``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
Pahalgam Attack: "துணிச்சலான வீரர் சையது" - உயிர்த் தியாகம் செய்த குதிரை ஓட்டிக்கு ஊரே கூடி அஞ்சலி
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. வாழ்க்கைத் துணையை, சகோதரரை, தந்தையை இழந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் காணொலிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியிருக்கின்றன.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது.
இந்தச் சோக சம்பவம் நடந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அப்பகுதியில் இருக்கும் மக்கள் உதவியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த சையது அடில் ஹுசைன் பரிதாபமாகத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு, மகிழ்ச்சியாகச் சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க, திடீரென துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்டது.
தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே அங்கிருந்த அனைவரும் பதறி அடித்துப் பாதுகாப்பான இடத்தை நோக்கித் தப்பி ஓடினோம்.
துப்பாக்கிச் சூடு நடக்கும் போது அங்குக் குதிரை சவாரி நடத்தி வந்த சையது அடில் ஹுசைன் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கத் தீவிரவாதிகளை நோக்கித் துணிச்சலுடன் தாக்க முயன்று, அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்.
ஆனால், அந்தத் தீவிரவாதிகள் ஆத்திரமடைந்து சையது அடில் ஹுசைனை சுட்டுக் கொன்றுவிட்டனர்" என்று கூறுகின்றனர்.

சையது அடில் ஹுசைனின் உடல் நேற்று அரசு மற்றும் அப்பகுதி மக்கள் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.
'துணிச்சலான வீரர் சையது அடில் ஹுசைன்' என்ற கோஷத்துடன் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி உணர்ச்சிப் பெருக்குடன் இறுதி அஞ்சலி செய்தனர்.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சையத் அடில் ஹுசைனி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, "சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் துணிச்சலான முயற்சியில் பயங்கரவாதிகளில் ஒருவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
Visited Pahalgam today to offer Fatiha for brave heart Syed Adil Hussain Shah, who was shot dead while trying to snatch a weapon from one of the terrorists in a courageous attempt to protect the tourists he had ferried on horseback from the parking area to Baisaran meadow. Met… pic.twitter.com/VrxR4gJ3tO
— Office of Chief Minister, J&K (@CM_JnK) April 23, 2025
சையத் அடில் மட்டுமே அவரது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுபவர். அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு அரசு துணை நிற்கும்.
அவரது அசாதாரண துணிச்சலும் தியாகமும் என்றென்றும் நினைவுக் கூறப்படும்" என்று பேசியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
