Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை - பின்னணி என்ன?
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்திய அரசின் சண்டை இன்று, நேற்று தொடங்கியது அல்ல. 1967ம் ஆண்டு நக்சல்பாரி இயக்கம் தோன்றியது முதலே இந்த ரத்த சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது.
கடந்த தசாப்தங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து 20 மாவோயிஸ்டுகள் கொலை, முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் கொலை, மாவோயிஸ்ட் பெண் உறுப்பினர்கள் நடுநிலைப்படுத்தப்பட்டனர் போன்ற செய்திகள் வருவது அதிகரித்துள்ளது.
2025ம் ஆண்டில் மட்டுமே 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சத்திஸ்கரில் மட்டும் கொல்லப்பட்ட 195 பேரில் 42% அதாவது 82 பேர் பெண்கள். நாடுமுழுவதும் பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்படுவது அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகள் என்பவர்கள் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவரான மாவோவின் கருத்துக்களைப் பின்பற்றி, ஆயுத போராட்டங்கள் மூலம் இந்திய அரசதிகாரத்தை அடைய முயற்சிக்கும் ஓர் தடை செய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள்.
சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகிய மூன்று ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இணைந்து 2004ம் ஆண்டு உருவானதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மவோயிஸ்ட்). இது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கானா), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருந்தனர். மாவோயிஸ்டுகள் தாக்கம் இருக்கும் பகுதிகளை சிவப்பு தாள்வாரப் பகுதி - 'ரெட் காரிடார்' என அழைக்கின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் ரெட் காரிடார் பெருமளவில் சுருக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டுமே நக்சலைட்டுகள்/மாவோயிஸ்டுகள் தாக்கம் உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு 200 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டது. இப்போது வெறும் 18 மாவட்டங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கரில் மட்டுமே 7 மாவட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் நக்சல்களுக்கு எதிரான போரின் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக இந்திய அரசு தெரிவிக்கிறது. மார்ச் 2026க்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மேலும் அவர், மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சரணடைந்து மைய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய துணை கண்டத்தின் அடர்ந்த காடுகளுக்குள் அரசின் தோட்டாக்களுக்கு இரையாகும் இந்த மாவோயிஸ்டுகள் யார்? மாவோவின் வழியில் ஆயுத கிளர்ச்சியை நடத்தி அரசை தூக்கி எரியும் கனவுக்காக இவர்கள் உயிரிகளை பலிகொடுக்கிறார்களா? இவர்களது உண்மையான போராட்டம் என்ன? சத்தீஸ்கர் காடுகளுக்குள் நடப்பது என்ன?
இன்றைய மாவோயிஸ்டுகள் யார்?
இன்றைய மாவோயிஸ்ட் மத்திய குழுவில் 43 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதில் 15 பேர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் ஆயுத பிரிவு 'மக்கள் விடுதலை கெரில்லா இராணுவம்' (PLGA). இதில் 2017ம் ஆண்டு தரவுகளின் படி 8000 - 10,000 உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் ஒட்டுமொத்தமாக 25,000 ஆதரவாளர்கள் வரை இருக்கலாம் என்றும் அல்ஜசீரா தளம் தெரிவிக்கிறது. இப்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கலாம்.
இவர்களிடம் வெடி குண்டுகள், ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் மற்றும் நவீன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியிலாக புறக்கணிக்கப்பட்ட, குரலற்ற, சமூக ரீதியாகவும் காவல்துறையினராலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகக் கூடிய பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் காடுகள் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்துள்ளது.
நிலக்கரி, பாக்சைட் மற்றும் இரும்புத் தாது போன்ற வளங்களை குடைந்தெடுக்க சுரங்கம் அமைக்க வரும் பெருநிறுவனங்களை எதிர்த்து பழங்குடி மக்களின் நில உரிமைக்காக போராடி வருகின்றனர்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருக்கும் வளமிக்க நிலம் நிறுவனங்களின் கண்களை உறுத்தும்போது, நிலமற்ற விவசாயிகளான, கொடும் ஏழ்மையில் வாடும், கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள் கூட இல்லாமல் வாழும் பழங்குடி மக்கள் அரசின் கண்களுக்குத் தென்படுவதில்லை.
'எரியும் காடு: பஸ்தரில் இந்தியாவின் போர்' என்ற புத்தகத்தை எழுதிய நந்தினி சுந்தர், "மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் வனங்களைப் பாதுகாக்கவும், நிலத்தை மறுப்பகிர்வு செய்யவும் உதவுவதால் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்." எனக் குறிப்பிடுகிறார்.
எந்த வித ஆதரவும் இல்லாமல் நிலத்தில் இருந்து துரத்துப்படும் அபாயத்தில் இருப்பவர்கள், பெரு நிறுவனங்களையும் காவல்துறையையும் எதிர்த்து சண்டையிட திராணியற்றவர்கள், உலகிலிருந்து துண்டிக்கபட்டு தங்கள் தரப்பை கேட்க காதுலகளற்றதால் குரலற்றுப்போன பழங்குடிகள்தான் நக்சல் அமைப்புகளின் பெரும் தொகை தொண்டர்களாக இருக்கின்றனர்.
அதே நேரத்தில் எல்லா பழங்குடிகளும் நக்சல் ஆதரவாளர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் நக்சல்களுக்கும் அரசுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
நக்சல்களின் கோட்டையாக உருவாகிவிட்ட ஒரு காட்டைச் சுற்றியிருக்கும் கிராமத்தினர் நக்சல்களா அல்லது அரசின் படைகளா என்ற ஒரு தரப்பை தேர்ந்தெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
இரண்டு தரப்புமே வன்முறை நிறைந்தது. பழங்குடி மக்கள் மீதான காவல்துறையின் ஒடுக்குமுறைகள் எல்லையற்றது என்பதை நாம் வாச்சாத்தி முதல் பல்வேறு உதாரணங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் பயத்தினால் மட்டுமே மக்கள் முடிவுகளை மேற்கொள்வதில்லை.
ஆப்பரேஷன் காகர் - செழிக்கும் படுகொலைகள்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் "நக்சலிசம் மிகப் பெரிய உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்றார். 2009-10 காலத்தில் ஆப்பரேஷன் கிரீன் ஹட் என்ற பெயரில் மத்திய ரிசர்வ் காவல்படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், இந்தோ-திபெத்தியன் எல்லை படையினர், சாஸ்திர சீமா பால் உள்ளிட்ட ஆயுதப்படைகளைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை நக்சல்களுக்கு எதிராக பணியமர்த்தினார்.
அதன் தொடர்ச்சியே இன்றைய ஆபரேஷன் காகர் வரையிலான இராணுவ நடவடிக்கைகள்.
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் மாவோயிசத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் முயற்சியாக ஆப்ரேஷன் காகர் நடவடிக்கைகளைத் தொடங்கியது இந்திய அரசு.
மாவோயிஸ்டுகளை இல்லாமல் ஆக்க முடிவு செய்யப்பட்ட பிறகு, சத்தீஸ்கரின் காடுகளிள்தான் முதல் குறி. 2000களின் தொடக்கத்தில் ஆந்திரா இருந்ததுபோல இன்றைய நக்சல்களின் இருதயப்பகுதியாக சத்தீஸ்கர் உள்ளது.
இங்கு 60,000 பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டனர். ட்ரோன்கள், நவீன ஜி.பி.எஸ் மற்றும் பல தொழில்நுட்ப உபகரணங்களுடன் தேடுதல் தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக 2024 தசாப்த காலமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிரான படுகொலைகள் அதிகம் நடந்த ஆண்டாக மாறியது. மாவோயிஸ்ட்கள் பெயரால் 344 பேர் கொலை செய்யப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாத போர்டல் கூறுகிறது.

அதைவிட இந்த ஆண்டின் முதல் பாதி கொடூரமானதாக இருந்திருக்கிறது என்பதை முன்னரே பார்த்தோம். கடந்த மே 21ம் தேதி மாவோயிஸ்ட் கட்சியின் முக்கியத் புள்ளியான பொதுச்செயலாளர் நம்பலா கேசவராவ் கொல்லப்பட்டார்.
இவரை ககன்னா, பி.ஆர்.டாடா மற்றும் பசவராஜ் போன்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவருடன் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை "மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு பெரும் இழப்பு" எனக் கொண்டாடினார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
அமித் ஷா மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியதிலிருந்து500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் மோதல்களில் ஏற்பட்ட கொலைகளே (என்கவுண்டர்) என்கிறது பாதுகாப்பு படைகள். இதனை மோதல்/துப்பாக்கிச் சூடு என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதுதவிர மாவோயிஸ்டுகள் கொல்லப்படுவதை 'ஆப்பரேஷன் - நடவடிக்கை' என்றும், 'நடுநிலைப்படுத்தப்பட்டனர் - Neutralised' என்றும் அழைக்கின்றனர். Neutralised போரில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் ஆகும். கொலை செய்யும் முனைப்புடன் துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை இது குறிக்கிறது.
ஆப்பரேஷன் காகரில் பல்வேறு கிளை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. பல்வேறு காடுகளில் பழங்குடிகள் வசிக்கும் கிராமங்களில் நடப்பவை "நக்சல் எதிர்ப்பு நடவைக்கைகள் அல்ல - கொலை களியாட்டம்" என விமர்சிக்கிறார்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.
கொல்லப்படுபவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள்தானா என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன மனித உரிமை அமைப்புகள். பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் எனக் கூறுபவை 'சட்டத்துக்கு புறம்பான கொலைகள்' என்கின்றனர்.
மாவோயிஸ்ட் இயக்கமும், எதிர்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் பாதுகாப்பு படையினர் பொது மக்களைக் கொலை செய்துவிட்டு அவர்களை மாவோயிஸ்டுகளாகக் காட்ட ஆயுதங்களை திணிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நியாயமற்ற வகையில் தடுப்புக்காவலில் வைப்பதாகவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
"பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் செய்வதற்கும், சித்தரவதை செய்வதற்கும், வன்கொடுமையில் ஈடுபடுவதற்கும் விலக்கு பெற்றுள்ளதை கொண்டாடுகின்றனர். இப்போது அவையெல்லாம் பெரிய அளவில் நடக்கிறது" என கார்டியன் தளத்தில் தெரிவித்துள்ளார் சத்தீஸ்கரைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் பேலா பாட்டியா.

இந்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), CPI (மார்க்சிஸ்ட்), CPI (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு வெளிப்படையாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆப்பரேஷன் காகர் பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நீண்டகாலம் பாதுகாப்புத் துறையினர் கஸ்டடியில் உள்ள மாவோயிஸ்டுகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உயிர்கள் மதிப்பற்று மாய்வது அதிகரிக்கவும் மாவோயிஸ்ட் கட்சி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தது. கொலைகளின் எண்ணிக்கை உயர உயர தீவிர முனைப்புடன் பேச்சுவார்த்தையை வற்புறுத்தினர்.
ஆனால் சத்தீஸ்கர் முதலமைச்சரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தடாலடியாக அறிவித்தனர். நிபந்தனையின்றி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுங்கள் என்றே வலியுறுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்படும் மாவோயிஸ்டுகளில் பத்தில் 7 பேர் சித்திரவதை செய்யப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர் என தி வயர் தளம் தெரிவிக்கிறது.
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் கூட கண்டறியப்படும் பட்சத்தில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் நக்சல்கள் விஷயத்தில் கைது செய்வதைவிட அழித்தொழித்தலுக்கே அரசு முன்னுரிமை அளிப்பது மனித உரிமை அமைப்புகளுக்குக் கவலையளிப்பதாக உள்ளது.

மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கம் (PUCL) என்ற அமைப்பு 2024 ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்றுவரை 11 போலி என்கவுன்டர்களில் அப்பாவி பழங்குடி மக்கள் கொல்லப்பட்டுள்ளதை உறுதியாகக் கண்டறிந்துள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி காவல்துறையினர் போர்ட்கா கிராமத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுதாகர் என்ற சுதீர், பாண்ட்ரு அத்ரா மற்றும் மன்னு பர்சா ஆகிய மூவரை கொன்றதாக தெரிவித்தனர். இது மோதலின் விளைவாக நடந்த என்கவுன்டர் எனக் கூறப்பட்டது.
ஆனால் மக்களின் கூற்று வேறொன்றாக இருக்கிறது. அல்ஜசீரா தளத்துக்கு பேட்டியளித்த மனேஷ் பர்சா (மன்னு பர்சாவின் சகோதரர்), "சுதாகர் ஒரு மாவோயிஸ்ட் என்பதும், அவர் கிராமத்தில் யாரையோ சந்திக்க வந்ததும் உண்மை. ஆனால் காவலர்கள் சுதாகர், என் சகோதரர், மற்ரொருவரையும் உயிருடனே அழைத்துச் சென்றனர். தொலைவாக கூட்டிச் சென்று கொலை செய்துவிட்டு, என்கவுன்டர் என பொய்யாகக் கூறுகின்றனர்" எனப் பேசியுள்ளார்.
பஸ்தர் பகுதியில் இதுபோன்ற கொலைகள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அங்கு 36000 பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கிராமவாசிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் 55 நபர்களுக்கு ஒரு காவலர். எந்த ஒரு நாட்டையும் விட இது அதிகம். பெண்களும் சிறார்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான வழக்குகளுக்கு சரியான நீதி விசாரணை நடப்பதில்லை. உள்ளூர் மாஜிஸ்திரேட் விசாரணை காவல்துறை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே நடைபெறுவதால் பழங்குடிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அதில் நம்பிக்கையில்லை.
2012, 13ம் ஆண்டுகளில் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் பெயரால் 10க்கும் மேற்பட்ட சிறார்களைக் கொலை செய்தனர். 2022ம் ஆண்டு வெளியான விசாரணை அறிக்கையில் கொல்லப்பட்ட சிறார்களும் அவர்கள் உடன் கொல்லப்பட்டவர்களும் நிரபராதிகள் என நிரூபணம் ஆனது. எனினும் இன்று வரை கொலை செய்த காவலர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்கிறது அல்ஜசீரா தளம்.
பொதுமக்களும் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்து கொல்லப்படுவதாக சண்டிகரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாவலரும், ஊடகவியலாளருமான மாலினி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மேலும் அவர் நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இல்லாத கிராமங்களைக் கூட பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து சரணடைய வைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கிறார். "மக்களுக்கு இரண்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன, சரணடைதல் அல்லது கொல்லப்படுதல்" என்கிறார் அவர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் மருத்துள்ளனர். மாவோயிஸ்டுகளே இதுபோன்ற தகவல்களைப் பரப்பி பாதுகாப்பு படையினர் நடவடிக்கைக்கு ஊறு விளைப்பதாகக் கூறுகின்றனர்.
கார்பரேட்டுகள் நடத்தும் போர்?
மத்திய இந்தியாவின் மலைப்பகுதிகளில் இருக்கும் கனிம வளங்கள் - அதனை எடுக்க கோடிகளில் செலவு செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் - தங்கள் நிலங்களைக் காத்துக்கொள்வதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் பழங்குடிகள் - மாவோயிஸ்டுகள் என்ற நோக்கிலும் இந்த விவகாரத்தைப் பார்க்கின்றனர்.
முக்கியமாக பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்படுவதும், மத்திய பாஜக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர மறுப்பதும் இன்றைய மோதல்களின் நோக்கம் அமைதியைப் ஏற்படுத்துவது அல்லாமல் கார்பரேட்டுகளுக்கு வசதி செய்துகொடுப்பதுதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடி செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இடதுசாரி கட்சிகளின் கடிதத்தில், "பழங்குடி மக்களின் உரிமைகள் முறைப்படுத்தப்பட்டு மீறப்படும் அதே வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் காடும் கனிம வளங்களும் கண்மூடித்தனமான பெருநிறுவான சுரண்டலுக்கு உட்படுகின்றன" என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது இந்திய நாட்டை ஆயுத வழிப் போராட்டங்கள் மூலம் கைப்பற்றத் துடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கான எதிரான சண்டை அல்ல என்றும், பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக தங்கள் நிலங்களை காத்துக்கொள்ள நினைக்கும் பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கான தாக்குதல் என்றும் ஒரு கோணத்தை வழங்குகிறார் பள்ளி ஆசிரியராக இருந்து பழங்குடிகள் அரசியல் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளராக மாறிய சோனி சோரி.

சத்தீஸ்கரில் திணிக்கப்படும் தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்தினால் கூட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பழங்குடி மக்கள் தலைமையிலான மூலவாசி பச்சாவ் மன்ச் (MBM) என்ற அமைப்பு வளர்ச்சியைத் தடுத்தது எனக் காரணம் காட்டி கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எனெர்ஜி மற்றும் சிமென்ட் தொழில்களில் 65,000 கோடி முதலீடு செய்யப்படும் என அறிவித்தது.
இதன் பெரும்பகுதி மின் உற்பத்தி நிறுவனங்களை விரிவுபடுத்த செலவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் அதானி நிறுவனம் புதிய சுரங்கங்களை அமைக்க மரங்களை வெட்டியபோது பெரும் எதிர்ப்புகளைப் பெற்றது.
பெருநிறுவனங்களின் முதலீட்டுக்குப் பிறகு நக்சல்கள்/ பழங்குடிகள் கொலை அதிகரிப்பது சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் அரசையும் பாதுகாப்புப் படையினரையும் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் குறி வைக்கப்படுகின்றனர். நக்சல் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டிற்கு பேட்டியளித்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹரகோபால், “மாவோயிஸ்ட் இயக்கத்தால் எழுந்துள்ள கேள்விகளுக்கு என்கவுன்ட்டர்கள் மூலம் பதிலளித்துவிட முடியாது. துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது அரசுக்கு வழக்கமாகிவிட்டால், மாவோயிஸ்ட் கட்சியை ‘ஒழித்துவிட்ட’ பிறகும் கூட நிறுத்த முடியாமல் போகக்கூடும். இதே படைபலம் பின்னர் எதிர்க்கட்சிகள் மீதும், அரசின் கருத்தில் மாறுபடுவோர் மீதும், குடிமைச் சமூகத்தின் மீதும் திருப்பிவிடப்படலாம்” என்று கூறினார். வரலாற்றில் இத்தகைய உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த கருத்து நாம் கவனம் கொள்ளவேண்டிய ஒன்று. முக்கியமாக ஏற்கெனவே சுரங்க நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்கள் மாவோயிஸ்டாக கருதப்படும் அபாயம் இருக்கையில்...

இந்திய அரசு, நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கும் வண்ணம் பழங்குடி மக்களின் நிலங்களைப் பறிக்கும் செயல்களில் ஈடுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் கவலை கொள்ளும் அனைவரின் கருத்தாக இருக்கிறது.
அரசு மாவோயிஸ்டுகளை அழித்தொழித்தாலும் பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் எழும் கோபத்தை சுட்டித் தள்ளிவிட முடியாது. அநீதி இருக்கும் வரை அதை எதிர்த்துக்கேட்கும் குரல்களும் இருக்கும். அது மாவோயிஸ்டாக இல்லாமல் இருக்கலாம்.
இப்போது இந்தியா முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் அனைவரையும் கொன்றழிப்பதுதான் திட்டமென்றால் அரசு அதனைக் கைவிட வேண்டும். சரணடைபவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்.
யுத்தத்தில் யாருடைய கை ஓங்கியிருக்கிறதோ அவரே போர் நிறுத்தத்தை முன்னெடுத்துப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அரசு அந்தவகையில் பேச்சுவார்த்தை மூலம் மாவோயிஸ்டுகளின் ஆயுதங்களைப் பெற வேண்டும். குற்றம்சாட்டப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.