அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
Nehru: `நேரு - எட்வினாவின் நட்பு?' - சர்ச்சையான கடிதம்... அதில் என்ன ரகசியம் இருக்கிறது?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்திய சுதந்திர இயக்க வரலாறு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு நேரு அருங்காட்சியகம் 1964-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, நேரு, ராஜகோபாலாச்சாரி, ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்டோரின் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நவீன இந்திய வரலாறு பற்றி கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள இந்த நூலகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நேரு அருங்காட்சியகம், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் எனப் பெயர்மாற்றப்பட்டது. இந்த நூலகத்தின் உறுப்பினரும், அகமதாபாத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியருமான ரிஸ்வான் காத்ரி, கடந்த 2008-ம் ஆண்டு 51 அட்டைப் பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட எட்வினா மவுன்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த், ஜெயபிரகாஷ் நாராயண், அருணா ஆசப் அலி, பாபு ஜக்கிவன் ராம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் நேரு பரிமாறிக்கொண்ட கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்கள் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, அந்தக் கடிதங்களை திரும்பப் பெறுவதில் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு எழுதிய கடிதங்களில் என்ன ரகசியம் இருக்கிறது? அவற்றை சோனியா காந்தி தனது தனிப்பட்ட உடைமையில் எதற்காக எடுத்துக்கொண்டார்? அந்தக் கடிதங்களில் என்ன இருக்கிறது என அறிய விரும்புகிறேன். நாடு சோனியா காந்தியிடம் பதில் கேட்கிறது" எனப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.
எட்வினா மவுண்ட்பேட்டனின் மகள் பமீலா ஹிக்ஸ் போன்ற மவுண்ட்பேட்டன் குடும்ப உறுப்பினர்களில் சிலர், நேரு - எட்வினா மவுண்ட் பேட்டனின் கடிதங்களைப் படித்திருக்கிறார்கள். இது குறித்து எட்வினாவின் மகள் பமீலா மவுண்ட்பேட்டன் தனது Daughter of Empire: Life as a Mountbatten-ல் புத்தகத்தில், ``1947-ம் ஆண்டு எனது கணவரும் இந்தியாவின் கடைசி வைஸ்ராயுமான லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனுடன் இந்தியாவில் நான் இருந்தபோது என் அம்மாவுக்கும், நேருவுக்கும் மத்தியில் ஆழமான, அறிவார்த்தமான நட்பு இருந்ததை அறிந்தேன். அவர்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொண்ட கடிதங்களி அவரும் என் அம்மாவும் ஒருவரையொருவர் எவ்வளவு ஆழமாக மதித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
என் அம்மா எட்வினா நேருவிடம் அவர் விரும்பிய அறிவார்ந்த தோழமை, உத்வேகம், சமத்துவம் போன்றவற்றைக் கண்டார். எனது தாயாருக்கோ அல்லது நேருவுக்கோ அவர்கள் உடல் ரீதியான தொடர்பில் ஈடுபடுமளவு அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்கள் இருவரும் அரிதாகவே சந்தித்துக் கொண்டார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஊழியர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். என் அம்மா இந்தியாவை விட்டுச் சென்றபோது நேருவுக்காக ஒரு மரகத மோதிரத்தைக் கொடுக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், நேரு அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதை அறிந்ததால், அந்த மோதிரத்தை இந்திரா காந்தியிடம் கொடுத்துச் சென்றார்.
என் அம்மாவுக்காக நேருவின் பிரியாவிடை உரையும் மிக சுவாரஸ்யமானது. அவரது உரையில், `நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு இருப்பவர்களுக்கு நீங்கள் ஆறுதலும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுப்பீர்கள். எனவே, இந்திய மக்கள் உங்களை நேசிப்பதும், உங்களைத் தங்களில் ஒருவராகப் பார்ப்பதும், உங்களின் பிரிவை நினைத்து வருத்தப்படுவதும் ஆச்சரியமாக இல்லை' எனக் கூறினார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.