Asia Cup : India Vs Pakistan போட்டியில் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணி...
Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி
நாயகியை மையப்படுத்திய படம் இதுவரை இப்படியொரு வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்ததில்லையே என திரையுலகை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது ‘லோகா’ (Lokah Chapter 1: Chandra).
படத்தில் நீலியாக நாயகி கல்யாணி பிரிதர்ஷன் மிரட்டியிருந்தாலும், அவரது சிறுவயது ’நீலி’ கேரக்டரில் ஆக்ரோஷ சூறாவளியாய் நடுநடுங்க வைத்தவர், சிறுமி துர்கா வினோத்.
இதயத்தில் இழப்பின் பெருவலி, தீப்பிழம்பு கண்கள், சிங்கமாய் கர்ஜித்து சீறிப்பாயும் பெருங்கோபம் என நடிப்பிலும் ரெளத்திர தாண்டவம் ஆடிய துர்கா வினோத்திடம் சினிமா ஆர்வம் எப்படி வந்தது? இவ்ளோ சின்ன வயசிலேயே பிரமாண்ட சண்டைக்காட்சிகளில் நடிச்சிருக்கீங்களே எப்படி? என வாழ்த்துகளுடன் பேசினேன்...
“நான், சினிமாவுல நடிக்க வந்ததுக்கு என் அப்பாதான் காரணம். எங்கப்பா ஃபைட் மாஸ்டரா இருக்கார். ‘ராவணன்’ படத்துல விக்ரம் சாருக்கும் அப்பாதான் டூப் போட்டார். ‘ஜெய ஜெய ஜெயஹே’ படத்துக்கெல்லாம் அப்பாதான் ஃபைட் மாஸ்டர்.
இப்போ, ‘இந்தியன் 3’ படம், நிவின் பாலியோட புது வெப் சீரிஸுக்கும் அப்பா ஃபைட் மாஸ்டரா ஒர்க் பண்றார். எனக்கும் அப்பாக்கூட ஷூட்டிங் எல்லாம் போயி சினிமா மேல இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு.
என்னோட ஆர்வத்தைப் பார்த்து ‘பத்ரநாரி’ங்குற ஷார்ட் ஃபிலிமை அப்பாவே இயக்கி நடிக்க வெச்சார். அந்த ஷார்ட் ஃபிலிம்க்கு இன்டர்நேஷனல் லெவலில் 14 விருதுகள் கிடைத்தது.
அதுக்கப்புறம், இன்னொரு படமும் பண்ணியிருக்கேன். சினிமான்னு பார்த்தா, ‘லோகா’ தான் முதல் படம். ஆனா, முதல் படத்துல நடிச்ச மாதிரியே தெரியலையேன்னு எல்லோரும் பாராட்டுறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

'லோகா’ படத்துல என்னோட கேரக்டருக்கு நிறைய ஃபைட் சீன்ஸ் இருக்கும். அதனால, இயக்குநர் டொமினிக் அருண் சார், நிறைய ஆடிஷன் வெச்சிருக்கார்.
சிலருக்கு ஆக்டிங் நல்லா வந்தா ஃபைட்டிங் வரல, ஃபைட்டிங் நல்லா வந்தா ஆக்டிங் வராம இருந்திருக்கு. நான் மூனு வயசிலேர்ந்து களரி கத்துக்கிட்டு வர்றேன். ஃபைட் நல்லா பண்ணுவேன்.
என்னோட வீடியோவை அப்பாவோட ஃப்ரெண்ட், டொமினிக் சார்க்கிட்ட காண்பிச்சப்போ, மிரண்டு போய் பார்த்து உடனே ஓகே சொல்லிருக்கார். ‘ஃபைட் சீனெல்லாம் ரொம்ப டேஞ்சரா இருக்கும்.உன்னால நடிக்க முடியுமா’ன்னு கேட்டார். எனக்கு ஃபைட் சீன் தான் பிடிக்கும், நடிப்பேன்னு சொன்னேன். ஃபைட் சீனுக்கு ஏற்றமாதிரி எமோஷனும் ரிவெஞ்சும் வேணும்னு நிறைய பயிற்சிகள் கொடுத்தாங்க.
என்னோட அப்பா, ஃபைட் மாஸ்டரா இருக்கிறதால அவரும் எனக்கு எந்தெந்த சீனுக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கணும்னு சொல்லிக்கொடுத்தார்.

ஜாக்கிச்சான் ஃபைட் சீனெல்லாம் போட்டு காட்டி, அப்பா நிறைய ட்ரிக்ஸ் கற்றுக் கொடுத்தார். அது, எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. நான், ’லோகா’ படத்துல, என்னோட கேரக்டரை ஒரு கேம் மாதிரி எஞ்சாய் பண்ணி நடிச்சேன்.
படத்துல, நாயைவிட வேகமா நான் ஓடுற மாதிரி ஒரு சீன் வரும். அது ரொம்ப பவர்ஃபுல்லான நாய். அதை, பீட் பண்ணி ஓடினது ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது.
ஜம்பிங் சீன்ல நான் கீழ விழுந்து முட்டியில அடிபட்டு கால் எல்லாம் வீங்கிடுச்சு. எங்கப்பா கொஞ்சம் பதறினப்போக்கூட, நான் பன்றேப்பான்னு மீண்டும் நடிச்சேன். அதெல்லாம் மறக்கவே முடியாது.
இயக்குநர் டொமினிக் சாரை, டாம்ன்னு தான் செல்லமா கூப்பிடுவேன். அவர் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணி நடிக்க வெச்சார்.
ரொம்ப பிர்லியன்ட்டான டைரக்டர் அங்கிள். அதேமாதிரி, கல்யாணி பிரியதர்ஷன் மேடத்தோட சின்ன வயசு கேரக்டர்ங்கிறதால எனக்கும் அவங்களுக்கும் ஒண்ணா சீன் கிடையாது.
ஷூட்டிங்குல லாஸ்ட் டேல என்னைப் பார்த்துட்டு ‘உன்னோட போர்ஷன்லாம் நான் பார்த்தேன். பிரமாதமா சூப்பரா பண்ணியிருக்க. நீ நல்லா வரணும்’னு பாராட்டினாங்க. தியேட்டர் விசிட் அப்போ, கல்யாணி பிரியதர்ஷன் மேடம்கூடதான் ஃபுல்லா இருந்தேன்.
படம் ரிலீஸுக்கப்புறம், துல்கர் சல்மான் சார் எனக்கு பெரிய மெசேஜ் பண்ணினார். ‘பான் இந்தியா லெவலில் ரீச் ஆகியிருக்க. இந்தியா முழுக்க உனக்கு ஃபேன்ஸ் உருவாகிட்டாங்க. அந்த ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன்’ அப்படின்னு அவர் பாராட்டினது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அதேமாதிரி அன்னா பென் மேடம், தர்ஷனா மேடம், விஷ்ணு உன்னிக்கிருஷ்ணன் சார்லாம் ரொம்ப நல்லா பண்ணியிருக்கம்மான்னு பாராட்டினாங்க.
முக்கியமா என் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் எனக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்து பாராட்டினாங்க” என உற்சாக மகிழ்ச்சியோடு பேசிய துர்காவிடம் “நடிப்புல பிரிச்சு மேஞ்சிட்டீங்க. படிப்புல எப்படி? பிடித்த இயக்குநர் யார்? ஃப்யூச்சர் ப்ளான் என்ன? “ என கேட்டோம்.
“என்னோட சொந்த ஊர் கேரளா. நான், ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என்னோட அண்ணன் வைஷ்ணவ் +1 படிக்கிறான். அம்மா பத்ரா.
நானும் என்னோட அண்ணனும் மூணு வயசிலேர்ந்து களறி கத்துக்கிட்டிருக்கோம். ’பாகுபலி 2’ ஆடியோ லாஞ்ச்ல ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் எல்லாம் பண்ணினேன்.
எனக்கு மஞ்சு வாரியர் மேடம், மம்முட்டி சார், மோகன்லால் சார் ரொம்ப பிடிக்கும். தமிழ்ல நயன் தாரா மேடம், சூர்யா சார், தனுஷ் சார், விக்ரம் சாரையெல்லாம் ரொம்ப பிடிக்கும். எனக்கு களறி கத்துக்கிட்டதால ஃபைட் சீன், கோஸ்ட் சீன்ல நடிக்கிறதுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. அந்தமாதிரி வாய்ப்புகள் வந்தாலும் நடிப்பேன்.

மற்றபடி, சினிமாவால, என் படிப்பு பாதிக்கிறதே இல்ல. க்ளாஸ்ல நான் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடன்ட். அதை, நான் எப்பவுமே கடை பிடிப்பேன். என்னோட ஆம்பிஷன் ஆயுர்வேத டாக்டர் ஆகணும்ங்கிறதுதுதான்.
என்னோட தாத்தா, பாட்டின்னு எங்க குடும்பமே வழி வழியா ஆயுர்வேத மருத்துவம் பார்த்துக்கிட்டு வர்றாங்க. அதனால, நானும் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கணும்னு ஆசைப்படுறேன். மற்றபடி, சினிமா வாய்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்.
’லோகா’ படத்தால தமிழ், கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துக்கிட்டே இருக்கு. இதுக்கெல்லாம், இயக்குநர் டொமினிக் சார், துல்கர் சல்மான் சார், அப்பா -அம்மா, அப்புறம் உங்க எல்லாருக்கும் என்னோட நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்” என்கிறார், புன்னகையோடு.
வாழ்த்துகள் துர்கா!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...