NITI Aayog: 11-வது இடம்; தள்ளாடுகிறதா தமிழகம்? 'இது மத்திய அரசின் தவறு.!' - காரணம் சொல்லும் நிபுணர்
2023 நிதியாண்டிற்கான நிதி குறியீட்டு அறிக்கையை (Fiscal Health Index) வெளியிட்டுள்ளது நிதி ஆயோக். இந்த அறிக்கை மாநிலங்களின் செலவு திறன், வருமான திரட்டல், நிதி விவேகம், கடன் குறியீடு, கடன் நிலைத்தன்மை ஆகியவற்றை வைத்து கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தமிழ்நாடு 29.2 நிதி குறியீடு ஸ்கோர் பெற்று 11-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த அறிக்கை மொத்தமாக 18 மாநிலங்களை வைத்து கணக்கு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த நிதி குறியீட்டு அறிக்கையில் தெலுங்கானா 8-வது இடத்தையும், கர்நாடகா 10-வது இடத்தையும், கேரளா 15-வது இடத்தையும், ஆந்திர பிரதேசம் 17-வது இடத்தையும் பிடித்துள்ளது.
முதல் ஐந்து இடங்களை முறையே ஒடிசா, சத்தீஸ்கர், கோவா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளது.
அறிக்கையில் தமிழ்நாடு குறித்து குறிப்பிட்டிருப்பதாவது, "தமிழ்நாடு வருவாய் மற்றும் மூலதன செலவு வளர்ச்சியில் ஓரளவுக்கு வளர்ச்சியை எட்டியிருந்தாலும், நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை விட, அதிக அளவிலான நிதி பற்றாக்குறை மற்றும் கடன் அளவு உள்ளது. இதை சரிசெய்ய, தமிழ்நாடு அரசு வருமானத்தையும், முதலீடுகளையும் விரிவுப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
``நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழகம்: முதல் 10 இடங்களை பிடிக்க முடியவில்லை; வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள்!" என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், ``இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ஆம் ஆண்டிற்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16-ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருக்கிறது.
மதுவணிகத்தின் மூலமான வருவாயை நம்பியும், பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதை நம்பியும் நடத்தப்படும் திமுக ஆட்சியில் நிதிநிலை மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை.” என்றிருக்கிறார்.
மத்திய அரசின் பொறுப்பு!
இந்த அறிக்கைக் குறித்து பொருளாதார நிபுணர் க.ஜோதி சிவஞானத்திடம் பேசியப்போது, அவர் கூறியதாவது...
"நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுபாடு அல்லது விலைவாசி குறைப்பு போன்ற மேக்ரோ பொருளாதார நோக்கங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசின் பொறுப்பு. அதிக தனியார் முதலீடு, அரசு முதலீடு, குறைவான கடன் போன்றவற்றின் மூலம் தான் அவற்றை அடைய முடியும். அதே சமயம், கல்வி, சுகாதாரம் போன்றவை மாநில அரசின் பொறுப்பு என்பதால் அதற்கான திட்டங்கள் அவர்களால் வகுக்கபட வேண்டும்.
ஜி.டி.பி-யில்...
அப்படியிருக்கும்போது இந்த அறிக்கை மாநில அரசுகளை மதிப்பீடு செய்யாமல், மத்திய அரசை மதிப்பீடு செய்திருக்க வேண்டும். அது தான் சரியானது. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் படி, மத்திய மற்றும் மாநில அரசு கடன் அளவு ஜி.டி.பி-யில் 3 சதவிகிதத்திற்கு மேல் இருக்ககூடாது. இதன்படி, மாநில அரசுகளால் கடன் அளவு ஜி.டி.பியில் 3 சதவிகிதத்திற்கு மேல் கடன் வாங்க முடியாது. காரணம், அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கடன் வாங்க வேண்டுமானால் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். ஆனால், மத்திய அரசுக்கு இந்த மாதிரியான கடுமையான நடைமுறைகள் இல்லை. அதனால், தற்போது ஒன்றிய அரசுக்கு உள்ள கடனின் அளவு ஜி.டி.பியில் 4.9 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பேரிடரின் போது ஆன 9 சதவிகித கடனைப் படிப்படியாக குறைத்து தற்போது 4.9 சதவிகிதமாக வைத்துள்ளனர்.
அதிகம்...குறைவு...
மேலே கூறிய சட்டத்தின் படி, வருவாய் பற்றாக்குறை இருக்கவே கூடாது. ஆனால், மத்திய அரசுக்கு வருவாய் பற்றாக்குறை இருக்கிறது. அனைத்து வரிகளையும் பெற்றுக்கொண்டு, குறைந்த அளவு பங்கை மட்டும் மாநில அரசிற்கு வழங்கும் மத்திய அரசின் இந்த நிலைக்கு காரணம் அவர்களே. விலைவாசியையே கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மேலும் மேலும் அவர்கள் கடன் வாங்குவது தான் மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.
மத்திய அரசு பிரித்து கொடுக்கும் வரி சரியான மற்றும் சமமான அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்வதில்லை. ஒரு சில மாநிலங்களுக்கு அதிகமாகவும், ஒரு சில மாநிலங்களுக்கு மிகவும் குறைவாகவும் வரி பங்கீடு கொடுக்கப்படுகிறது. மாநில அரசுக்கு பெரிய அளவு வருமானம் கொடுத்துகொண்டிருந்த வரிகளும், ஜி.எஸ்.டி வரவிற்கு பிறகு ரத்தாகிவிட்டது.
'இது' இடம்பெறவில்லை
இந்த அறிக்கையில் மத்திய அரசால் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதி விவரங்கள் இடம்பெறவில்லை. இது மிக மிக முக்கியம். ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு வரி வருமானம் தடைப்பட்ட நிலையில், மாநில அரசு பெரும்பாலும் நம்பியிருப்பது ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை தான். அதை வைத்து தான் மாநில அரசுகள் திட்டங்களை வகுக்கும். இதுக்குறித்து அறிக்கையில் இடம்பெறாதது பெரிய மைனஸ்.
வடக்கிலுள்ள பல மாநிலங்கள் மத்திய அரசின் நிதியைதான் பாதிக்குமேல் செலவு செய்கின்றது. அதை கணக்கிலெடுக்காமல், மாநிலங்களின் நிதி திரட்டும் திறனை ஒப்பிடுவது சரியில்லை.
இதை வைத்து...
இந்த அறிக்கையில் மாநில அரசுகளின் செலவுகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் தற்போது கட்டமைப்புகளுக்காக செய்யப்படும் செலவுகள், எப்போதோ தென் மாநிலங்களில் செய்யப்பட்டு, அந்தக் கட்டமைப்பை எப்போதோ நாம் எட்டிவிட்டோம். அப்படி பார்த்தால், புதியதாக கட்டமைப்பு வசதிகளை செய்யும் வட மாநிலங்களின் செலவு திறன் அதிகமாகத் தான் இருக்கும். இதை வைத்து மாநிலங்களை மதிப்பீடு செய்ய முடியாது.
இதையெல்லாம் பார்க்கும்போது, மத்திய அரசின் நிதி மேலாண்மையினை கணக்கிலெடுக்காமல் மாநிலங்களை மட்டும் ஒப்பிட்டு அதில் ஒரு மாநில அரசை குறை சொல்ல முடியாது. மேக்ரோ பொருளாதார நோக்கங்களை அடைவதுதான் குறிக்கோள் என்றால் மத்திய அரசுடன் மாநிலங்களின் நிதி நிலைமையினை சமன்படுத்த வேண்டும். நிதி மேலாண்மையினை பொறுத்தவரை மத்திய அரசிடம் தான் பெரும் சிக்கல்கள் உள்ளன" என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs