LGBTQIA++: ``தன்பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன'' -உச்ச நீதிமன்ற நீதிபதி
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என LGBTQIA++ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தன்பாலின உறவு குற்றமல்ல என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தன்பாலின திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அரசியல் சாசன அமர்வு கடந்த 2023-ம் ஆண்டு, ``தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றத்தால் முடியாது. இதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். அதேநேரம், தன் பாலின ஈா்ப்பாளா்களுக்கு சம உரிமை அளித்து, சமூகத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என 3 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், பி.வி.நாகரத்னா, பி.எஸ்.நரசிம்மா, தீபங்கா் தத்தா ஆகியோா் கொண்ட அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ``தன்பாலின திருமண விவகாரத்தில் வெளியிடப்பட்ட 2 தீா்ப்புகளும் சட்டத்துக்கு உள்பட்டவை. அவற்றில் எந்தத் தவறும் இல்லை. தீா்ப்புகளில் தணிக்கை செய்யவோ, மறு ஆய்வு செய்யவோ எதுவுமில்லை என்பதால் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தனா்.
தீர்ப்பின் போது பேசிய நீதிபதி கவுல், ``பாலியல் செயல்பாடுகளுக்கு மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்த்திக்கான உறவுகளாகவும் ஒரே பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதியின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்றம் சமூக ஒழுக்கத்தால் அல்ல, அரசியலமைப்பு ஒழுக்கத்தால் வழிநடத்தப்படுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.