Painkili Review: `இதெல்லாம் ஜோக் கிடையாது ப்ரதர்!' - காமெடியால் சோதிக்கும் `ஆவேஷம்' கூட்டணி
தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கிக் கவனித்து வருகிறார் சுகு (சஜின் கோபு). குடும்பத்தினர், நண்பர்கள் எனத் தனது வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர், தன்னுடைய தொழிலுக்காக ஒரு பொருளை வாங்கி வருவதற்காகக் கோவைக்குச் செல்கிறார். அங்கு தன்னுடைய பைக்கைத் திருடிச் செல்லும் நபரிடமிருந்து பைக்கை மீட்கப் போராடும் சுகு, எதிர்பாராத வகையில் அவரைக் கொலை செய்து விடுகிறார். அங்கிருந்து தப்பி ஓடி கொலை வழக்கைச் சமாளிக்கத் தான் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனப் போலியாகச் சான்றிதழ்களைத் தயார் செய்கிறார்.

மற்றொரு பக்கம் குடும்பத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட வேண்டும் என மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறார் ஷீபா (அனஸ்வரா ராஜன்). `விடைகொடு சாமி விட்டுப் போகின்றேன்' என வீட்டைவிட்டு ஒவ்வொரு முறை தப்பிக்க முயற்சி செய்யும்போதெல்லாம் தந்தையிடம் மீண்டும் மீண்டும் சிக்கி வீடு திரும்புகிறார். இதையெல்லாம் தாண்டி அவருக்குத் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. இறுதி முயற்சியாக மீண்டும் குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஷீபாவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அந்தக் கொலைக்குப் பிறகு சுகுவின் வாழ்க்கை எப்படியான இன்னல்களைச் சந்திக்கிறது என்பதுதான் `பைங்கிளி' படத்தின் கதை.
கோபத்தை வெளிப்படுத்தும் இடம், காதலை எண்ணி உருகும் இடம், உண்மைகளை மறைப்பதற்காகப் போராடிச் சமாளிக்கும் இடம் என ஆல் ஏரியாவிலும் கில்லியாகப் புகுந்து விளையாடி மீண்டும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் சஜின் கோபு. தந்தையின் பிடியிலிருந்து தப்பிக்கப் பல குறும்புகளைச் செய்யும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வசீகரிக்கிறார்.

இருப்பினும், ஆங்காங்கே செயற்கையாகத் தெரியும் அந்த ஒட்டாத ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். இவர்களைத் தாண்டி நண்பர்களாக வரும் ரோஷன் ஷாநவாஸ், சந்து சலீம் குமார் என இருவரும் நகைச்சுவை களத்திற்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். சிறிய கேமியோ பாத்திரத்தில் களமிறங்கியிருக்கும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.
`ஆவேஷம்' இயக்குநர் ஜித்து மாதவன் எழுதிய கதையை நடிகர் ஶ்ரீஜித் பாபு இயக்குநராக அவதாரமெடுத்து இயக்கியிருக்கிறார். காமெடி, நண்பர்கள் கேங் என ஜித்து மாதவன் கதையின் ஆஸ்தான விஷயங்கள் அனைத்தும் இந்தப் படத்திலும் அட்டென்டென்ஸ் போட்டிருக்கிறது. ஆனால், அந்த விஷயங்கள் எதுவும் அதிரடியாக பெர்பார்ம் செய்யாதது படத்திற்கு முதல் பிரச்னையாகியிருக்கிறது. காமெடி... காமெடி... காமெடி எனக் காலாவதியான நகைச்சுவைகளைப் படம் முழுவதும் கோர்த்து சோதனை மேல் சோதனையாக்கி அயர்ச்சியை உண்டாக்குகிறார் இயக்குநர்.

ஒரு கட்டத்தில் ஓவர் டோசேஜாகும் இந்த காமெடியும் சலிப்பை ஏற்படுத்தி படத்திலிருந்து கவனத்தைச் சிதற வைக்கிறது. பரபர உணர்வைக் கொடுக்கும் காட்சிகளையும் இந்த காமெடிகள் காலி செய்துவிடுகின்றன. ஷீபாவின் எண்ணம், சுகுவின் வழக்கு என முதல் பாதியில் ஓங்கி நிற்கும் படத்தின் விஷயங்களெல்லாம் இரண்டாம் பாதியில் இருக்குமிடம் தெரியாமல் காற்றில் பறக்கவிட்டது மேஜர் மைனஸ். இப்படியான வலுவிழந்த எழுத்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைய முடியாமல் எமோஷனல் காட்சிகளையும் அந்நியமாக்கியிருக்கிறது.
பனி படர்ந்திருக்கும் பச்சை நிலங்களை அதன் தன்மை மாறாமல் படம் பிடித்து கண்களுக்கு இனிமையான விஷுவல்களைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் சேது. முக்கியமாக `ஹார்ட் அட்டாக்' பாடலைப் புதுமையான வடிவில் படம் பிடித்து புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நீண்.......டுக் கொண்டே போகும் களத்திற்குத் தொடர்பில்லாத காட்சிகளைக் கத்தரித்து தனது `கட்'களால் படத்தை இன்னும் `துறு துறு' தரத்திற்கு மெருகேற்றியிருக்கலாம். கொண்டாட்டப் பாடல்களெல்லாம் அடிப்பொலி ஜஸ்டீன் வர்கீஸ் சேட்டா! ஆனால், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்குத் தொடர்பில்லாத பின்னணி இசை காட்சிகளை வீக் ஆக்கியிருக்கிறது.
காலாவதியான ஃபார்முலாவைப் பின்பற்றியதால் இந்த `பைங்கிளி' வாடிப்போன கிளியாக நம்மை வசீகரிக்காமல் பறந்து செல்கிறது.