நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கிய சீர்திருத்தங்கள்!
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) தனது 92 வயதில் மரணமடைந்துள்ளார். 1991 முதல் அரசியலில் ஈடுபட்ட மன்மோகன் சிங் கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.
இந்தியாவின் 13-வது பிரதமராகச் செயல்பட்டவர் மன்மோகன் சிங். 1991ம் ஆண்டு முதல் 1996 வரை மத்திய நிதியமைச்சராக செயல்பட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் மன்மோகன் சிங் மிக முக்கிய பொருளாதார நிபுணராக அறியப்பட்டவர். உலக வங்கி, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
2009-ம் ஆண்டு பிரதமராக தனது முதல் பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்த மன்மோகன் சிங், பிபிசி ஊடகத்துக்கு அளித்த போட்டி, "தற்போதைய ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் என்னை இகழலாம்... வரலாறு என் மீது கனிவுடன் இருக்கும்" என்று கூறினார். அவரது அரசியல் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது அவரது கூற்று எத்தனை உண்மை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
2004 - முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்த காலம்தொட்டே நாட்டின் வளர்சிக்காக பல முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட 4 முக்கிய முடிவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
பொருளாதார தாராளமயமாக்கல் (1991)
மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் அவர் முன் பெரும் சவால் காத்திருந்தது.
இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அச்சம் எழுந்த காலத்தில், பொருளாதார தாராளமயமாக்கலை அமல்படுத்தினார்.
நேரு காலத்தில் இருந்த சோசியலிச பொருளாதாரத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றைத் தளர்த்தி, வெளிநாடு வர்த்தக தடைகளை நீக்குதல், லைசென்ஸ் ராஜ் அமைப்பை அகற்றுதல், முக்கிய துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தல் போன்ற மாற்றங்களைப் புகுத்தினார்.
அவரது உலகமயமாக்கல் நடவடிக்கையால் இந்தியா வேகமாக வளரத்தொடங்கியது. பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் சரியான நேரத்தில் இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தினார் என்றே கூற வேண்டும். இந்த மாற்றங்கள் இந்திய வரலாற்றில் என்றேன்றும் அவரை நிலைத்திருக்கச் செய்யும்.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA) (2005)
நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என மன்மோகன் சிங்கை குறிப்பிட அவர் பிரதமராக நிகழ்த்திய சாதனைகள் முக்கிய காரணம். 1991 வரை தீவிர அரசியலில் ஈடுபடாத மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெயர் பெற்றார்.
பணிவானவராகவும் அறிவார்ந்தவராகவும் பார்க்கப்பட்ட மன்மோகன் சிங் தனது ஆட்சியில் பொருளாதாரக் கொள்கைகள், வெளிநாடுகளுடனான உறவுகள், சமூக நலன் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பிலும் கவனம் செலுத்தினார்.
அதனடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம். இதுவே பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என மறுபெயரிடப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம்.
கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
கிராமப்புற வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை என இரண்டு பிரச்னைகளின் தீவிரமும் இந்த திட்டத்தினால் தணிந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005)
மன்மோகன் சிங் அமல்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நேரடியாக மக்களுக்கு அரசின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் உரிமையை இந்தச் சட்டம் வழங்கியது.
இது இந்தியக் குடிமக்களுக்கு அரசு ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களைக் கோரும் அதிகாரத்தை வழங்கியது.
இதனால் அரசின் வெளிப்படைத்தன்மை அதிகரித்ததுடன் ஒவ்வொரு பிரச்னைக்கும் பொறுப்பேற்கவும் அரசமைப்புகள் தயாராகின. இது மன்மோகன் சிங் காலத்தில் பெரும் பிரச்னையாகப் பேசப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது.
இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம்
மன்மோகன் சிங் காலத்தில் வெளியுறவுத்துறை செய்த மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுவது இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் அல்லது 123 ஒப்பந்தம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், இரு நாடுகளுக்குமிடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை எளிமையாக்கியது.
இந்தியா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத நாடு என்பதனால், சர்வதேச நாடுகளுடன் அணுசக்தி வர்த்தகத்தின் ஈடுபடுவது சவாலானதாக இருந்தது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியா சிவில் பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பெற முடிந்தது.
அதே வேளையில் இந்தியா ராணுவ ரீதியிலான அணுசக்தி பயன்பாடு குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கவும் முடிந்தது.