஸ் எம்.எல்.ஏ தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரது உடல் முழுவதும் ரத்தம் கொட்டிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேடைக்குச் செல்லும் கேலரி பகுதியில் சுமார் 2 அடி அகலம் மட்டுமே இருந்துள்ளது. பக்கவாட்டில் பலமான தடுப்பு எதுவும் அமைக்கப்படாமல் கம்பிகள் மூலம் நாடா இணைக்கப்பட்டுள்ளது. உமா தாமஸ் மேடைக்குச் செல்லும்போது கார்பெட்டில் கால் இடறியதால் நாடாவை பிடித்ததால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழ் பகுதியில் காங்கிரீட் தளத்தில் விழுந்துள்ளார். நாடாவை இணைக்கும் கம்பியும் அவர்மீது குத்தியுள்ளது.
பாலாரிவட்டம் ரினை மெடிசிட்டியில் அனுமதிக்கப்பட்ட உமாதாஸுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மயக்க நிலையிலேயே உள்ளதாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகுதான் சிகிச்சையின் நிலை குறித்து கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைகீழாக விழுந்ததால் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சுவாச குழாயில் ரத்தம் கட்டிய நிலையில் உள்ளதாகவும். முதுகெலும்பு, முகம், இடுப்பு எலும்புகள் உடைந்துள்ளதாகவும். கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சி ஏற்பாட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் எதாவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உமா தாமஸின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலையில் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா தாமஸின் கணவர் தாமஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் மரணமடைந்தார். அப்போது நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் உமா தாமஸ் எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.